×

அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்: அமித்ஷாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என அமித்ஷாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு உருவாகி 75 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, இரு நாள் விவாதம் நடந்தது. அப்படி நேற்றைய தினம் நடந்த நிகழ்வின் முடிவில், மாநிலங்களவையில் அமித் ஷா உரை நிகழ்த்தினார். அப்போது அவர், “இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது.

இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்திருந்தார். அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் நேற்று முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் சார்பில் அம்பேத்கர் புகைப்படத்துடன் போராட்டமும் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைகளில் அம்பேத்கர் படங்களை ஏந்தி நின்று “ஜெய்பீம்! ஜெய்பீம்” என முழக்கமிட்டனர்.

மேலும், “ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவே! மன்னிப்பு கேளுங்கள்” எனவும் கூட்டணி எம்பிக்கள் கோஷமிட்டனர். இந்நிலையில், அமித்ஷாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் “அதிக பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுக்காப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள், சொல்ல வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

The post அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்: அமித்ஷாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Amit Shah ,Chennai ,Dinakaran ,
× RELATED டாக்டர் அம்பேத்கர்...