நன்றி குங்குமம் ஆன்மிகம்
ஸ்ரீவித்யா என்கிற சக்தி வழிபாட்டினுடைய முக்கிய அங்கமாக இருப்பதே லலிதா ஸகஸ்ரநாமம். பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கின்ற அந்த மாபெரும் சக்தியை உணர்வதற்குண்டான அனைத்து வழிகளையும் இந்த ஸகஸ்ரநாமம் காட்டுகின்றது. அதாவது இந்த ஸகஸ்ரநாமமே அந்த வழியாகவும் இருக்கின்றது. அப்படி இந்த ஸகஸ்ரநாமம் எந்த வழியாக ஒவ்வொரு ஜீவனையும் செலுத்துகின்றது என்பதைக் காட்ட ஒரு முக்கியமான அவதாரம் நிகழ்ந்தது.
அந்த மகானின் திருப்பெயரே ஸ்ரீபாஸ்கரராயர் என்பதாகும். இந்த மகானே லலிதா ஸகஸ்ரநாமத்திற்கு ஆச்சரியமான உரை எழுதியிருக்கின்றார். லலிதா ஸகஸ்ரநாமத்திலுள்ள நாமங்கள் என்ன சொல்கின்றன, அதற்குள் பிரம்ம சொரூபம் எப்படி ஒளிர்கின்றது என்பதையே சௌபாக்கிய பாஸ்கரம் எனும் பெயரில் அற்புதமான உரையாக எழுதினார்.
இவர்தான் இந்த உரையை எழுத வேண்டுமென்பதை அம்பாள் லீலையாகச் செய்தாள். ஒருமுறை ஆதிசங்கரர் லலிதா ஸகஸ்ரநாம புத்தகத்திற்கு உரை (பாஷ்யம்) எழுத பெரிதும் ஆவலுற்றார். ஒவ்வொரு முறையும் லலிதா ஸகஸ்ரநாமத்தை எடுத்துக்கொண்டு வரச் சொல்லும்போது சட்டென்று அங்கே ஒரு சிறுமி தோன்றி விஷ்ணு ஸகஸ்ரநாம புத்தகத்தையே அவரிடம் கொடுத்தாள். இவ்வாறு மூன்று முறை அந்த சிறுமி லலிதா ஸகஸ்ரநாமத்தை கொடுக்காது விஷ்ணு ஸகஸ்ரநாமத்தையே அளித்தாள்.
ஆதிசங்கரரும் வியந்து ஆஹா… இதுதான் அம்பாளின் திருவுள்ளம்போலும் என்று எண்ணி விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கே உரை எழுதினார். மேலும், தேவியே தனது ஸகஸ்ரநாமத்திற்கு பாஸ்கரராயர் என்பவர் தோன்றி வியாக்கியானம் எழுத வேண்டுமென்று தேவியே நினைத்தாள் என்றும் சொல்வதுண்டு. அதனாலே பாஸ்கரராயர் தனக்குக் கிடைத்த பாக்கியமாக இதைக் கருதி இந்த நூலுக்கு, சௌப்பாக்கிய பாஸ்கரம் என்று பெயரிட்டதாகவும் சான்றோர்கள் பகர்வர்.
பாஸ்கரராயர் மகாராஷ்டிர மாநிலத்தில் சாங்கலீ அல்லது பீட் என்ற ஊரிலோ பிறந்ததாக சொல்லப்படுகின்றது. இவருடைய காலம் கி.பி. 1690 முதல் கி.பி. 1785 வரை என்று கணக்கிட்டிருக்கிறார்கள். பாஸ்கரராயர் விஸ்வாமித்ர கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தையார் பெயர் ஸ்ரீகம்பீரராயர். தாயார் பெயர் கோனமம்பா என்பதாகும். பிறந்த குழந்தையின் முகம் இளஞ் சூரியனைப்போன்ற தேஜஸால் மின்னியது. குழந்தைப் பருவத்திலேயே தனது தந்தையாரிடமிருந்து வாக்தேவதா மந்திர உபதேசத்தைப் பெற்றார். இதனாலேயே மிகவும் கடினமான சாஸ்திர, வேத, வேதாந்த நூல்களில் பிறர் அதிசயக்கும் வகையில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
இவரது தந்தையார் இவரை காசிக்கு அழைத்துச் சென்றார். ஞான கங்கையின் படித்துறையில் தந்தையும் மகனும் நின்று அந்த அருட்காற்றை சுவாசித்தனர். காசியிலேயே உபநயனம் என்கிற பூணூல் வைபவத்தை செய்து வைத்தார். எப்படியாவது வேத, வேதாந்தங்களையும் கிரமமாக கற்றுத் தரவேண்டுமென ஆசைப்பட்டார். ஏனெனில், குழந்தைப் பிராயத்திலேயே வேதாந்தம் கற்காமலேயே இயல்பான ஞானத்தை கைவரப் பெற்றிருந்தார். உள்ளுக்குள் உறையும் பிரம்ம ஞானத்தின் தன்மையை அறிந்திருந்தார். ஆனால், இனி அதை கிரமமாக ஒரு கல்வியாக கற்க வைக்க வேண்டுமென்றுதான் அவர் தந்தையார் ஆசைப்பட்டார்.
