×

சுகங்களை எல்லாம் தரும் சுக சியாமளாதேவி

பாஸ்கரராயர் என்ற பெரும் ஸ்ரீவித்யா உபாசகருக்கும், குங்குமானந்தர் என்ற பெரும் மகானுக்கும் ஒரு முறை வாத போட்டி நடந்தது. அதில் பாஸ்கர ராயரை வெல்ல வேண்டும் என்பதற்காக, குங்குமானந்தார் ஒரு சிக்கலான கேள்வியை கேட்டார். லலிதா சஹஸ்ரநாமத்தில் அறுபத்தி நான்கு கோடி யோகினிகள் அம்பிகையை சேவிக்கிறார்கள் என்று வருகிறது. (மஹா சதுஷ் சஷ்டி கோடி யோகினி கண சேவிதா என்ற நாமம்). இந்த அறுபத்தி நாலு கொடி யோகினிகளின் பெயரை சொல்லுமாறு குங்குமானந்தர் பாஸ்கரராயரை கேட்டார். எந்த புராணத்திலும் எந்த தந்திர சாஸ்திரத்திலும் பதில் இல்லாத இந்த கேள்விக்கு, பாஸ்கரராயர் எப்படி பதில் சொல்வார் என்று புரியாமல் அனைவரும் பயந்தார்கள்.

ஆனால் அவர் சற்றும் அசராமல் மடை திறந்த வெள்ளம் போல அறுபத்து நாலு கோடி யோகினிகளின் பெயரை ஒப்பிக்க ஆரம்பித்தார். கேட்ட அனைவரும் ஸ்தம்பித்து போனார்கள். பிறகு பாஸ்கரராயர் அம்பிகைக்கு அபிஷேகித்த நீரை கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். அப்போது அவர்களது கண்களுக்கு ஒரு தெய்வீக காட்சி தெரிந்தது.

அம்பிகை ஒரு கிளியின் வடிவில் இருந்து, பாஸ்கர ராயர் தோளில் அமர்ந்து கொண்டு, வரிசையாக யோகினிகளின் பெயரை சொல்கிறார். அதை அப்படியே கேட்டு பாஸ்கர ராயர் திரும்பி சொல்கிறார் என்று அவர்களுக்கு அப்போது புரிந்தது. இப்படி இக்கட்டான நேரத்தில், பக்தனை காக்க அம்பிகை கிளியின் வடிவில் வருகிறாள் என்றும் தெரிகிறது. கிளி வடிவில் இருக்கும் தேவிக்கு தான் சுக சியாமளா என்ற திருநாமம். இந்த தேவியின் மகிமைகளை காண்போம் வாருங்கள்.

மாதங்கி தேவியின் தத்துவம்

அதி சக்தியான லலிதா பரமேஸ்வரியின் ராஜ மந்திரியாக கருதப்படுபவள், ராஜ சியாமளா தேவி ஆவாள். இவள் ஆதி சக்தி தேவியின் சக்திக்கும் ஆற்றலுக்கும் சற்றும் சளைக்காதவள். இவளுக்கு மந்திரினி என்ற திருநாமமும் உண்டு. மந்திர உபாசகர்களை மந்திரிகள் என்றும் சொல்லுவதுண்டு. மனனம் திராணம் (காப்பாற்றுவது) என்ற தர்மத்தோடு இருப்பதால் நிர்மலமான சித்தத்தை மந்திரம் என்று சொல்வது உண்டு. இப்படி நிர்மலமான சித்தத்தை உடையவர்களை மந்திரி என்றும் சொல்லுவார்கள்.

ஆகவே மந்திரத்தை சித்தி செய்வதற்கும், அதனால் நிர்மலமான சித்தத்தை அடைவதற்கும் அருளுவது ராஜ மந்திரியான, சியாமளா தேவி என்றால் அது மிகையல்ல. ஆதி சக்தியான லலிதா பரமேஸ்வரி, தனது பொறுப்பை மொத்தமும் சில சமயங்களில் ராஜ சியாமளா தேவியிடம் ஒப்படைத்து விடுவாளாம் . இதை ‘‘மந்திரிணி ந்யஸ்த ராஜ்யதூ:’’ என்ற நாமம் நமக்கு காட்டுகிறது.

