- மகாகலேஸ்வரர்
- ஜோதிர்லிங்கம்
- கோவில்
- மத்தியப் பிரதேசம்
- கலிதேவி
- உஜ்ஜைன் நித்ய கல்யாண
- உஜ்ஜைன்
- ருத்ரசகர் ஏரி
மூன்றாவது ஜோதிர்லிங்கமான மகாகாளேஸ்வரர் ஆலயம் மத்திய பிரதேசத்தில் உள்ளது. அற்புதமான ஆலயம். உஜ்ஜயினி நித்ய கல்யாணி என்று இந்த நகரத்தின் காளிதேவியை பாரதியார் பாடியிருக்கின்றார். உஜ்ஜயினியில் அமைந்துள்ள மகாகாளேஸ்வரர் ஜோதிர்லிங்கம் ருத்ரசாகர் என்ற ஏரியின் கரை மீது எழிலோடு அமைந்துள்ளது. இங்கு விபூதி அபிஷேகம் சிறப்பாக நடைபெறும். சிப்ரா எனும் ஆற்றங்கரையில் இத்தலம் அமைந்துள்ளது மூன்று அடுக்குகளால் அமைந்துள்ள அற்புதமான தலம் இது. ஒரு தேவார வைப்புத் தரும் ஆகும். இங்குள்ள லிங்கம், சுயம்புலிங்கம் மகாகாளேஸ்வர் தட்சிணாமூர்த்தி போல தெற்கு நோக்கி காட்சி தருகின்றார்.
கதை இதுதான்
சப்த புண்ணிய நகரங்களில் ஒன்று அவந்தி. அந்த நகரத்தின் மலைக் காட்டில் ஒரு சாபத்தால் வேதாளமாக மாறிய தூசனன் என்பவன் வசித்து வந்தான். அவன் அவ்வப்பொழுது ஊருக்குள் வந்து பொருள்களை எல்லாம் சூறையாடி மக்களை எல்லாம் அடித்து மிரட்டியும் கொலை செய்து மிகுந்த துன்பத்தைத் தந்து கொண்டிருந்தான். இந்தத் துன்பத்திலிருந்து பரிகாரம் தேட அவந்தி நகரத்தின் மிகச் சிறந்த பண்டிதரான விலாசனன் என்பவரை அணுகினர் அவர் வேதத்தில் சிறந்த நிபுணர்களை வரவழைத்து வேதாளத்தை விரட்ட சிவனை நோக்கி மிகப் பெரிய யாகம் ஒன்றினை இயற்றினார். வேள்வியின் முடிவில் அந்த யாக குண்டத்தில் இருந்து ஒரு அற்புதமான லிங்கம் எழுந்தது அந்த லிங்கம் இரண்டாக உடைந்து அதிலிருந்து மகாகாளேஸ்வரர் பயங்கரமான வடிவத்துடன் தோன்றினார் ஆவேசமான அவர் வேதாளத்தை அழித்தார் அதன் பிறகு லிங்கத்திலேயே மறைய லிங்கம் மறுபடியும் ஒன்றுபட்டது
கோயில் அமைப்பு
இங்குள்ள கோயில் உயர்ந்த மதிலால் அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் அற்புதமான சிகரம் அதாவது, விமானம் சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளது மூன்று அடுக்குகளாக உள்ள இந்த ஆலயத்தின் தரைமட்டத்துக்கு கீழே ஒரு கருவறை அமைந்துள்ளது. படிக்கட்டுகள் வழியாக இறங்கிச் சென்று தரிசிக்க வேண்டும். பிரதான கருவறையில் மகாகாளேஸ்வரர் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். மகாகாளேஸ்வரர் கருவறைக்கு மேல் வேறொரு கருவறை உள்ளது அந்த கருவறையில் ஓங்காரேஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது மேலே செல்ல படிக்கட்டுகள் உள்ளன. மூன்றாவது தளத்தில் நாகசந்திரரேஸ்வரர் சிலை உள்ளது. இங்கு நாகபஞ்சமி மிக விசேஷம் என்பதால் அன்றைக்கு இவரை வணங்குவதற்கு ஏராளமான கூட்டம் கூடும்.
