பூஜை செய்ய தேங்காய் உடைக்கும் பொழுது அழுகிவிட்டால் என்ன செய்வது?
– ஸ்ரீராம், சென்னை.
தேங்காய் அழுகிவிட்ட பிறகு என்ன செய்ய முடியும்? தூக்கிப் போட்டுவிட்டு வேறு தேங்காய்தான் உடைக்க வேண்டும். இதில் மனம் வருத்தப்படக் கூடாது. சில நேரங்களில் என்னதான் பார்த்துப் பார்த்து வாங்கினாலும் தேங்காய் அழுகிவிடுகிறது. ஆனால், ஒன்று கவனிக்க வேண்டும். தொடர்ச்சியாக நீங்கள் வெவ்வேறு தேங்காயை உடைக்கும்போது, எல்லாத் தேங்காயும் அழுகிவிட்டால் ஏதோ ஒரு சிரமம் வரப் போகிறது என்பதற்கான குறியீடாக எடுத்துக் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
?செவ்வாயோ வெறும் வாயோ என்றெல்லாம் சொல்லுகின்றார்கள் செவ்வாய்க்கிழமை பொதுவாக எந்த நல்ல காரியம் செய்வதற்கும் ஏற்ற நாளாக இல்லையே!
– வாசுதேவன், தேனி.
ஒவ்வொரு நாளும் அதற்கான காரியங்களுக்கு ஏற்றதாகவே இருக்கின்றன. செவ்வாய்க் கிழமை திருமணம் போன்ற சில நிகழ்ச்சிகளை செய்யமாட்டார்கள். செவ்வாய் பூமிக்காரகன். விவசாயத்தில் எருவிடுவதற்கு ஏற்றநாள் செவ்வாய்க்கிழமை. அதேபோலவே செவ்வாய் ஹோரையில் ஆபரேஷன் சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆயுதங்கள் தயாரிப்பதற்கு ஏற்றநாள் செவ்வாய். புதிய எந்திரங்கள் தயாரிப்பதற்கு ஏற்ற நாள். திருமணம் போன்ற நிகழ்ச்சிகள்தான் கூடாதே, தவிர செவ்வாய்க்கும் இப்படி சில சிறப்புகள் உண்டு..
? யாரை நம்மால் தோற்கடிக்க முடியாது?
– அ.சிவன்தாசன், புதுச்சேரி.
வலி, தோல்வி, புறக்கணிப்பு, இழப்பு, அவமரியாதை, இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் முன்னேறக்கூடியவர்களை நம்மால் தோற்கடிக்க முடியாது. அவர்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.
? வாழ்க்கை அழகாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
– லலிதா பிரகாஷ், திருச்சி.
வாழ்க்கையின் அழகு உங்கள் மனதில்தான் இருக்கிறது. அழகிய விஷயங்களைத் தேடுவதைவிட நம்மிடம் உள்ள விஷயங்
களையே அழகாக்கினால் வாழ்க்கை அழகாக இருக்கும்.
? ஒரே வரியில் நவக்கிரகங்களை பிரார்த்தனை செய்வதுபோல ஏதாவது மந்திரம் இருக்கிறதா?
– மூர்த்தி, மதுரை.
எப்பொழுதும் பூஜையின் ஒரு பகுதியாக நவகிரக மந்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். கீழேயுள்ள மந்திரத்தை தினம் 16 முறை ஜபித்தால் வறுமை, பிணி, பகை நீங்கி வாழ்வில் மேன்மை அடையலாம்
‘‘ஓம் ஹ்ரீம் ஆதித்யாயச சோமாய
மங்களாய புதாயச
குரு சுக்ர சனிப்யச்ச ராஹவே கேதவே நமஹ”
? சில மனிதர்களை மாற்றவே முடியவில்லையே?
– சுபஸ்ரீ, சென்னை.
ஒருவரின் சுபாவத்தை எளிதில் மாற்ற முடியாது. என்னதான் தேன் ஊற்றி வளர்த்தாலும் பாகற்காயின் கசப்புச் சுவையை மாற்ற முடியுமா, என்ன? அதை அனுசரித்துத் தான் வாழ வேண்டும்.
