×

டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு 5 விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் பெரியகருப்பன் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், டெல்லியில் நடைபெற்ற மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையத்தின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட 5 விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார். மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையம், ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் சிறப்பாக செயல்படும், கூட்டுறவு வங்கிகளுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த அமைப்பு 60 ஆண்டுகளைக் கடந்து வைரவிழா கொண்டாடும் தருணத்தில் விருது வழங்கும் விழாவினை 26.11.2023 அன்று டெல்லியில் நடத்தியது. இந்த வைர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், விருதினை ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா வழங்கிட, தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட ஐந்து விருதுகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வரும் விவசாயக் கூட்டுறவு பணியாளர் பயிற்சி நிலையத்திற்கு 2023-24ம் ஆண்டில் இந்திய அளவில் சிறந்த பயிற்சி நிலையமாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு வழங்கப்பட்டது.  மூன்றடுக்கு கூட்டுறவு கடன் கட்டமைப்பில் 2022-23ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த சிறந்த செயல்பாட்டிற்கான மூன்றாம் பரிசு தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது.

குறுகிய கால கூட்டுறவு கடன் கட்டமைப்பில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த வங்கிச் சேவையினை வழங்கி வருவதற்காக தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. குறுகிய கால கூட்டுறவு கடன் கட்டமைப்பில் சிறந்த வங்கிச் சேவையினை வழங்கி வருவதற்காக சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டத்திலுள்ள பூண்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சிறந்த செயல்பாட்டிற்கான மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு 5 விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் பெரியகருப்பன் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Cooperative Banks Receive 5 Awards ,Delhi ,Minister ,Periyakaruppan ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Cooperatives Minister ,K.R. Periyakaruppan ,Tamil ,Nadu ,Tamil Nadu ,Cooperative ,Banks ,National Network of State Cooperative Banks Awards Ceremony ,Delhi.… ,Nadu Cooperative Banks Receive 5 Awards ,Minister Periyakaruppan ,
× RELATED அம்பேத்கர் விவகாரம் உண்மையை காங். திரித்து கூறுகிறது: அமித்ஷா விளக்கம்