நாராயணபேட் என்கிற பிரசித்தி பெற்ற நகரத்திற்கு திரும்பினார்கள். லோகாபள்ளி என்கிற கிராமத்தில் ஸ்ரீநரசிம்மயஜ்வா என்பவரிடம் வேதங்களை கற்றுக் கொடுக்குமாறு தன் மகனோடு கம்பீரராயர் கைகூப்பி நின்றார். அடுத்த சில வருடங்களில் வேத வித்து விருட்சமாகி நிமிர்ந்தது. பின்னர் குஜராத்தைச் சேர்ந்த சிவதத்த சுக்லர் என்பவரிடம் பாஸ்கரராயர் பூர்ணாபிஷேக தீட்சை பெற்று ஸ்ரீவித்யா என்கிற அம்பாளி உபாசனையிலுள்ள அனைத்து மந்திரங்களையும் கற்றுக் கொண்டார். முழுமையான ஸ்ரீவித்யா உபாசகரானார். பின்னர் கங்காதர வாஜ்பேயி என்பவரிடம் கௌட தர்க்க சாஸ்திரத்தை பயின்றார். அவருள் லலிதை வந்தமர்தாள். ஸகஸ்ரநாமங்களும் நட்சத்திரங்கள்போல இதயத்தில் பிரகாசித்தன.
இதற்குப் பிறகு ஆனந்தி என்கிற பெண்ணை மணந்து அந்தப் பெண்ணுக்கு ஸ்ரீவித்யா தீட்சை அளித்தாள். பத்மாவதியம்மாள் என்ற தீட்சா நாமத்தை சூட்டினாள். ஒருமுறை குஜராத்திற்கு விஷயம் செய்தபோது வல்லப சம்பிரதாயத்தைச் ஏந்த வித்வானை வாதத்தில் வென்றார். அடுத்த மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த சந்நியாசியையும் வாதத்தில் ஜெயித்தார். இதன் மூலம் சந்நியாசியின் பூர்வாசிரம உறவினரின் மகளான பார்வதி என்கிற பெண்ணை மணந்தார். இரு மனைவியரோடும் காசிக்குச் சென்று சோமயாகம் செய்தார்.
பாஸ்கரராயரின் வாழ்வில் காசியில் நடந்த முக்கிய விஷயமே இவர் எப்பேர்ப்பட்ட லலிதையின் பக்தராவார் என்று அறியமுடிகின்றது. அந்த லலிதாம்பாளே அவரின் இதயத்தில் அமர்ந்து இவரது வாக்கின் மூலமாக வெளிப்பட்டது. காசியில் உள்ள சில பண்டிதர்களுக்கு ஸ்ரீவித்யா என்கிற சக்தி வழிபாடு குறித்த கேலிகளும் அசூயையும் இருந்தது. சக்தி வழிபாட்டிலுள்ள வாமாசாரம் என்கிற நிந்திக்கப்பட்ட மார்க்கத்தைத்தான் பாஸ்கரராயர் பிரசாரம் செய்துவருகின்றார். அதனால் இவருக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று அனைத்து பண்டிதர்களும் தயாராக இருந்தனர். இதை பாஸ்கரராயரும் அறியாமல் இல்லை.
‘‘என்னோடு வாதம்புரிய விரும்பும் பண்டிதர்கள் தாராளமாக வரலாம்’’ என்று அங்குள்ளோருக்கு அழைப்பு விடுத்தார். அப்போது ஆச்சரியமாக பரமஹம்ஸராகவும் மகாஞானியாகவும் காசியில் திகழ்ந்த குங்குமானந்த நாதர் என்ற மகானையும் அழைத்துக்கொண்டு யாகசாலைக்கு வந்தனர். குங்குமானந்தர் இவரைக் கண்டவுடன் ஆஹா… அந்த தேவியே இவருக்குள் அமர்ந்திருக்கிறாள் என்று ஆனந்தித்தார். குங்குமானந்தரின் சிறப்பு என்னவெனில் இவரின் மீது பூசப்படும் விபூதியெல்லாம் குங்குமமாகி விடுமாம். அதனாலேயே இவருக்கு குங்குமானந்தர் என்று பெயர் வந்தது. அப்பேர்ப்பட்ட குங்குமானந்தரும் பாஸ்கரராயரை கூர்மையாக பார்த்தபடி இருந்தார்.