?கரிநாள் என்பது என்ன? அதில் நல்ல காரியங்களைச் செய்யக்கூடாது என்கிறார்களே!
– காளியப்பன், திண்டிவனம்.
பொதுவாக கரிநாள் அன்று சுபங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது நம் தமிழகத்தில் வழக்கம். கரிநாள் என்பது திதி நட்சத்திரம் போல மாறாது. ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாளாகவே இருக்கும். உதாரணமாக சித்திரை 6, 15.ம் தேதி எல்லா வருடங்களிலும் கரிநாளாகவே இருக்கும். அதை பஞ்சாங்கத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
? கடன்தொல்லை தீர்வதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?
– ஜெயபாலன், திருப்பதி.
சிக்கனமான வாழ்வும், சேமிப்பும் கடனில்லாத வாழ்க்கையைத் தரும். இப்பொழுது பெரும்பாலும் சம்பாதிப்பதற்கு முன்னாலேயே கடன் வாங்க ஆரம்பித்து விடுகின்றோம். இந்த நுகர்வுக் கலாச்சாரம் எப்பேர்பட்ட பணக்காரர்களையும் கடன்காரர் ஆக்கிவிடுகின்றது. ஜாதகரீதியாக ஆறாம் இடம் கடன், நோய், பகை இவற்றைக் குறிப்பிடும் இடம். லக்கினத்தை விட ஆறாம் இடம் வலுவாக இருந்தாலும் அல்லது ஆறாம் இடம் கெட்டுப் போனாலும் அவர்களுக்கு கடன் வரும்.
ஆறு என்பது சுக்கிரனுக்குரிய எண். சுக்கிரனின் அருள் அதாவது மகாலட்சுமியின் அருள் இருந்தால் கடன் வராது. நன்றாக உழையுங்கள். சேமியுங்கள். கடன் வராது. வெள்ளிக்கிழமையன்று வீட்டில் காலையும் மாலையும் நல்ல மணமிக்க சாம்பிராணி தூபம் போட்டு, மகாலட்சுமி ஸ்தோத்திரம் படியுங்கள் ஆனால், இவற்றையெல்லாம் நன்கு திட்டமிட்டு உழைத்து விட்டுச் செய்ய வேண்டும் மகாலட்சுமி அருள் தர வேண்டும் என்றாலும் ஒரு காரணம் வேண்டும் அல்லவா!
?நாம் மனிதர்களாக இருப்பதற்கு என்ன அடையாளம்?
– அபிலாஷ், சென்னை.
இது அற்புதமான கேள்வி. ஆன்மிகத்தில் மிகச்சிறந்த விடை இதற்கு உண்டு. எவன் ஒருவன் பிறருடைய துன்பத்தை, தன்னுடைய துன்பமாகக் கருதி, அந்தத் துன்பத்தை நீக்குவதற்கு முயல்கின்றானோ அவன்தான் உத்தமன் என்று சொல்கின்றது ஆன்மிகம். டால்ஸ்டாய் இதை வேறு விதமாகச் சொல்லுவார். உங்கள் வலியை நீங்கள் உணர்ந்தால் உயிரோடு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பிறர்படும் வலியை நீங்கள் உணர முடிந்தால் மனிதர்களாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் என்பார்.
? சந்திர கண்டம் என்றால் என்ன?
– பார்கவி வரதராஜன், ஸ்ரீரங்கம்.
எந்த திசையில் பயணம் செய்யக் கூடாது என்பதை சொல்லும் குறிப்புகளில் ஒன்று சந்திர கண்டம். ஒரு காலத்தில் பயணம் செய்யும்போது இந்த விஷயங்களை எல்லாம் பார்த்தார்கள். சந்திரன் அந்த நாளில் எந்த ராசியில் இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். அந்த ராசிக்குரிய திசையில் பிரயாணம் கூடாது.
