×

தஞ்சை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் கனமழையால் பாதித்த பன்னீர் கரும்புகளுக்கு இழப்பீடு

* குறைதீர் கூட்டத்தில் 615 மனுக்கள் வழங்கப்பட்டன

* விவசாயிகள் கரும்புகளுடன் வந்ததால் பரபரப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் காலை முதல் பதிவு செய்து, உரிய ரசீதுகளுடன், கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையிலான அதிகாரிகளிடம் வழங்கினர்.

இதில், முதியோர் ஓய்வூதியம், கல்விக்கடன், மாற்றுத்திறனாளிகள் மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அந்தந்த அலுவலர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்.

மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 30 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், தாட்கோ சார்பில் 3 பேருக்கு கறவை மாடு வளர்ப்பு தொகை தலா ரூ.1 லட்சத்துக்கான ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல், தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு பொங்கல் பண்டிகைக்கு சாகுபடி செய்த பன்னீர் கரும்புகள் பெஞ்சல் புயலால் பாதித்த கரும்புகளுடன் வந்து இழப்பீடு வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.முன்னதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள், பெண்கள் பன்னீர் கரும்புகளுடன் வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்மாபேட்டை, புத்தூர், நடுப்பட்டி, புளியக்குடி, வடக்குத் தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெஞ்ஜல் புயலால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பொங்கல் கரும்புகள் சாய்ந்து முறிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. தற்போது மீண்டும் தொடர் மழை புயல் உருவாகும் சூழ்நிலை நிலவி வருவதால் 100 குழி நிலத்தில் கரும்பு விவசாயம் செய்ய ரூ.75 ஆயிரம் செலவிட வேண்டி உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தஞ்சை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் கனமழையால் பாதித்த பன்னீர் கரும்புகளுக்கு இழப்பீடு appeared first on Dinakaran.

Tags : Cyclone ,Benjal ,Thanjavur district ,Thanjavur ,Grievance Redressal Day ,Collector ,Priyanka Pankajam ,
× RELATED மழையால் நீர்நிலைகள் நிரம்பியது நாற்று நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்