×

18% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: வணிக விரோதமான சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று உரையாற்றினார். பேரமைப்பு தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன் தலைமை வகித்தார். மத்திய சென்னை மாவட்ட தலைவர் சாமுவேல் வரவேற்புரையாற்றினார். வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஜெயபால், தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.ஆர்.பன்னீர்செல்வம், தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் எட்வர்ட், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஆதிகுருசாமி, வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை, சென்னை மாநகர பழைய பொருள் அணி தலைவர் ஜெயக்குமார், இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் பால் ஆசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொருளாளர் ஹாஜி சதக்கத்துல்லா, மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், தமிழக தொழில் வணிக ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் சென்னை ஜூவல்லரி அசோசியேஷன் தலைவர் ஜெயந்திலால் ஜெ.செலானி, சென்னை ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி, கோயம்பேடு மார்க்கெட் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர், சென்னை மருந்து வணிகர் சங்கத் தலைவர் ரமேஷ், இந்திய ரயில் எஸ்டேட் பில்டர்ஸ் சங்க தலைவர் வி.என்.கண்ணன், தமிழ்நாடு பர்னிச்சர் மற்றும் உரிமையாளர்கள் சந்தானபதி, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ், தமிழ்நாடு டிஜிட்டல் சங்கத் தலைவர் சுரேஷ், சென்னை பெருநகர டீக்கடை சங்கத் தலைவர் ஆனந்தம், தமிழ்நாடு காலணி வியாபாரிகள் சங்க தலைவர் காஜா முகைதீன் ஆகியோர் ஜிஎஸ்டி குறித்து விளக்க உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது: 2017ம் ஆண்டு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு தற்போது ஏன் போராட்டம் என்று கேட்கிறார்கள். இணக்க வரி போட்டுள்ளார்கள். ஒன்றரை கோடிக்கு வியாபாரம் செய்பவர்கள் ஒரு சதவீதம் ஜி.எஸ்.டி கட்டுகிறார்கள், இவர்களில் 40 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளார்கள். வாடகை கட்டிடம் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். மாநில அரசு ஆண்டுதோறும் 6 சதவீத கூடுதல் சொத்துவரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்துகிறோம். வணிக உரிமக் கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்திட வேண்டுகிறோம். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு எடப்படாத நிலையில் தென்மாநிலங்களை ஒருங்கிணைத்து டிசம்பர் 27ம்தேதி தென்மண்டல கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் போராட்டத்தை விரிவாக்கம் செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக டெல்லியில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post 18% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Confederation of Merchants' Associations ,Federation of Tamil Nadu Merchants' Associations ,Federation President ,Wickramaraja ,Valluvar Kottam ,Confederation ,South Chennai ,Confederation of Merchants Associations ,Dinakaran ,
× RELATED உலகிலேயே முதன்முறையாக 3டி...