லலிதா பரமேஷ்வரியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றிய இந்த தேவி, சகல விதமான ஞானத்திற்கும் அதி தேவதையாவாள். இவள் சதா தன்னுடைய கையில் ஒரு கிளியை ஏந்தி இருக்கிறாள். ஆகவே இவளை சுகப்பிரியா என்று அழைக்கிறார்கள். அதாவது கிளிகளின் மீது அதீத அன்பு உடையவள் என்று பொருள். அதுமட்டுமில்லை, கிளிகளின் வடிவில் இருப்பதே சியாமளா தேவி தான் என்றும் தேவி உபாசகார்கள் சொல்லுவார்கள்.

கிளியின் பின்னே இருக்கும் தத்துவம்

கிளியானது தனது காதில் ஒலிப்பதை கேட்டு, அப்படியே திரும்பி சொல்லும். இது ஒரு அற்புதமான குணம். ஆதி காலத்தில், வேதங்களை யாரும் எழுதி வைக்கவில்லை. குரு சொல்வதை கேட்டு, சிஷ்யன் அதை மீண்டும் மீண்டும் சொல்லி மனனம் செய்வான். பிறகு அந்த சிஷ்யன் மற்றொருவனுக்கு சொல்ல அவர் அதை மீண்டும் மீண்டும் சொல்லி மனனம் செய்வார். இப்படி எழுதி வைக்காமல், வாய் மூலமாகவே நான்கு வேதங்களும், பல சந்ததிகளுக்கு கடத்தப்பட்டது.

ஆகவே வேதங்களுக்கு எழுதா கிழவி என்று பெயர். அதாவது எழுத்து வடிவில் இல்லாத ஞானம் என்று பொருள். அதே போல வேதங்களுக்கு ஸ்ருதி என்றும் பெயர் உண்டு. அதாவது குரு சொல்வதை கேட்டு, அதை மீண்டும் மீண்டும் சொல்லி மனனம் செய்வதால், வேதத்திற்கு காதால் கேட்டு அறியப்படும் ஞானம் என்ற பொருள் படும் படி ஸ்ருதி என்று பெயர்.

அது மட்டுமில்லாமல் மந்திர உபாசகர்கள், தங்களுக்கு உபதேசமான மந்திரத்தை நேம நிஷ்டையோடு மீண்டும் மீண்டும் சொல்வதால், அந்த மந்திரமும் சித்தி ஆகிறது. அந்த மந்திரமே உபாசாகன் உபாசகனே மந்திரம் என்னும் உயர் நிலையை அடைந்து, இறைவனோடு இரண்டறக் கலக்கிறான் சாதகன். இப்படி வேத மந்திரங்கள் ஒரு தலைமுறையில் இருந்து மற்ற தலைமுறைக்கு ஆதி காலத்தில் கடத்தப்பட்டது, காதால் கேட்டு, மீண்டும் மீண்டும் சொல்வதால் தான்.

அதே போல மந்திரங்கள் சித்தி ஆவதும், குருவிடம் முறையாக அந்த மந்திரங்களை கேட்டு, மீண்டும் மீண்டும் வாக்காலும் மனதாலும் அதை உச்சரிப்பதால்தான். இரண்டிற்கும் கேள்வி ஞானமும், கேட்ட ஞானத்தை மனதிற்குள் தக்க வைத்துக்கொள்ள, செய்யும் முயற்சியும் மிக முக்கியம். இந்த இரண்டின் உருவகமாக தான், சொன்னதை மீண்டும் மீண்டும் அப்படியே சொல்லும் கிளி இருக்கிறது.

அம்பிகையின் கையில் கிளி ஏன்?

