சென்னை: குரூப்2, குரூப் 2ஏ தேர்வு மெயின் தேர்வு எழுதுபவர்கள் இறுதிநாள் வரை காத்திராமல் தேர்வு கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 2540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடந்தது.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து மெயின் தேர்வை எழுத வேண்டும். மெயின் தேர்வுக்கு விண்ணப்பித்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 18ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று டிஎன்பிஎஸ்சி தனது சமூக வலைத்தளப் பதிவில், “குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களில் 32% தேர்வர்கள் தேர்வு மையத்தை தேர்வு செய்து விட்டனர். எனவே தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல், உடனே தேர்வு மையத்தை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மற்றொரு பதிவில், “தமிழ் தகுதித் தேர்விற்கு விலக்கு பெற சான்றிதழை பதிவேற்றம் செய்ய வருகிற 18ம் தேதி கடைசி நாளாகும். 15% தேர்வர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்து விட்டனர். எனவே தமிழ் தகுதித் தேர்விற்கு விலக்கு கோரிய மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல், உடனே சான்றிதழை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சான்றிதழை குறிப்பிட்ட படிவத்தில் பதிவேற்றம் செய்யாத மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு, தமிழ் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படமாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி, “மெயின் தேர்வுக்கு தேர்வுக்கட்டணத்தை செலுத்த வருகிற 18ம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல், உடனே தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டும்” என்று கேட்டு கொண்டுள்ளது.
The post குரூப்2, குரூப் 2ஏ தேர்வு மெயின் தேர்வு எழுதுபவர்கள் இறுதிநாள் வரை காத்திராமல் தேர்வு கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும்: டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள் appeared first on Dinakaran.