வாதம் தொடங்கியது. முதலில் சாஸ்திரங்கள், வேதங்கள், உபநிஷதங்களிலிருந்து விவாதிக்கப்பட்ட அனைத்திற்கும் அநாயாசமாக பதிலளித்தபடி இருந்தார். இவர் கூறும் பதிலைக் கேட்டு அனைவரும் வாயடைத்துப் போயினர். இவ்வளவு சுலபமாக பதில் அளிக்கின்றாரே, கொஞ்சம் கடினமான கேள்வியாகக் கேட்போமே என்று அந்தப் பண்டிதர்கள், ஸகஸ்ரநாமத்திலுள்ள 237வது நாமத்திலுள்ள, ‘‘மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா’’ என்ற நாமத்திலுள்ள அறுபத்து நான்கு கோடி யோகினீ தேவதை களின் பெயர்கள், உற்பத்தி, அவற்றின் முழு சரித்திரத்தையும் சொல்ல முடியுமா என்று கேட்டுவிட்டு இவர் எப்படி பதில் சொல்லப் போகிறார் என்று அகங்காரமாக அமர்ந்தனர்.
பாஸ்கரராயர் கண்களை மூடினார். உள்ளிருந்து அம்பாள் சிரித்தாள். இதோ சொல்கிறேன் என அவர் ஒவ்வொரு யோகினியின் பெயர்களையும் சொல்லத் தொடங்கினார். நீங்கள் முடிந்தால் எழுதிக் கொள்ளுங்கள் என்றும் கட்டளையிட்டார். மடைதிறந்த வெள்ளம்போல அறுபத்து நான்கு கோடி யோகினிகளின் பெயரும் வந்தபடி இருந்தன. அந்தப் பண்டிதர்களால் எழுத மாளாது சோர்வுற்றனர். என்ன செய்வது என்று திகைத்து நின்றனர்.
இறுதியில் குங்குமானந்தரே அந்த பண்டிதர்களைப் பார்த்து பேசத் தொடங்கினார். ‘‘பண்டிதர்களே… உங்களால் இவரை வெல்ல முடியாது. இவர் அம்பாளின் அனுக்கிரகத்தைப் பெற்ற உபாசகர். இவரின் தோளில் அம்பாள் அமர்ந்திருக்கிறாள். உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் அவளே பதில் கொடுத்துக்கொண்டிருக்கிறாள்’’ என்று சொன்னதோடு மட்டுமல்லாது குங்குமானந்தர் அபிஷேக தீர்த்தத்தை அவர்கள் கண்களில் தெளித்து, இப்போது அவரைப் பாருங்கள் என்று சொன்னார். அவர்கள் பார்க்கும்போது அம்பாள் அவரின் தோளின் மீது அமர்ந்திருந்தாள். அவர்களும் தரிசித்தனர். பின்னர் அனைத்துப் பண்டிதர்களும் பாஸ்கரராயரிடம் வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டு விடைபெற்றனர்.
பாரத தேசமெங்கும் பாஸ்கரராயரின் புகழ் பரவியபடி இருந்தது. மெல்ல மகாராஷ்டிரம், தஞ்சை என்று நகர்ந்தபடி இருந்தார். அங்காங்கு அற்புதங்களும் நடந்தபடி இருந்தன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். தஞ்சையை ஆண்ட போஸல (போஸ்லே) அரசர் ஸ்ரீபாஸ்கரராயரை அழைத்தார். அதன்படி தஞ்சைக்கு வந்த பாஸ்கரராயருக்கு தஞ்சைக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தையே இனாமாகக் கொடுத்தார். அதன்பிறகு கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவாலங்காட்டிற்கு வந்தார். அங்கிருந்த தன்னுடைய தர்க்க சாஸ்திர பண்டிதரான கங்காதர வாஜபேயியை சந்தித்தார். பிறகு அருகேயே காவிரிக் கரைக்கருகே பாஸ்கரராஜபுரம் என்கிற அழகிய கிராமத்தை நிர்மாணித்தார். இன்றும் அந்த கிராமம் பாஸ்கரராஜபுரம் என்று அழைக்கப்படுகின்றது.
சிலகாலம் கழித்து கும்பகோணத்திற்கு அருகேயுள்ள மத்யார்ஜுனம் என்றழைக்கபடும் திருவிடைமருதூருக்கு வந்தார். அங்குள்ள மஹாதானத் தெருவில் வசிக்கத் தொடங்கினார். மாலை வேலையில் தன் வீட்டுத் திண்ணையிலுள்ள தூணின் மீது காலைத் தூக்கி வைத்தபடி சாய்மானமாக அமர்ந்திருப்பார். தினமும் வேப்பத்தூர் என்கிற பக்கத்து கிராமத்திலிருந்து ஒரு சந்நியாசி மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்கு அந்த வழியாகப் போவது வழக்கம். அப்படிச் செல்லும்போது எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள். ஸ்ரீபாஸ்கரராயரோ அந்த சந்நியாசியை கண்டுகொள்வதே இல்லை.