அம்பிகைக்கு, மிகவும் பிடித்தவை கிளிகள் என்றால், வேதத்தை முறையாக கற்பவர்கள் மீதும், மந்திரத்தை சரியாக உபாசிப்பவர்கள் மீதும், அம்பிகைக்கு அபரிமிதமான அன்பு உண்டு என்பதையேஅது குறிக்கிறது. இப்படி கிளிகள் கேள்வி ஞானத்தின் அடையாளமாக இருப்பதால் தான், காஞ்சி காமாட்சி, மதுரை மீனாக்ஷி என்று அனைத்து தேவியரின் கையிலும் கிளிகள் இருக்கின்றன. மேலும் இந்த கிளிகள், அம்பிகையிடம் ஒரு பக்தன் வைக்கும் கோரிக்கையை நன்றாக கேட்டு, அதை மீண்டும் மீண்டும் அம்பிகைக்கு நினைவு படுத்துவது போல அம்பிகையின் கையில் அமர்ந்து கொண்டு பக்தனின் பிரார்த்தனையை மீண்டும் மீண்டும் சொல்லுமாம். இப்படி பக்தர்களின் பிரார்த்தனை நிறைவேறுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது கிளிகள்.

சுக சியாமளா தேவி

கிளிகள் நமக்கு காட்டும் தத்துவங்கள் ஏராளம் ஏராளம். இதனால் அம்பிகையை கிளியின் வடிவத்தில் இருக்கிறாள் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. கிளி வடிவில் இருக்கும் அம்பிகைக்கு சுக சியாமளா என்று பெயர். சுக: என்றால் கிளி என்று பொருள். பண்டாசுரனை எதிர்த்து போருக்கு, லலிதா பரமேஸ்வரியோடு கிளம்பிய ராஜ சியாமளா தேவி, தனது கையில் இருந்த கிளியை வானில் பறக்க விட்டாள். வானில் பறந்த அந்த கிளி, ஒரு தெய்வீக வடிவம் தாக்கியது. மூன்று முகம், மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்ட தனுர் வேத தேவதையாக கிளி மாறியது. தனுர் வேத தேவதை என்றால் போர் கலைக்கு அதி தேவதை என்று பொருள். அந்த தனுர் தேவதை ராஜ மாதங்கி தேவியை வணங்கி, தேவிக்கு, சித்திர ஜீவம் என்ற வில்லையும், அள்ள அள்ள குறையாத அம்புகளை கொடுக்கும் அட்சய அம்புறாத் தூணியையும் கொடுத்து வணங்கியது.

மேலே நாம் கண்ட சம்பவம், பிரம்மாண்ட புராணத்தின் ஒரு பகுதியான லலிதோபாக்கியானத்தில் வருகிறது. அதாவது அம்பிகையின் கையில் இருக்கும் ஒரு கிளி தனுர் வேத தேவதை என்றால், அவளை சுற்றி இருக்கும் எண்ணற்ற கிளிகள் அனைத்தும் ஒரு ஒரு வித்தையின் அதி தேவதை என்று புரிந்து கொள்ள வேண்டும்.பந்தகாசுரன், கொடுமை தாங்காமல் பூமியில் காஞ்சியில், கிளியின் வடிவில் இருந்து தான் தேவியை தேவர்கள் துதித்தார்கள் என்பதை நாம் இங்கே நினைவு கொள்ள வேண்டும். கிளி வடிவில் பூஜித்த தேவர்களை கண்டு மனம் கனிந்த பெருமாட்டி, அசுரனை வதைத்து, காஞ்சியை தனது நித்திய வசிப்பிடமாக மாற்றிக் கொண்டாள். அதனால்தான் காஞ்சி காமாட்சி அம்பிகை கையில் கிளி இருக்கிறது.