இது தவிர, பிள்ளையார், பார்வதி, கார்த்திகேயன்(முருகன்) பைரவர் ஆகிய இறை வடிவங்கள் உண்டு தென்புறத்தில் நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. நந்தி துவாரம் பினாகி துவாரம் ஆகிய இரண்டு கம்பீரமான நுழைவாயில்கள் வழியாக கோயிலுக்குச் செல்லலாம். 108 அற்புதமான கல் தூண்கள் சிற்ப வேலைப்பாடுடன் அமைந்து கண்ணுக்கு விருந்தாக காட்சியளிக்கும். இந்த கற்கள் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டது. ஒவ்வொரு துணியிலும் சிவபெருமானின் திரிசூலம் சிவபெருமானின் திரிசூலம், மழு, பிநாகம், சிவ தனுசு மற்றும் கட்வங்கம் போன்ற பல்வேறு முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரகாரம் பழைய ருத்ரசாகர் ஏரியால் சூழப்பட்டுள்ளது.
இது உஜ்ஜைனி நகரத்தின் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த நடைபாதையில் நுழைந்தவுடன், 192 சிலைகள், 53 சுவரோவியங்கள் மற்றும் 108 முத்திரைகள் சிவனைப் பற்றிய கதைகளைக் காணலாம். அருகில் பார்ப்பதற்கு வேறு அற்புதமான கோயில்களும் உள்ளன.
* உஜ்ஜைனி காலபைரவர் கோயில்
* ஹரஸித்தி மாதா கோயில் {உச்சினி மாகாளி}
* சாந்திபனி முனிவர் ஆசிரமம்
* சிந்தாமணி விநாயகர் கோயில்
* திரிவேணி நவக்கிரகக் கோயில்
* மங்கள்நாத் கோயில்
* சித்தர் கோயில்
வரலாறு
1234-35ல் உஜ்ஜைனைத் தாக்கியபோது இக்கோயில் வளாகம் அந்நியப்படைகளினால் அழிக்கப்பட்டது. படையெடுப்பின் போது திருடப்பட்ட ஜலதரியுடன் (லிங்கத்தின் கீழ் இருக்கும் ஒரு அமைப்பு) கூடிய ஜோதிர்லிங்கம் அகற்றப்பட்டு அருகிலுள்ள `கோட்டீர்த்த குந்தா’ என்கிற இக்கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் வீசப்பட்டதாகச் சொல்கிறார்கள். தற்போதைய கட்டமைப்பு மராட்டிய ஜெனரல் ரனோஜி ஷிண்டே என்பவரால் 1734ல் கட்டப்பட்டது. மகாத்ஜி ஷிண்டே (1730-12 பிப்ரவரி 1794) மற்றும் தௌலத் ராவ் ஷிண்டேவின் மனைவி பைசா பாய் உள்ளிட்ட அவரது வம்சத்தின் மற்ற உறுப்பினர்களால் இக்கோயிலுக்கு புனரமைப்பு வசதிகள் செய்யப்பட்டன.
மராட்டிய ஆட்சி பதினெட்டாம் நூற்றாண்டின் நான்காம் தசாப்தத்தில் உஜ்ஜைனில் நிறுவப்பட்டது. உஜ்ஜைனின் நிர்வாகப் பொறுப்பு, முதலாம் பேஷ்வா பாஜிராவிடமிருந்து அவரின் உண்மையுள்ள தளபதி ரனோஜி ஷிண்டேவுக்கு சென்றது. ரனோஜியின் திவான் சுகதானகர் ராம்சந்திர பாபா ஷெனாவி ஆவார். அவர் மிகவும் செல்வந்தராக இருந்தார், அவர் தனது செல்வத்தை வைத்து உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஸ்வரர் கோயிலை மீண்டும் கட்டினார்.
திறந்திருக்கும் நேரம்
கோயில் பொதுவாக அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 11.00 மணிக்கு மூடப்படும். காலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை பஸ்ம ஆரத்தி, 7.30 மணிக்கு நிவேத்திய ஆரத்தி, மாலை 5.00 மணிக்கு சந்தியா ஆரத்தி. குறிப்பாக, பஸ்ம ஆரத்திக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
எப்படிச் செல்வது?
உஜ்ஜைனி ரயில் நிலையம் ஒரு முக்கிய ரயில் சந்திப்பு. இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் கோயிலில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும், ஆட்டோ ரிக்ஷாக்கள், வண்டிகள் மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்கள் எளிதில் கிடைக்கின்றன. உஜ்ஜயினிக்கு நல்ல சாலை வசதி உள்ளது மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களில் இருந்து எளிதாக வரலாம். அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உஜ்ஜயினிக்கு அடிக்கடி இயக்கப்படுகின்றன.
The post 3.மகாகாளேஸ்வரர் appeared first on Dinakaran.