ஒருநாள் அந்தத் துறவியும் பாஸ்கரராயரும் பிரதோஷ காலத்தில் தற்செயலாக எதிரெதிராக சந்தித்துக் கொள்ள நேர்ந்தது. அப்போது அங்கிருந்த ஜனங்கள் முன்னிலையில் அந்த சந்நியாசி பாஸ்கரராயரை இழிவாகப் பேசினார். அதாவது தான் அந்தத் தெரு வழியாகப் போகும்போது வேண்டுமென்றே இவர் அமர்ந்திருப்பார் என்றெல்லாம் பேசினார். பாஸ்கரராயர் சந்நியாசியை நிமிர்ந்து பார்த்தார்.
‘‘சுவாமிகளே… இல்லற தர்மத்தின்படி நான் உங்களை வணங்கியிருந்தால் உங்களின் சிரம் வெடித்திருக்கும். உங்களை காப்பாற்றவே நான் வணங்கவில்லை’’ என்றார். அதோடு மட்டுமில்லாமல் அந்த சந்நியாசியின் தண்டம், கமண்டலம் இவற்றை ஒரு ஓரமாக வைத்தார். மெதுவாக அதை வணங்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். சட்டென்று அந்த தண்ட, கமண்டலங்கள் வெடித்துச் சிதறின. அந்தக் கணமே அந்த சந்நியாசி மன்னிப்பு கோரினார்.
அன்றிலிருந்து அந்தச் சந்நியாசி தெருவில் செல்லும்போதெல்லாம் பாஸ்கரராயர் வீட்டிற்குள் சென்று விடுவாராம். இப்பேர்ப்பட்ட சக்தி அவருக்கு வந்ததன் காரணம் என்னவெனில் ஸ்ரீமகாஷோட நியாசமே ஆகும். இந்த நியாசம் என்கிற அந்த தெய்வத்தை தன்னுள்ளே பொருத்திக் கொள்ளும் மாபெரும் வழிமுறையை அறிந்திருந்தார். அவ்வாறு விடாது செய்து வருபவர்கள் அர்த்தநாரீஸ்வர சொரூபமாக ஆகிவிடுகிறார்கள்.
பாஸ்கரராயர் மீமாம்ஸை, வேதாந்தம், நியாயம், மந்திர சாஸ்திரம் என்று பல விஷயங்களை கொண்டு ஏறத்தாழ 42 முக்கிய நூல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாது பல்வேறு ஆலயங்களை நிர்மாணித்து அங்கு நடக்க வேண்டிய பூஜை முறைகளையும் நெறிப்படுத்திக் கொடுத்தார்.
காசியில் ஸ்ரீசக்ரேஸ்வரர் ஆலயத்தையும், மூலஹ்ரதத்தில் ஸ்ரீபாண்டுரங்க சுவாமி கோயிலும், கொங்கணத்தில் ஸ்ரீகம்பீரநாத சுவாமி ஆலயம், ராமேஸ்வரத்தில் ஸ்ரீவஜ்ரேஸ்வரர் ஆலயம், ஸம்நதி என்ற தலத்தில் தன் குல தெய்வமான சந்திர லம்பாதேவியின் ஆலயத்தை ஸ்ரீசக்ர வடிவத்தில் அமைத்தார். கேரளத்தில் ஸ்ரீகஹோளேஸ்வரர் கோயிலை அமைத்தார். இவரது காலத்திற்கு பிறகு இவரது மனைவியான பத்மாவதி அவர்கள் காவிரிக் கரைக்கு அருகே பாஸ்கரராஜபுரத்தில் பாஸ்கரேஸ்வரர் ஆலயத்தை அமைத்தார்கள்.
இந்த ஸ்ரீபாஸ்கரராய தீட்சித பாரதி என்கிற மகான் தனது 95 வயதில் தன்னுடைய பூத உடலை நீத்தார். இவரால்தான் லலிதா ஸகஸ்ரநாமத்திற்கு அழகான விளக்கவுரை எழுதப்பட்டது. இவரது சரித்திரத்தை ஓரளவிற்கு அறிந்து கொள்ளாமல் லலிதா ஸஹஸ்ரநாமத்திற்குள் நாம் புக முடியாது.
தொகுப்பு: ரம்யா வாசுதேவன்
The post பாஸ்கரராயரை ஆட்கொண்ட லலிதா ஸஹஸ்ரநாமம் appeared first on Dinakaran.