சென்னை: சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் மின் தொழில்நுட்ப கருத்தரங்கம் மற்றும் புதிய உதவி பொறியாளர்கள் (மின்) அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ வ வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். முன்னதாக உதவி பொறியாளர் ஒருவர் எழுதிய கவிதை நூலினை வெளியிட்டு மற்றும் பொதுப்பணித்துறை மின் அலகு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
அமைச்சர் ஏ வ வேலு மேடையில் பேசியதாவது:
165 ஆண்டுகளை கடந்து பொதுப்பணித்துறை தமிழக அரசால் சிறப்பாக பணியாற்றி வருகிறது. தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் மூலம் கட்டப்படும் புதிய விண்ணுயர்ந்த கட்டடங்கள், ஒளிர்வதும், மிளிர்வதும் மின் அலகின் பங்களிப்பில் தான். மின் அலகு துவங்கப்பட்டபோது, மின் விளக்குகள், மின் விசிறிகள் என இருந்த மின் பணிகள் தற்போது, தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக, பன்மடங்கு உயர்ந்து, வளர்ந்து, மின் தூக்கி, மின் மாற்றி, மின்தூக்கி, குளிர்சாதன வசதி,கண்காணிப்பு புகைப்படக் கருவி, உயர் கோபுர விளக்குகள்,பாலங்களில் மின் விளக்குகள் பொருத்துதல்,தடையற்ற மின்சாரம் வழங்குதல் போன்ற மின் பணிகளை உள்ளடக்கி பரந்து விரிந்து உள்ளது.
உலகமே வியக்கும் அளவிற்கு உள்ள கட்டிடம் என்னவென்றால் கலைஞர் நினைவிடம் தான். அது மின்னுவதற்கு காரணம் மின் அலகு தான். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் உள்ள மின் அலகினை திறம்பட செயல்படுவதற்கு புதிய பணியிடங்கள் மற்றும் புதிய மின் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறையில் உள்ள மின் பிரிவினை மேம்படுத்துவதற்கு 151 புதிய நிரந்தரப் பணியிடங்களுடன், 5 மின் கோட்டங்கள், 15 மின் உபகோட்டங்கள் உள்ளிட்ட புதிய மின் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டன. திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் தற்போதுவரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 49 உதவிப் பொறியாளர்கள் புதியதாக தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறு மற்றும் குறு மின் ஒப்பந்தக்காரர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு உரிய தொழில் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வண்ணம், இவ்வரசு பொறுப்பேற்ற பின்னர், ரூ.15 கோடி வரை உள்ள சிவில் மற்றும் மின் பணிகளுக்கு தனித்தனியாக ஒப்பந்தம் மேற்கொள்ளுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் ஒரு அங்கமாக, மின் அலகு தன் கடமையை செவ்வனே நிறைவேற்றி வருகிறது. அவர்களை பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பழுதானவற்றை மாற்றி 18 புதிய மின்தூக்கிகளை அமைக்கின்ற பணியில் ஈடுபட்டோம். இதுபோன்ற தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்றுள்ளது என தெரிவித்தார்.
வாழ்க்கையில் மின்சாரம் என்பது அத்தியாவசியம் என்பதை உணர்த்தும் நோக்கில் சட்டசபையில் பேசியிருக்கிறேன். புதியதாக பணியில் சேர்ந்துள்ள துணை மின் பொறியாளர்கள் பார்வை சற்று விரிந்த பார்வையாக இருக்க வேண்டும், அப்போது தான் வளர்த்த என கொள்ள முடியும் என அறிவுரை வழங்கினார். ஆறடி மனிதரோட முடிந்து விடுகிறது மருத்துவரின் பணி. உலகத்தையே எட்டிப் பார்ப்பவன் தான் பொறியாளன். பொறியாளர்களுக்கு பாசிட்டிவ் திங்கிங் இருந்தால் தான் சாதிக்க முடியும் என தெரிவித்தார்.
மேலும் நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா இஆப, பொதுப்பணித்துறை மின் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post பொதுப்பணித்துறையில் உள்ள மின் அலகினை திறம்பட செயல்படுவதற்கு புதிய பணியிடங்கள் மற்றும் புதிய மின் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஏ.வ.வேலு appeared first on Dinakaran.