மேஷமும், ரிஷபமும் – மேற்கு,
மிதுனம் – வாயு,
கடகம் – சிம்மம் வடக்கு,
கன்னி – ஈசானம்
துலாம் – விருச்சிகம் கிழக்கு, தனுசு, அக்னி,
மகரம் – கும்பம், தெற்கு,
மீனம் – நிருதி,
இவ்விதம் கண்டறிந்து சந்திரன் எந்த ராசியிலிருக்கிறாரோ அந்த ராசி திக்கில் யாத்திரை செய்யக்கூடாது. இதுதான் சந்திர கண்டம்.
?திருக்குறள் ஏழு சீர்களில் இரண்டு வரிகளில் அமைந்திருப்பதற்கு என்ன காரணம் ?
– மோகன், செங்கல்பட்டு.
திருக்குறளுக்கும் ஏழு என்ற எண்ணுக்கும் நிறைய பொருத்தங்கள் உண்டு.திருவள்ளுவர் 7 எழுத்து. சீர்கள் 7. அதிகாரங்கள் 133. கூடினால் ஏழு வரும். மொத்த பாட்ல்கள் 1330. கூடினால் ஏழு வரும். ஏழு என்ற எண்ணைப் பற்றித் திருக்குறள் எட்டு இடங்களில் பேசுகிறது. இதைவிட சுருக்கமாக உலகத்தில் யாரும் நல்ல விஷயங்களைக் கூற முடியாது. பொதுவாகக் குறள் வெண்பா அமைப்பில் எழுதப்பட்டது. குறள் வெண்பா என்பது வெண்பா வகையின் இரண்டு அடி உள்வகையாகும்.
? சாபம் பாவம் என்ன வேறுபாடு?
– வே.திவ்யா, விழுப்புரம்.
சாபம் பிறரால் வயிறு எரிந்து தரப்படுவது. பாவம் என்பது செய்யும் தீய செயல்களின் விளைவால் வருவது. பாவத்திற்குப் பிராயசித்தம் உண்டு. சாபத்திற்கு பிராயச்சித்தம் கிடையாது. அதை அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும்
? எந்த ஆமை வீட்டில் இருக்கக் கூடாது?
– விஸ்வேஷ்வரன், புதுக்கோட்டை.
பொறாமை.
? யாரை உத்தமன் என்று சொல்லலாம்?
– பி.சுந்தர நாயகம், காரைக்குடி.
மனிதர்களில் மூன்று பிரிவு உண்டு. ஒன்று உத்தமன். இரண்டு மத்திமன். மூன்று அதமன். பிறர் வாழ தன்னைத் தியாகம் செய்பவன் உத்தமன். இந்திரனுக்காக பகவான் மகாபலி சக்கரவர்த்தியிடம் யாசகம் கேட்டான். அதனால் ஆண்டாள் அவனை ஓங்கி உலகளந்த உத்தமன் என்று பாடுகின்றாள். தான் வாழ வேண்டும், பிறரும் வாழ வேண்டும் என்று நினைப்பவன் மத்திமன். பிறர் வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் தான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைப்பவன் அதமன். இன்னொரு பிரிவும் உண்டு. பிறரைக் கெடுத்துத்தான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள் .அவர்களை அதமா அதமன் என்று சொல்கிறார்கள் சான்றோர்கள்.
? குலதெய்வம் தெரியவில்லை, எப்படிக் கண்டுபிடிப்பது?
– ரகுதேவன், தாம்பரம்.
பூஜை செய்யும் பொழுது, ‘‘என் குலதெய்வம் யாரோ, அவர்களுக்கு இந்த வழிபாடு செல்லட்டும்’’ என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு கண்ணாடியை பூஜை அறையில் வைத்து மஞ்சள், குங்குமம் பூசி அதையே குலதெய்வமாக நினைத்து வழிபாடு செய்யுங்கள். ஒருநாள் குலதெய்வத்தின் காட்சி உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்கு குலதெய்வம் யார் என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால், உங்கள் குலதெய்வத்துக்கு நீங்கள் யார் என்பது தெரியும். ஆகையினால் ‘‘என் குலதெய்வத்துக்கு இந்த வழிபாடு சேரட்டும்’’ என்று நினைத்துச் செய்யும் எந்த வழிபாடும், உங்கள் குலதெய்வத்தை தேடிச் சென்று அடைந்து விடும். குலதெய்வத்தின் ஆசியும் உங்களுக்கு கிடைத்து விடும்.
