- வில்லுண்டி தீர்த்தா பாலம்
- இராமேஸ்வரம்
- இராமாயணம்
- ராமநாத சுவாமி கோயில்
- ராமேஸ்வரம் தீவு
- வில்லுண்டி தீர்த்தா பாலம்
*அச்சத்தில் சுற்றுலா பயணிகள்
ராமேஸ்வரம் : ராமாயண வரலாற்றில் தொடர்புடைய வில்லுண்டி தீர்த்ததை பார்வையிட செல்லும் பக்தர்கள், கடலுக்குள் விழும் அபாயம் உள்ளது. சேதமான பாலத்தை உடனே சரி செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்கள் தவிர கோயிலுக்கு வெளியே பல்வேறு இடங்களில் பல தீர்த்தங்கள் உள்ளது. தொன்று தொட்டு பக்தர்கள் நீராடி வந்த இந்த தீர்த்தங்கள் பல்வேறு காரணங்களால் பக்தர்கள் பயன்படுத்துவது குறைந்தது.
தற்போது கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் மட்டுமே நீராடும் வழக்கம் உள்ளது. ஆனால் வெளியே உள்ள தீர்த்தங்கள் அதாவது ராமாயண வரலாற்று தொடர்புடைய பலவும் முறையாக பராமரிக்கப்பட்டு வருவதுடன் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் இந்த தீர்த்தங்களை பார்வையிட்டு திரும்புகின்றனர்.
அந்த வகையில் பக்தர்களால் தேடிச் சென்று பார்க்கப்படும் ஒரு முக்கிய தீர்த்தம் தான் வில்லூண்டி தீர்த்தம். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள இத்தீர்த்தம் ராமரால் உருவாக்கப்பட்டது என்பது ஐதீகம். இந்த தீர்த்தம் தங்கச்சிமடம் வடக்கு கடலுக்குள் அமைந்துள்ளது.
கிணறு வடிவில் அமைந்துள்ள இத் தீர்த்தம் ஒரு நன்னீர் ஊற்று ஆகும். கடலுக்குள் கிடைக்கும் நல்ல சுவையான தண்ணீரை தீர்த்தமாக பக்தர்கள் பருகி செல்கின்றனர்.
கடலுக்குள் அமைந்துள்ள இந்த தீர்த்தக் கிணறுக்கு பக்தர்கள் கரையில் இருந்து செல்லும், சிறிய கான்கிரீட் பாலத்தின் வழியாக செல்கின்றனர். இந்த சிமெண்ட் பாலத்தின் இருபக்கமும் அமைந்துள்ள கைப்பிடி சுவர் உடைந்து உப்புக்காற்றில் சேதமடைந்து சிதைந்து வருகிறது.
குறிப்பாக தீர்த்தம் கிணற்றை சுற்றியுள்ள கைப்பிடி சுவர்கள் பல மாதங்களுக்கு முன்பே முற்றிலும் சேதமடைந்து கீழே விழுந்துள்ளது. மேலும் கடல் அலைகள், காற்றின் வேகம், உப்புத்தன்மையால் அப்பகுதி கான்க்ரீட் தளம் வழுவிழுந்து சேதமடையும் நிலையில் உள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 12 அடி உயரத்திற்கு மேலே பக்தர்கள் பாலத்தில் நின்று பார்ப்பதால் தற்காலிக பாதுகாப்புக்காக ப வடிவில் மூங்கில் கம்புகள் கட்டப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டு செல்லும் வில்லூண்டி தீர்த்த பாலம் சேதமடைந்து ஒராண்டுகள் ஆகியும் இதை சரி செய்ய அதிகாரிகள் முன்வரவில்லை.
இதனால் இங்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், கடலில் தவறி விழும் அச்சத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். சில நேரங்களில் புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் சுற்றுலாப் பயணிகள் தவறி விழும் நிலையும் உருவாகியுள்ளது. மிக மோசமான நிலையில் சேதமடைந்து அபாயமான முறையில் உள்ள இத்தீர்த்ததை சரி செய்யக்கோரி உரிய அதிகாரிகளுக்கு பல முறை மனு அளிக்கப்பட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சேதமடைந்து அபாய நிலையில் உள்ள வில்லூண்டி தீர்த்த பாலத்தில், உடனே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூரை சேர்ந்த பக்தர் பிரகாஷ் கூறுகையில், ‘‘ராமேஸ்வரத்திற்கு வருடத்திற்கு இருமுறை குடும்பத்துடன் வந்து செல்கிறேன்.
கோயிலில் தீர்த்தம் தரிசனம் முடித்து நாங்கள் பார்த்து செல்லும் முக்கிய இடங்களில் வில்லுண்டி தீர்த்தமும் ஒன்று. கடந்த மே மாதம் விடுமுறைக்கு குடும்பத்துடன் வந்த போது இந்த வில்லுண்டி தீர்த்ததை பார்வையிட்டோம். தடுப்பு சுவர்கள் சேதமடைந்து கம்புகள் கட்டப்பட்டு இருந்தன.
ஆறு மாதத்திற்கு பிறகு நேற்று ராமேஸ்வரம் வந்த நான் வில்லூண்டி தீர்த்தம் மிகவும் மோசமான நிலையில் உடைந்து நிற்பதற்கே அச்சம் ஏற்படும் வகையில் இருந்தது. ஆன்மீக சுற்றுலா தளம் இவ்வளவு நாட்களாக சரி செய்யபடாமல் கிடப்பது வேதனைக்குரியது. ஆன்மீக வரலாற்று சிறப்புகளை அரசு பராமரிப்பு செய்து பக்தர்களுக்கு தேவையான வசதியை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
The post ராமேஸ்வரம் அருகே வில்லுண்டி தீர்த்த பாலத்தின் தடுப்பு சுவர் சேதம் appeared first on Dinakaran.