×

அண்ணாத்தூர், சிறுபினாயூர், விசூர் பகுதி கிராமங்களுக்கு ஆற்றுக்குடிநீர் வழங்க வேண்டும்: க.சுந்தர் எம்எல்ஏ வலியுறுத்தல்

உத்திரமேரூர்: சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க.சுந்தர் (திமுக) பேசுகையில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற ஓர் அற்புதமான வரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். அதனுடைய தொடர் நடவடிக்கை பற்றிய கையேட்டினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவையில் அனைவருக்கும் வழங்கியிருக்கிறார். அதில், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி தொடர்பாக நான் கொடுத்த 10 கோரிக்கைகளில், 8வது கோரிக்கையாக அண்ணாத்தூர், சிறுபினாயூர் மற்றும் விசூர் கிராமங்களுக்கு ஆற்றுக் குடிநீர் வழங்க வேண்டுமென்று இருந்த கோரிக்கை சாத்தியம் இல்லாத பணி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டதைத்தான், 100 சதவீதம் செய்துவிட்டோம். எனவே அது சாத்தியமில்லை என்று சொல்லியிருக்கிறது. ஆனால், நீரின் தன்மை தற்போது மாறி, உப்புத் தன்மை அதிகரித்து, மக்கள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. எனவே, அதை அமைச்சருக்கும், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையை பொறுப்பில் வைத்திருக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இதை ஒரு சிறப்பு நேர்வாகக் கருத்திற்கொண்டு செய்து தர வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்திருக்கிறார். எனவே, அண்ணாத்தூர், சிறுபினாயூர் மற்றும் விசூர் UTM ID 1925 என்கின்ற அந்த திட்டம் நிறைவேற்றி தரப்படுமா? என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், உறுப்பினர் குறிப்பிட்ட திட்டம் குறித்து துறை அதிகாரிகளுடன் கலந்துபேசி, அதற்கு புதிதாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில், முதல்வரின் வழிகாட்டுதல்களின்பேரில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமானது முதல் வருடம் கிட்டத்தட்ட 67 இடங்களில் புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. அதன் திட்ட மதிப்பீடு ரூ.8,030.97 கோடியாகும். நாளொன்றுக்கு 706 எம்எல்டி குடிநீர் கொடுக்கிற வகையில், 1 கோடியே 12 லட்சம் மக்களுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டரை கோடி மக்களுக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது.

ஏற்கனவே, 544 இடங்களில் உள்ள திட்டங்கள்மூலம் 4 கோடியே 28 லட்சம் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக இரண்டரை கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கிக் கொண்டு வருகிறோம். எனவே, ஏற்கனவே உள்ள இடங்களில் பழைய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பழுதாகி இருக்கிறபோது, அவற்றை மறுசீரமைப்பு செய்வதற்கான நிதியை ஒவ்வொரு ஆண்டும் முதல்வர் வழங்கி வருகிறார். தற்போது, உறுப்பினர் நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதால், பாலாற்றினை மையமாக வைத்து திட்டம் கொண்டுவர வேண்டுமென்று கோரி இருக்கிறார். துறையின் மூலமாக ஆய்வு செய்து, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post அண்ணாத்தூர், சிறுபினாயூர், விசூர் பகுதி கிராமங்களுக்கு ஆற்றுக்குடிநீர் வழங்க வேண்டும்: க.சுந்தர் எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Annatur ,Sirupinayur ,Visoor ,K. Sundar ,MLA ,Uttara Merur ,Assembly ,Uttara Merur Constituency ,DMK ,Chief Minister ,M. K. Stalin ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,House ,
× RELATED புகையிலை பொருட்கள் விற்றவர் அதிரடி கைது