கோவை: திருமணமாகாத ஆண்களை குறிவைத்து சொக்க வைக்கும் பேச்சால் மயக்கி திருமணம் செய்தும் லிவிங் டுகெதரில் வாழ்ந்தும் லட்சக்கணக்கில் பணம் பறித்த கல்யாண ராணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மேலும் பலரிடம் மோசடி செய்திருப்பதால் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் பிரியா (32). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவர் இறந்துவிட்டார். இதனையடுத்து பிரியா 2வதாக ஒருவரை திருமணம் செய்தார். அவர் மூலம் 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக தனது 2வது கணவரையும் சில ஆண்டுகளில் பிரிந்தார். இந்நிலையில் 3வதாக வாலிபர் ஒருவருடன் பழகி திருமணம் செய்யாமல் அவருடன் சிறிது காலம் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்தார். பின்னர் அந்த வாலிபருடனான வாழ்க்கை கசந்ததால் 4வதாக ஒருவரிடம் லிவிங் டுகெதரில் உள்ளார். பிரியாவிற்கு 23 வயதிலேயே திருமணம் நடந்துள்ளது. திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவர் இறந்துவிட்டதால் இல்லற வாழ்க்கை இனிக்கவில்லை.
அடுத்த திருமணங்கள், மீண்டும் பிரிவு, திருமணம் இல்லாமல் லிவிங் டுகெதர் என அடுத்தடுத்து தோல்வியில் முடிந்த இல்லற வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரியா, அதில் இருந்து மெல்ல திசைமாற ஆரம்பித்தார். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று முடிவு செய்து குறுக்கு வழியில் எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி? என யோசிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் சொத்துகள் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் பெண் கிடைக்காமல் திண்டாடி வருவதை உணர்ந்து திருமண மோசடியில் ஈடுபடுவது என திட்டம் வகுத்தார்.
இதற்காக மேட்ரிமோனியல் மூலம் திருமணமாகாத வசதியான குடும்பத்தை சேர்ந்த ஆண்களை தொடர்பு கொள்ள தொடங்கினார். அப்போதுதான் பொள்ளாச்சியை சேர்ந்த விவசாயம் செய்து வரும் வாலிபர் ஒருவர் மேட்ரிமோனியல் மூலம் பெண் தேடி வருவதை அறிந்து தனது முகவரி, புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்தார். அவரை திருமணம் செய்து கொள்வதாக பிரியா தெரிவித்துள்ளார்.
இருவரும் செல்போன் வாட்ஸ் அப் வீடியோவில் மணிக்கணக்கில் பேசி வந்தனர். அப்போது பிரியா தனது அக்காவுக்கு உடல் நலம் சரியில்லாமல் உள்ளது என தனது மேக்கப் இல்லாத போட்டோவை அனுப்பி அது தனது அக்கா எனக் கூறி பணம் கேட்டுள்ளார். மருத்துவ செலவுக்கு என கேட்டதால் அந்த பொள்ளாச்சி விவசாயி இரக்கப்பட்டு அவரின் வங்கிக்கணக்கிற்கு ரூ.7.12 லட்சம் அனுப்பினார்.
பணம் தனது கைக்கு வந்ததும் பிரியா போன் நம்பரை பிளாக் செய்தார். பணத்தை பறிகொடுத்த விவசாயி செய்வது தெரியாமல் திகைத்தார். பின்னர் இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பிரியாவின் செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்து முகவரியை கண்டுபிடித்த போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் சென்று அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட பிரியா மேலும் பலரிடம் இதே போன்று ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈரோட்டை சேர்ந்த ஒரு வாலிபரை ஏமாற்றி ரூ.4 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள பிரியா பல இளைஞர்களிடம் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பிரியா குறிவைத்த இளைஞர்கள் எல்லாம் வசதி படைத்த, திருமணமாகத இளைஞர்கள் ஆவர். தாங்கள் ஏமாந்தது வெளியில் தெரிந்தால் திருமணத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் புகார் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். தன்னுடைய சொக்க வைக்கும் பேச்சு திறமையால் எளிதில் இளைஞர்களை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் கலையை பிரியா கற்றுவைத்திருக்கிறார்.
மோசடி செய்த பணத்தில் பெரும் பகுதியை தன்னுடைய மேக்கப் மற்றும் ஆடைகளுக்காக செலவிட்டு வசதியான வீட்டு பெண்போல வெளியில் காட்டி வந்துள்ளார். பிரியாவிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் இளம்பெண் போல ஹேர்ஸ்டைல், விதவிதமான சேலைகள், நகைகள் அணிந்த போட்டோக்கள் உள்ளன. யார் யாருக்கு எந்த மாதிரியான டேஸ்ட் பிடிக்குமோ அதற்கேற்ப மாடர்ன் பெண், ஹோம்லி லுக் என தன்னுடைய போட்டோக்களை அனுப்பி வைத்து மயக்கியுள்ளார்.
அதன் பிறகுதான் பணம் பறிக்கும் படலத்தை ஆரம்பித்துள்ளார். பணத்தை பறித்ததும் நம்பரை பிளாக் செய்வது அல்லது புதிய செல்போன் நம்பர் பயன்படுத்துவது என அடுத்தடுத்த திட்டங்களை அரங்கேற்றி வந்துள்ளார். பிரியா மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை அறிய அவரை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர். இதற்கிடையே லிவிங் டுகெதராக பிரியாவுடன் 4வதாக வசித்தவர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
The post விதவிதமான ஹேர்ஸ்டைல், காஸ்டியூம், சொக்க வைக்கும் பேச்சு திருமணமும்… லிவிங் டுகெதரும்… கல்யாண ராணியின் லீலைகள்: மேட்ரிமோனியலில் ஆண்களை குறிவைத்து லட்சக்கணக்கில் பணம் பறிப்பு appeared first on Dinakaran.