“எங்கு செல்கிறாயடா? நில்! நில்!’’ என்று ஜடாயு சொல்லிக் கொண்டே தேரை நெருங்கினார். ஊழிக்காற்றின் வேகத்துடன் ராவணன் அருகில் சென்றார்.(இது வரை சென்ற இதழில் கண்டோம்…இனி…)“உத்தமியான தேவி சீதாவை எங்கு கொண்டு செல்கிறாய்?’’ எனக் கூறியபடி ராவணனைத் தடுத்தார். சீதாவிடம், “எதற்கும் அஞ்ச வேண்டாம் அம்மா’’ என்று தைரியமூட்டினார்.“தேரை நிறுத்து. உன் கொடுஞ்செயலையும் நிறுத்து. இல்லையேல் வானம் மட்டும் அல்ல எல்லா திசைகளையும் மறைத்துவிடுவேன்.
ஜாக்கிரதை. உன்னுடைய கெட்ட காலம்தான் உனக்கு இந்தக் கெட்ட புத்தியை தந்திருக்கிறது. உன்னை மட்டுமல்ல உன் வம்சத்தையே கருவறுக்க ராமன் இருக்கிறான். எப்படிப்பட்ட இழிவான செயலை நீ செய்யத் துணிந்து இருக்கிறாய்? உலகத்துக்கெல்லாம் அன்னையைப் போன்ற சீதாதேவியை விட்டுச் சென்றுவிடு, பிழைத்துப் போ! ஏதோ அறியாமல் பிழை செய்துவிட்டாய். உன்னை மன்னித்தேன். இதற்கு மேலும் நீ அடாத செயல்கள் செய்தால், நீ வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லாமல் ராமன் செய்துவிடுவான்.
உன்னை இங்கு அதன்பின் காப்பாற்றுவதற்கு யார் இருக்கிறார்கள்? எனக்கு என்னவோ நீ நஞ்சை உண்டு உன் உடலை வளர்த்து வருகிறாய் என்று தோன்றுகிறது. ராமன் யுத்தம் புரிந்து உன்னைக் கொன்று தீர்ப்பான். வில்லாளன் ராமனை வெல்வதற்கு உன்னாலும் முடியாது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எவராலும் முடியாது. மூவுலகுக்கும் மூலமானவன், முதற்பொருளானவன், சிவனிடம் நீ பெற்ற எல்லா வரத்தையும் தன் வில்லால் வெல்வான். இது நிச்சயம்’’ என்று சொல்லியபடி ஜடாயு ராவணனைத் தாக்க முற்பட்டார்.
“மூப்படைந்த உனக்கு இவ்வளவு பேச்சு வருகிறதே. ஆச்சரியம்தான். என் சினத்தின் முன் நிற்காதே. மனித உடல், கழுத்துக்கு மேல் கழுகு தோற்றம். கண்பார்வையும் உன் அலகும் கொஞ்சம் கூர்மை. அவ்வளவே! உனக்கு எந்த அளவு துணிவு இருந்தால் என்னுடன் மோதத் துணிந்திருப்பாய். சூடான இரும்பின் மேல் நீரை ஊற்றியது போல் நீ ஆகிவிடுவாய். உன் உயிரைக் காத்துக்கொள்! பறந்து சென்றுவிடு! வழியில் இருந்து ஒதுங்கிவிடு!’’ என ராவணன் கோபம் கொண்டான்.
“ராவணா! இந்த ஆணவப் பேச்சால்தான் நீ அழியப் போகிறாய். அன்னையே! நீங்கள் கலங்க வேண்டாம். வில்லேந்தி ராமன் நிச்சயம் வரத்தான் போகிறான் இவன் தலையைக் கொய்து மண்ணில் விழத்தான் செய்யப்போகிறான். அதை நாம் பார்க்கத்தான் போகிறோம்’’ என ஜடாயு ராவணனைத் தாக்கினார். ராவணன் சிரித்துக் கொண்டே சினந்தான்.