‘‘தம் சுகம் லாலயந்தி பரிக் கிரீடசே’’ என்று சியாமளா தண்டகத்தில் காளி தாசர் சொல்கிறார். அதாவது அம்பிகை எப்போதும் கையில் இருக்கும் கிளியை கொஞ்சிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்கிறாளாம். ‘‘லீலா சுக பிரியே’’ என்றும் அதே தண்டகத்தில் காளிதாசர் சொல்வதை கவனிக்க வேண்டும். மொத்தத்தில், கிளியின் வடிவில் இருந்து நமக்கு அருள் புரியும் தேவியின் பெயர் சுகசியாமளா. இந்த அம்பிகையினுடைய தியான ஸ்லோகம் பின் வருமாறு;

சுக சியாமளா தேவியின் தியானம்

‘‘நிகம சஹ கர மூலே நிர்மிதால வால தார வலயந்தே
பிரதி பலிதாகம ஷாக பல ரசிகஷுகோஸ்து மம துஷ்டியை’’

சகல விதமான ஞானத்திற்கு இருப்பிடமானவளும், வேதம், இதிகாசம், புராணம், ஆகமம் முதலியன வடிவில் இருப்பவளும், அனைத்து விதமான ஓசை வடிவானவளும், எழுத்து மற்றும் வார்த்தைகளின் வடிவில் பிரகாசிப்பவளும், யாருடைய கடை கண் பார்வையை பெற்றால், அந்த மனிதனிடம் அனைத்து விதமான ஞானமும் வந்து தங்குமோ, அப்படிப்பட்ட சுக சியாமளா தேவி நமக்கு என்றென்றும் சுகங்களை தருபவளாக விலங்கட்டும் என்பது மேல நாம் கண்ட தியான ஸ்லோகத்தின் தேர்ந்த பொருளாகும்.

சுக சியாமளா தேவியை பூஜிப்பதால் வரும் நன்மைகள்

சுக சியாமளா தேவியை உபாசிப்பதால், சகல விதமான ஞானமும் ஏற்படும் என்பது, சாதகர்கள் அனுபவத்தில் கண்ட உண்மை. அதுமட்டுமில்லை, ராஜாங்க அனுகூலங்கள் இந்த தேவியின் அருளால் கிடைக்கும். கையில் வீணை, புஸ்தகம், ஸ்படிக மாலை, கிளிகள் தாங்கி , ரக்த நிறத்தில் பட்டு உடுத்தி இருக்கும் இந்த தேவியை வணங்கினால், ஞானமும் மோக்ஷமும் திண்ணம் என்கிறது சாஸ்திர நூல்கள். இந்த சுக சியாமளா தேவியின் மந்திரத்தை நமக்கு தந்தவர், சுக பிரம்ம மகரிஷி. சுக சியாமளா தேவியின் மந்திரம் பங்க்தி சந்தஸ்ஸில் அமைந்திருக்கிறது.

சுக சியாமளா தேவி தான் மந்திரத்திற்கு தேவதை. வாக் பீஜம், சாக்த பிரணவம், முதலிய பீஜாக்ஷரங்களால் சேர்ந்து உருவான இந்த தேவியின் மந்திரம் அதி சக்தி வாய்ந்தது. அதிலும் முக்கியமாக இந்த தேவியின் மந்திரத்தில், பாலா திரிபுர சுந்தரியின் மந்திரமும் அடங்கி இருப்பதை, சாக்தர்கள் நன்றாகவே அறிவார்கள்.

இந்த தேவியின் மந்திரம் சித்தி அடைந்தவர்களுடன் கிளிகள் கொஞ்சி விளையாடும் என்றும், அவர்கள் வீட்டை எப்போதும், கிளிகள் சுற்றும் என்றும், அனுபவித்த சாதகர்கள் சொல்லுவார்கள். இப்படி மகிமைகள் பல நிறைந்த இந்த சுக சியாமளா தேவியை மனதால் நினைத்து, மதுரை மீனாக்ஷி வடிவில் இருக்கும் சியாமளா தேவியை சென்று சேவித்து வழிபட்டு, அனைத்து விதமான சௌபாக்கியங்களையும் பெறுவோம்.

ஜி.மகேஷ்

The post சுகங்களை எல்லாம் தரும் சுக சியாமளாதேவி appeared first on Dinakaran.

Tags : Sukha Syamaladevi ,Srividya Upasaka ,Bhaskararayar ,Gungumananda ,Gungumanad ,Lalita Sahasranama ,
× RELATED பாஸ்கரராயரை ஆட்கொண்ட லலிதா ஸஹஸ்ரநாமம்