×

ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு பேச்சு ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அதிரடி கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்து வீடியோ பதிவு செய்த ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் எம்.ஆர்.ஜீயர் சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்த புகாரில், ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கடந்த 13ம் தேதி டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 8 நிமிடம் 3 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சனாதன தொடர்பு குறித்தும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் தன்னை குறித்து அவதூறாக பேசி உண்மைக்கு புறம்பாக கருத்துக்களை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதனால் எனது பெயருக்கும் புகழுக்கும் பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் வெளியிட்ட வீடியோ பதிவுகளை ஆய்வு செய்த போது, உண்மைக்கு புறம்பாக அவதூறாக பேசியது உறுதியானது.

அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் தனிப்படையினர் சென்னையில் இருந்து திருச்சி ஸ்ரீரங்கம் சென்று அமைச்சர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு பேசிய ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை நேற்று கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு பேச்சு ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அதிரடி கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Srirangam Rangarajan Narasimhan ,Sriperumbudur Jeeya ,Chennai Central Crime Branch Police ,Chennai ,Sriperumbudur ,M.R. Jeeya ,Chennai Metropolitan Police Commissioner’s Office… ,
× RELATED மத்திய குற்றப்பிரிவு காவல்துறை...