ஜடாயு சிறகாலும் நகங்களாலும் காயம் உண்டாக்கினார். ராவணன், ஜடாயுவின் மீது அம்புகளை ஏவத் தொடங்கினான். ஜடாயு பத்து தலைகளையும் அவன் மார்பையும் குத்தினார். “இதோ உன்னுடைய வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது! என் ராமன் உன்னையும் உன் ராஜ்யத்தையும் அழித்து முடிப்பார். அதன் துவக்கத்தை நீயே இப்போது பார்க்கப் போகிறாய்!’’ என்று சொல்லியபடி அந்தத் தேரின் மேலே பறந்துகொண்டிருந்த வீணைக்கொடியை ஜடாயு பிய்த்து எறிந்தார்.
ராமராவண யுத்தத்தின் முதல் சம்பவம் நடந்தது. வானவர்கள் மகிழ்ந்தார்கள். ஜடாயு, ராவணனின் ஒவ்வொரு தலையின் மேலிருந்த கிரீடத்தை அலகால் குத்தி கீழே தள்ளினார். காதுகளில் உள்ள குண்டலங்கள், மார்பில் அணிந்திருந்த முத்து மாலைகள் என ஒவ்வொன்றாகக் கீழே மண்ணில் விழவைத்தார். ராவணன் வெகுண்டு தன் சூலாயுதத்தை ஜடாயுமீது எறிந்தான். அந்தச் சூலாயுதம், வெட்கித் தலைகுனிந்து ராவணனிடமே திரும்பி வந்தது. இரண்டாம் முறையாகச் சூலாயுதத்தை ஜடாயுவின் மீது எறிந்தான். மதிக்கத் தெரியாதவன் வீட்டு விருந்திற்குச் சென்றவன் எப்படி அவமானமுற்றுத் திரும்புவானோ, அப்படி சூலம் திரும்பி வந்துவிட்டது. இராவணன் மிகவும் கோபம்கொண்டான்.
மூன்றாவது முறையாகச் சூலத்தை ஜடாயுவின் மீது எறிந்தான். ஒரு பெண்ணின் பார்வை எப்படி ஒரு தவசியை பாதிக்காதோ அதுபோல சூலம் இராவணனிடமே திரும்பவும் வந்தது. ஜடாயு தன் முயற்சியில் சிறிதும் தளரவில்லை. இராவணனின் தலையையும் மார்பையும் கொத்தத் தொடங்கினார். இராவணன் தன்னிடம் இருந்த தண்டத்தால் அவரை அடித்தான். ஜடாயு துடித்தார். தேர் மேல் விழுந்தார். இராவணன் தன் வாளால் ஜடாயுவின் சிறகை வெட்டினான். ஜடாயு தன் அலகினால் மரங்கொத்திப் பறவையைப் போல இராவணனின் தேரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொத்திச் சிதைத்து விட்டார். இராவணனைப் பார்த்து, “உன்னுடைய வீரம் அவ்வளவுதானா? என்னையே நீ வெல்ல முடியவில்லை. நீயாவது ராமனை வெல்வதாவது!” என்ற ஜடாயுவின் பேச்சு, அதுவும் சீதாவின் முன்னால், இராவணனின் சுயத்தை சுட்டது. இராவணனின் கோபம் உச்சம் அடைந்தது. மிகவும் உக்கிரமானான்.
“வாரணம் பொருந்திய மார்பை உடையவன் நான். என் மணி முடிகளை மண்ணில் தள்ளிவிட்டாய். என் ஆபரணங்களைச் சிதைத்து விட்டாய். என்னையும் உன் அலகால் குத்திக் கிழித்த வண்ணம் இருக்கிறாய். ஒரு கிழப்பறவைக்கு இவ்வளவு முடிகிறதா? இதோ உன் விதியை முடிப்பேன்’’ என்று கூறியபடி சிவன் தந்த சந்திரகாசம் எனும் வாளால் ஜடாயுவை வெட்டி வீழ்த்தினான். சீதா நடுநடுங்கினாள்.
