×

ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்களை உருக்கி, தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திட பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைப்பு

கோவை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (18.12.2024) ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜூ முன்னிலையில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில், அத்திருகோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பயன்பாட்டில் இல்லாத 28 கிலோ 906 கிராம் பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி, தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் பொள்ளாச்சி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி, பெடரல் வங்கியின் சார்பில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட ரூ. 6 இலட்சம் மதிப்பிலான மின்கல ஊர்தியினை திருக்கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுபாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களில் திருக்கோயில்களுக்கு தேவையான பொன் இனங்களை தவிர இதர பயன்பாடற்ற பலமாற்று பொன் இனங்களை கல், அழுக்கு, அரக்கு நீக்கி சுத்தம் செய்து, மும்பையிலுள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு வருகிறது. இப்பணிகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 13 திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்கள் உருக்கி, 442 கிலோ 107 கிராம் எடையுள்ள சுத்த தங்க கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டு ஒன்றிற்கு ரூ,5.79 கோடி வட்டித் தொகையாக கிடைக்கப் பெற்று அந்தந்த திருக்கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 05.12.2024 அன்று திருச்சி மாவட்டம், குணசீலம், அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 12 கிலோ 595 கிராம் பயன்பாடற்ற பலமாற்றுப் பொன் இனங்கள் உருக்கிட மும்பைக்கு பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று (18.12.2024) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜூ அவர்கள் முன்னிலையில், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 28 கிலோ 906 கிராம் பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி, தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் பொள்ளாச்சி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தார்.

அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி பெடரல் வங்கியின் சார்பில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட ரூ. 6 இலட்சம் மதிப்பிலான மின்கல ஊர்தியினை திருக்கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார். பின்னர் அருள்மிகு மாசாணியம்மன் திருகோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் இரா. சுகுமார், இ,ஆ,ப., பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி ஏ.கேத்ரின் சரண்யா, இணை ஆணையர்கள் இரா. வான்மதி, பி,இரமேஷ், துணை ஆணையர் விஜயலட்சுமி. உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் முரளி கிருஷ்ணா, மற்றும் அறங்காவலர்கள், செயல் அலுவலர்/உதவி ஆணையர் இந்திரா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்களை உருக்கி, தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திட பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Masani Amman ,Temple ,Anaimalai ,State Bank of India ,Coimbatore ,Hindu ,and Endowments Minister ,P.K. Sekarbabu ,Supreme Court ,Justice ,Duraisamy Raju ,Masani Amman Temple ,Anaimalai, Coimbatore district ,Masani ,Amman ,Dinakaran ,
× RELATED ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்