கோவை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலமாக 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் சார்பில் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையம் துவக்க விழா நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவையில் இருந்து 29 திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு மையத்தை துவக்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த 29 திறன் மையங்கள் உலக தரத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கே 2,900 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
முதல்வரின் கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களில் வழங்கப்பட்ட வேலை வாய்ப்பு முகாம்களின் மூலமாக வேலை வாய்ப்பு பெற்றுள்ள 3,700 பேரில் 30 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதன் மூலமாக 3 லட்சம் ரூபாய் முதல் 42 லட்ச ரூபாய் ஆண்டு வருமானம் பெற பணி நியமன ஆணை பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள். இந்த திறன் மேம்பாட்டு மையம் சார்பில் கோவை அரசு பாலிடெக்னிக் உட்பட 6 மாவட்டங்களில் ஸ்மார்ட் மேனுபேக்சரிங் டெக்னாலஜி சென்டர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் வேலைக்கு செல்ல வேண்டும் என்றுதான் நான் முதல்வன் திட்டத்தை நமது முதல்வர் கொண்டு வந்தார். இந்த திட்டத்தை இந்தியா மட்டுமின்றி உலகமே வியந்து பாராட்டுகிறது. சமீபத்தில் புது டெல்லியில் அனைத்து தலைமை செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைமை செயலாளர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தை பற்றி வியந்து பேசியிருக்கிறார்கள். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பள்ளிகளில் பயிற்சி, கல்லூரிகளில் திறன் மேம்பாட்டு வகுப்புகள், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. திறன் மேம்பாட்டு பயிற்சியை சரியான முறையில் பயன்படுத்தியதில் அரசு துறையினர் மட்டுமின்றி மாணவர்களின் பங்களிப்பு முக்கியமானது. பள்ளி, கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 30 லட்சம் பேர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
The post ‘நான் முதல்வன்’ திட்டத்தால் 2 லட்சம் பேருக்கு வேலை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.