“என் இன்னலை தீர்க்க வந்தவருக்கும் இந்த நிலை ஆனதே! நல்லவர் தோற்க, நரகன் வெல்வது முறையா? வேதம் பொய்க்குமா! அறம் என்பதே இல்லையா? தர்மமே! நீ காணாமல் சென்றுவிட்டாயா!” எனப் பலவாறு அரற்றினாள். தேர் முழுவதுமாக சேதம் அடைந்ததனால், பர்ணசாலை யுடன் சீதாவைத் தன் தோளில் சுமந்தபடி இராவணன் பறந்தான். அசோகவனத்தில் சீதாவைச் சிறைப்பிடித்தான். சீதா புலம்பினாள். பர்ணசாலை இருந்த இடத்தை நோக்கி ராமனும் இலக்குவனும் விரைந்தார்கள். அங்கு சீதா இல்லாததைக் கண்ணுற்று அதிர்ச்சி அடைந்தார்கள். “அண்ணா! இங்கு இருந்த பர்ண சாலையையும் மண்ணோடு பெயர்ந்து எடுத்துச் சென்றிருக்கிறான்.
இது யாரோ ஒரு மாயாவியின் வேலையாக இருக்கக்கூடும்’’. என்றான் லட்சுமணன். ராமன் ரௌத்திரமானான். புவியே சுழல மறந்தது. செய்வதறியாது திகைத்தது. ராமனின் கோபம் யார் மீது திரும்பும் என்று தெரியாமல் ஸ்தம்பித்தது. இலக்குவனுக்கு ராமனின் கோபம் புரிந்தது. நிலைமையின் வீரியம் அவனை முதன் முதலாக நிதானமாக இருக்கச் செய்தது.
ராமனின் தோளைப் பற்றி,“அண்ணா! உங்கள் கோபம் நியாயமானதுதான். தயவு செய்து சீற்றம் தணிந்து, தேவி எங்கு சென்று இருக்கிறார்? என்று தேடத்துவங்குவோம். இங்கு பாருங்கள் தேரின் தடம் தெரிகிறது. தெற்கு நோக்கித்தான் சென்றிருக்கிறது’’ என ராமனைச் சாந்தம் செய்தான். தேரினை பின்தொடர்ந்து சென்றார்கள். சற்றுத் தொலைவில் தேரின் தடம் மறைந்துவிட்டது. “பறக்கக்கூடிய தேராக இருக்கக்கூடுமோ? நாம் இந்த தென்திசையிலேயே சென்று தேடுவோம்.
அண்ணா!’’ என்றான் லட்சுமணன். பர்ணசாலை இருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்திலேயே போர் நிகழ்ந்தது போலப் பொருட்கள் இறைந்துகிடந்தன. உடைந்த கிரீடங்கள், முறிந்த வில்கள், அம்புகள், ரத்தம் தோய்ந்த ஆபரணங்கள் போன்றவை ஆங்காங்கே தென்பட்டன.“தம்பி! இந்த இடத்தைப் பார்க்கும் பொழுது, நிறைய பேர் போர்புரிந்தது போல தோன்றுகிறது அல்லவா?’’ (ராமர்)“இல்லை. அண்ணா! இங்கு நிறைய கிரீடங்கள் இருக்கின்றன. ஆனால், காலில் அணிகின்ற ஆபரணம் ஒரே ஒரு ஜோடிதான் இருக்கிறது. ஆகவே இது பத்துத் தலை கொண்ட இராவணனின் செயலாக இருக்கக்கூடுமோ என அஞ்சுகிறேன்’’ (லட்சுமணன்)“தம்பி! அங்கே பார். நம் பெரியப்பா ஜடாயு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறாரே!’’ இறக்கைகள் வீழ்த்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஜடாயுகிடந்தார்.