? கோயிலில் மணி உபயோகப்படுத்துவதன் காரணம் என்ன?
– சதீஷ் குமார், மயிலாப்பூர்.
கோயில் பூஜையின்போது மணி மற்றும் பல கருவிகளை ஒலிப்பதற்கு காரணம் இருக்கிறது, பூஜா காலத்தில் பக்தர்களின் மனம் உபயோகமற்ற எண்ணங்களில் லயிக்காமல் இறைவனின் மேல் பதிவதற்கான ஒரு முயற்சி அது. அதோடு கிராமங்களில் பூஜை, ஆரத்தி நேரத்தில் ஒலிக்கும் மணி ஒலி கிராமம் முழுவதும் கேட்கும். கோயிலுக்கு நேரே வரமுடியாதவர்கள் கூட அந்த நேரத்தில் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டு மனதால் அந்த பூஜையில் கலந்து கொள்ள முடியும்.
?ஆண்டாள் அருளிய திருப்பாவைக்கு என்ன சிறப்பு?
– டி.எஸ்.குமரேசன், வயலூர்.
மார்கழி மாதம் நடந்து கொண்டிருக்கிறது ஆண்டாள் திருப்பாவையை எல்லோரும் பாடிக் கொண்டிருக்கிறோம். எத்தனையோ தமிழ் பக்தி நூல்கள் இருந்தாலும் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் தமிழ் மாதத்தின் பெயரில் ஆரம்பிப்பது விசேஷம். திருப்பாவை மார்கழி திங்கள் என்று மார்கழி மாதத்தின் பெயரோடு ஆரம்பிக்கிறது. நாச்சியார் திருமொழி தையொரு திங்கள் என்று தை மாதத்தின் பெயரோடு ஆரம் பிக்கிறது. இந்த சிறப்பு வேறு நூல்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
நாளுக்கு ஒரு பாசுரமாக 30 பாசுரங்களை ஆண்டாள் அருளிச் செய்திருக்கிறாள். இதை சகல வேதங்களின் சாரம் என்று பெரியோர்கள் சொல்லுகின்றார்கள். கண்ணன் குழல் ஓசையில் இந்த உலகம் எல்லாம் மயங்கியது. ஆனால், அந்தக் கண்ணனே திருப்பாவையின் இசையில் மயங்கியதால் திருப்பாவையை இன்னிசை என்று சொல்வார்கள்.
?சிலர் பிரச்னையை நம்மால் தீர்க்க முடியவில்லை என்ன செய்வது?
– வேல் ராஜ், திருப்பூர்.
தீர்க்க முடியாவிட்டால் பரவாயில்லை. அவர்கள் பிரச்னையை காது கொடுத்து கேட்டாலும், அது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். நம்மால் தீர்க்க முடியாது என்று தெரிந்து கொண்டுதான்… அவர்கள் நம்மிடத்தில் பிரச்னையைச் சொல்லுகின்றார்கள். தீர முடியாத பிரச்சினையை சொல்லுகின்ற பொழுது நம்மிடம் தேடுவது தீர்வை அல்ல. சாய்வதற்கு ஒரு தோள்தான். அந்தத் தோளும் ஆறுதலும் அவர்களை பிரச்னையை எதிர்கொண்டு சமாளிக்க வைக்கும்.
? எது தியானம்?
– இந்துமதி, சென்னை.
இதற்குப் பெரியோர்கள் ஒரு அருமையான உதாரணத்தைச் சொல்லுகின்றார்கள். காற்று இல்லாத இடத்தில் வைக்கப்பட்ட தீபம் அசையாமல் எரிவதைப்போல. மனம் பகவானிடம் லயித்து விட்டால் அதற்கு பெயர் தான் தியானம் என்கிறார்கள்.
தேஜஸ்வி
The post தெளிவு பெறு ஓம் appeared first on Dinakaran.