×

திருவண்ணாமலையில் மகாதீபம் நாளை ஏற்றப்படுகிறது மலை ஏற பக்தர்களுக்கு தடை: கலெக்டர் அறிவிப்பு: மண் சரிவுக்கு வாய்ப்புள்ளதால் நடவடிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, நாளை மாலை 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. மண் சரிவிற்கு வாய்ப்பிருப்பதால் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

முக்கிய விழாவான மகாதீப பெருவிழா நாளை(13ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு, கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் ஏகன் அநேகன் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். இதற்காக, 4,500 கிலோ முதல் தர தூய நெய் ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஐந்தரை அடி உயரத்தில் செப்பினாலான தீப கொப்பரைக்கு, புதிய வண்ணம் தீட்டப்பட்டு, அர்த்தநாரீஸ்வரர் உருவத்துடன் தயார் நிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

1,500 மீட்டர் திரி(காட்டன் துணி), உபயதாரர்கள் மூலம் நேற்று அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில், மகா தீப கொப்பரைக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை, தோளில் சுமந்தபடி மலை உச்சிக்கு கொண்டு சேர்க்கின்றனர். மலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் சிறப்பு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாளை அதிகாலை நெய் மற்றும் திரி மலைக்கு கொண்டு செல்லப்படும். தீபத்திருவிழாவை தரிசிக்க இந்த ஆண்டு 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, கூடுதல் டிஜிபி(சட்டம் ஒழுங்கு) டேவிட்சன் ஆசிர்வாதம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோர் தலைமையில் 7 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உள்பட 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரதான கோபுர நுழைவாயில்களில், அதிநவீன மெட்டல் டிடெக்டர் மற்றும் ஸ்கேன் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. நகரை இணைக்கும் சாலைகளில் ஒரே நேரத்தில் 3,000 பஸ்கள் நிறுத்தும் வகையில், மொத்தம் 25 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வரும் 15ம் தேதி வரை தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும். மேலும், 4,029 சிறப்பு பஸ்கள், 22 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 21 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில், 120 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், 120 சிறப்பு கமாண்டோ படை வீரர்கள், 24 தீயணைப்பு வாகனங்களுடன் 600 தீயணைப்பு வீரர்கள், 220 வன காவலர்கள் ஆகியோரும் மீட்புப்பணிக்காக தயாராக உள்ளனர். 55 இடங்களில் காவல் உதவி மையங்கள், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், 700 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மலையின் மேற்பகுதியில் அதிக ஈரப்பதம் இருப்பதாகவும், பாறைகள் உருண்டு விழும் ஆபத்தும், மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்தும் இருப்பதாகவும் ஆய்வுக்குழுவினர் எச்சரித்துள்ளனர்.

அதோடு, மலையில் நடக்கிற பாதையில் கால்கள் அமிழ்கின்ற அளவில் மண் இலகுவாக ஈரத்தன்மையுடன் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, வழக்கமாக ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் 2,500 பேருக்கு இந்த ஆண்டு அனுமதி இல்லை. மேலும், திருக்கோயில் சார்பில் மகா தீபம் ஏற்றுவதற்காக மலைக்கு செல்லும் பணியாளர்கள் மட்டும் கட்டுப்பாடுடன் தேவையான எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுவார்கள். தீபம் ஏற்றியவர்கள் தொடர்ந்து இந்த ஆண்டும் மலைமீது தீபம் ஏற்றுவார்கள். இந்த ஆண்டும் வழக்கம் போல, திருக்கோயில் மரபுபடி 11 நாட்கள் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும் என்றார்.

The post திருவண்ணாமலையில் மகாதீபம் நாளை ஏற்றப்படுகிறது மலை ஏற பக்தர்களுக்கு தடை: கலெக்டர் அறிவிப்பு: மண் சரிவுக்கு வாய்ப்புள்ளதால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Mahadeepam ,Tiruvannamalai ,Tiruvannamalai Annamalaiyar Temple Karthikai Dibhatri Festival ,Thiruvannamalai ,
× RELATED உலகிலேயே முதன்முறையாக 3டி...