“ராமா! ராமா! வந்துவிட்டாயா? உனக்காகத்தான் நான் இன்னும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்கிறேன்.’’ (ஜடாயு) “பெரியப்பா! என்ன நிகழ்ந்தது?’’ என ராமர் வருத்தத்துடன் கேட்டார். ஜடாயு முனகலுடன் பேசத் தொடங்கினார். “சீதாவை ராவணன் ஒரு தேரில் கவர்ந்து சென்றுகொண்டிருந்தான். அதைப் பார்த்து நான் வெகுண்டேன். அவனுடன் போரிட்டேன். அவன் கொடியை வெட்டி வீழ்த்தினேன். அவனது பத்து கிரீடங்களையும் தள்ளிவிட்டேன்.
அவன் அங்கம் எங்கும் என் அலகினால் குத்திக் கிழித்தேன். அவ்வளவுதான் என்னால் முடிந்தது. என்னால் அவனை வெல்ல முடியவில்லை. அவன் என் இறக்கைகளை வெட்டி வீழ்த்திவிட்டான். எந்த ஒரு பெண்ணைத் தொட்டாலும் அவன் தலை சுக்குநூறாக உடையும் என்பதினால், நம் சீதாவின் மேல் அவன் விரல் நுனிகூட படவில்லை. சீதாவிற்கு தைரியம் சொல்லி உள்ளேன். சீதாவுடன் பர்ணசாலையைத் தோளில் சுமந்து அவன் பறந்துவிட்டான்.’’ என ஜடாயு சொல்லி முடித்தார்.
“எப்படிப்பட்ட கொடூரம் அரங்கேறியிருக்கிறது! விண்ணோர்களுக்குத் தெரியாமலா நிகழ்ந்திருக்கும்? அறம் என்பது அறவே இல்லையா? சீதா தொலைந்தது எனக்கு வருத்தம்தான். ஆனால், குற்றுயிருடன் இருக்கும் இவரை நினைக்கையில் இந்தப் பிரபஞ்சத்தையே அழிக்க வேண்டும் என்று தோன்றுகிறது’’ என்று ராமன் ஜடாயுவை மடியில் சாய்த்துக் கொண்டான். ராமனுக்குக் கண்கள் கலங்கின. இதயம் விம்மியது.
“அன்று என்னைப் பெற்ற தந்தை இறப்பதற்கு நான் காரணமாகிவிட்டேன். இன்று எனக்கு வாய்த்த மற்றொரு தந்தையையும் இழந்துவிடுவேன் போலிருக்கிறதே! இது நான் செய்த பாவமா? உங்கள் இருவரின் நிலைக்கும் நான் பொறுப்பாகிவிட்டேன்.’’ என ராமர் வருந்தினார்.“ராமா! என் அருகில் அமர்ந்து கொள். என்னால் பேச முடியவில்லை. ஆனாலும் உன்னிடம் சொல்ல வேண்டியவற்றை சொல்லிவிடுகிறேன். அதற்கு அந்த நாராயணன் எனக்குத் துணை இருப்பான்.
நான் சொல்வதை கவனமாகக் கேள். தேவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. ராவணனின் பராக்கிரமமும் அவனின் கொடுஞ்செயலும் எல்லோரும் அறிவார்கள். அவனை எதிர்த்து போரிடுவாதாவது? அவனை வெல்வதாவது? அதெல்லாம் எங்களால் முடியக்கூடுமா? ராவணனை வதைப்பது உன்னுடைய செயல் அல்லவா? உன் ஒருவனால் மட்டுமே செயக்கூடிய செயல் அல்லவா? அப்படி இருக்கையில், மற்றவர் மீது கோபம் ஏன்? கொஞ்சம் யோசித்துப் பார்! இந்த அடர்ந்த காட்டில் பர்ணசாலையில் சீதாவை தனியே விட்டுச் சென்றது, யாருடைய குற்றம்? உன்னுடைய பொறுப்பில் தவறு நேர்ந்துவிட்டது. நீதானே அதை சரி செய்யக்கூடும்? எல்லாம் விதிப்படிதான் நடந்தேறும்.
