ஹாமில்டன்: இங்கிலாந்துடனான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் நியூசிலாந்து அணி, 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன் எடுத்துள்ளது. நியூசிலாந்து-இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் நடந்து வருகிறது. முதல் 2 போட்டிகளை முறையே 8 விக்கெட், 323 ரன் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் நேற்று ஹாமில்டனில் தொடங்கியது.
இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்ய நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் டாம் லாதம், வில்லியம் யங் சிறப்பாக ஆடி வலுவான அடித்தளம் அமைத்து தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 105ரன் சேர்த்த லாதம் 63, வில்லியம் 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 44 ரன் விளாசினர்.
மற்றவர்கள் குறைந்த ரன்னில் வெளியேற மிட்செல் சான்ட்னர் பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடினார். அதனால் நியூசி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன் எடுத்திருந்தது. இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாட்ஸ், கஸ் அட்கின்சன் தலா 3, பிரைடன் கர்ஸ் 2, பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட் எடுத்தனர். இன்னும் ஒரு விக்கெட் கைவசம் எஞ்சியிருக்க நியூசி வீரர்கள் மிட்செல் சான்ட்னர் 50, வில்லியம் 0 ரன்னுடன் இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர்.
* 98 சிக்சர் அடித்து சவுத்தீ சாதனை
இங்கிலாந்துடனான முதல் இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் டிம் சவுத்தீ, 10 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 23 ரன் எடுத்தார். இந்த போட்டியில் அடித்த 3 சிக்சர்களுடன் சேர்த்து சவுத்தீ, டெஸ்ட் போட்டிகளில் அடித்த சிக்சர் எண்ணிக்கை 98 ஆனது. இதனால் அதிக சிக்சர் அடித்த வீரர்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லுடன், சவுத்தீ கரம் கோர்த்துள்ளார்.
இந்த பட்டியலில்133 சிக்சர்களுடன் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கலம் 107 சிக்சர்களுடன் 2ம் இடத்திலும், ஆஸி விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் 100 சிக்சர்களுடன் 3ம் இடத்திலும் உள்ளனர். சவுத்தீக்கு, அவர் ஆடும் கடைசி போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
The post இங்கிலாந்துடன் 3வது டெஸ்ட் நியூசிலாந்து நிதான ஆட்டம்: முதல் நாளில் 315 ரன் குவிப்பு appeared first on Dinakaran.