ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் – இலங்கை தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்காக மீன்பிடி துறைமுகம் அருகே கடலுக்குள் பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.ராமேஸ்வரம் – இலங்கை தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்குவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் கடந்த 2 ஆண்டுகளாக முழுவீச்சில் பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் ஆன்மீக சுற்றுலாத்தளமான ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்குவதற்கு இரு அரசுகளும் திட்டமிட்டு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத்தலைவர், தலைமைச் செயல் அலுவலர் மா.வள்ளலார் ஐஏஎஸ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் தீவின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். கப்பல் சேவை மற்றும் சுற்றுலா படகு சவாரி இயங்குவதற்கு பொருத்தமான இடங்கள் குறித்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஐஐடி குழு மணல் ஆய்வு செய்த பகுதிகள், தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம், பாம்பன் குந்துகால் துறைமுகம், தனுஷ்கோடி பாக்ஜலசந்தி கடற்கரை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர்.
தற்போது ராமேஸ்வரம் இந்திய கடற்படை முகாம் அருகே புதிய துறைமுக அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மீன்பிடித் துறைமுக ஜெட்டி பாலம் அருகே உள்ள கடற்படை ஜெட்டி பாலத்தின் வலது பக்கத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கான கடல் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முதற்கட்டமாக மணல் ஆய்வு செய்யும் பணிக்கு தேவையான இயந்திரங்கள் கடற்கரையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் இருந்து 100 மீட்டர் தூரம் கடலுக்கு உள்ளே மணல் ஆய்வு செய்யும் பணி இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இம்மாத இறுதியில் மணல் ஆய்வு செய்யும் பணி நிறைவு பெற்று அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின் கூடுதல் பணிகள் தொடரும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ராமேஸ்வரம் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துக்காக கடல் பாலம் அமைக்க ஆய்வு : விரைவில் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.