முப்புரம் எரித்த சிவன், பிச்சை எடுத்ததன் காரணம் விதியன்றி வேறென்ன? சூரியனைப் பாம்பு விழுங்குவதன் காரணம் விதியன்றி வேறென்ன? நிலவு தேய்ந்தும் பின் வளர்ந்தும் வருகிறதே, அதன் காரணம் விதியன்றி வேறென்ன? மேற்கொண்டு நிகழ வேண்டியதைச் செய்யத் துவங்கு. எல்லோரின் ஆசியும் உனக்குப் பரிபூரணமாக உண்டு.’’ என ஜடாயு ஆசீர்வதித்தார். இலக்குவன் கொணர்ந்த நீரைச் சிறிது அருந்தினார், ஜடாயு. மீண்டும் பேசத் துவங்கினார்.
“ராம ராவண யுத்தம் என்பது நீண்ட பயணம். எல்லாப் பயணமும் ஒரு காலடியில்தானே தொடங்கும். முதல் அடியை நான் வைத்துவிட்டேன். இந்த பாக்கியம் யாருக்குக் கிட்டும்? நான் பிறந்ததன் பலனை அடைந்துவிட்டேன். அவனது வீணைக் கொடியை மண்ணில் விழச்செய்தேன். போரில் நீ அவனை வென்று மண்ணில் விழச்செய்வாய்.’’ என்றபடியே தன் அலகினால் ராமனின் உச்சியை முகர்ந்தார். இலக்குவனின் கரம் பற்றினார். ஜடாயுவின் உயிர் பிரியும் நேரம் வந்துவிட்டதாக ராமன் உணர்ந்தார். ஜடாயுவின் தலையைத் தனது வலது தொடையில் வைத்துக் கொண்டான். ஒரு தர்ப்பைப் புல்லினால், ஜடாயுவின் வலது காதில் நுனிபடும்படி தனது வலது கையால் பிடித்துக் கொண்டார். குனிந்து காதில் கர்ண மந்திரத்தைச் சொல்லத் துவங்கினான்.
“ஆயுஷ: ப்ராணம் சந்தநு – ப்ராணாது அபாநம் சந்தநு – அபாநாது வ்யாநம் சந்தநு” – என மந்திரம் தொடர்ந்தது.
ராமன் மந்திரம் சொல்லச் சொல்ல ஜடாயுவிற்குத் தனது ஆன்மா மகிழ்வுடன் விடை பெறத் தயாராக இருப்பது புரிந்தது. ராமன் ஒருபுறமும் இலக்குவன் ஒருபுறமும் துளசிதீர்த்தத்தை ஜடாயுவிற்கு ஊற்றினர். இரண்டு மிடறு நீர் உள்ளே சென்றது தொண்டையில் தெரிந்தது. மூன்றாவது மிடறு நீர் வெளியே வந்துவிட்டது. ஜடாயுவின் கண்கள் கடைசி முறையாக ராமனைப் பார்த்தன. அந்தப் பார்வையின் அர்த்தத்தை ராமன் புரிந்துகொண்டான்.
“உங்களின் அந்திமக் கிரியைகளை நானே செய்வேன். நீங்கள் விடைபெறுங்கள்’’ என ராமர், அவர் மனதுடன் பேசினான். மிகுந்த நிறைவுடன் ஜடாயு, “பல்லாண்டு! பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு நீ வாழ்வாய்! ராமா!’’ என்று மனதில் உச்சரித்தபடி, நிரந்தரமாக கண்களை மூடினார். ஜடாயு மரணித்த அந்த நொடியில், காட்டில் உள்ள பறவைகள், விலங்குகள், மரங்கள், செடி கொடிகள், புற்கள், கற்கள், மண் துகள்கள் என எல்லாமும் கண்ணீர் சிந்தின.“தம்பி! சூரியன் அஸ்தமிக்கின்ற நேரம் வரப்போகிறது. அதற்கு முன் எல்லா ஏற்பாடுகளையும் நீ செய்துவிடு!” என சொல்லிவிட்டு, ராமன் தனியே, அடர்ந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்தான்.
(தொடரும்…)
The post ஜடாயு பெரியப்பா… appeared first on Dinakaran.