பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம், 13.2 ஓவரில் மழை குறுக்கிட்டதால் நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் 3வது டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா அரங்கில் தொடங்கியது.
களம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இரு அணிகளும் தலா ஒரு சுழல் பந்து வீச்சாளருக்கு மட்டுமே வாய்ப்பு அளித்திருந்தன. இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. எதிர்பார்த்தது போலவே அஷ்வினுக்கு பதில் ரவீந்திர ஜடேஜா களம் கண்டார். ஹர்ஷித் ராணாவுக்கு பதில் ஆகாஷ் தீப் இடம் பெற்றார். காயத்தில் இருந்து மீண்ட ஹேசல்வுட் மீண்டும் ஆஸி அணிக்கு திரும்பியதால் ஸ்காட் போலண்ட் விலக்கப்பட்டார்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆஸியின் தொடக்க ஆட்டக்காரர்கள் உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி ஆகியோருக்கு பும்ரா முதல் ஓவரை வீசினார். அதில் ஒரு பவுண்டரியை மட்டும் தந்தார். அடுத்து 2வது ஓவரை சிராஜ் மெய்டன் ஓவராக வீசினார். இருவரும் மாறி, மாறி பந்து வீசிக் கொண்டிருந்த நிலையில் 5.3வது ஓவரின் போது மழை காரணமாக ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது.
அப்போது ஆஸி விக்கெட் இழப்பின்றி 19ரன் எடுத்திருந்தது. சுமார் அரை மணி நேரம் கழித்து மழை நிற்கவே 6வது ஓவரை சிராஜ் தொடர்ந்தார். பின்னர் 8வது ஒவரை ஆகாஷ் தீப் வீசினார். ஆஸி ஆட்டக்காரர்களும் பொறுமையுடன் பந்துகளை கையாண்டனர். தொடர்ந்து ஆட்டத்தின் 14வது ஓவரை ஆகாஷ் மீண்டும் வீச வந்தார். வெறும் 2பந்துகள் வீசிய நிலையில் அடை மழை பெய்ததால் மீண்டும் ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது.
ஆனால் காலையில் தொடங்கிய மழையின் வேகம் மாலையிலும் குறையாததால் முதல் நாள் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர். ஆஸி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 13.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ரன் எடுத்துள்ளது. அந்த அணியின் கவாஜா 19, மெக்ஸ்வீனி 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்னும் 10விக்கெட்கள் கைவசம் இருக்க ஆஸி 2வது நாளான இன்று, முதல் இன்னிங்சை தொடர உள்ளது.
* ஐந்து நாளும் ஆடும்
குயின்ஸ்லாந்து மாகாணம் பிரிஸ்பேன் நகரில் ஆட்டத்தின் 2வது நாளான இன்றும் மழை குறுக்கீடு இருக்கும் என்று வானிலை சொல்கிறது. மேலும் 3வது டெஸ்ட் நடைபெறும் டிச.18ம் தேதி வரை பிரிஸ்பேனில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
The post 14வது ஓவரில் குறுக்கே புகுந்து அடித்து ஆடிய அடைமழை: ஆஸி-இந்தியா 3வது டெஸ்ட் appeared first on Dinakaran.