கெபேரா: இலங்கையுடனான 2வது டெஸ்ட் போட்டியின் 5ம் நாளான நேற்று, தென் ஆப்ரிக்கா அணி 109 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. தனஞ்செய டிசில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளும் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் மோதி வந்தன. ஏற்கனவே முடிந்த முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றிருந்த நிலையில் கெபேரா நகரில் 2வது டெஸ்ட் போட்டி நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 358 ரன் குவித்தது. பின் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 328 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து 2வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்ரிக்கா 317 ரன் குவித்தது. இதையடுத்து 348 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை இலங்கை துவக்கியது. 4ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்திருந்தது. டிசில்வா 39, மெண்டிஸ் 39 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று 5ம் நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த குசால் மெண்டிஸ் 46 ரன்னில் மகராஜ் பந்தில் பவுமாவிடம் கேட்ச் தந்து அவுட்டானார். பின் கேப்டன் டிசில்வா 50, பிரபாத் ஜெயசூரியா 9, விஸ்வா பெர்னாண்டோ 5, கடைசி விக்கெட்டாக லஹிரு குமாரா 1 ரன்னில் அவுட்டாகி, 238 ரன்னுடன் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதனால், 109 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. கேசவ் மகராஜ் 5 விக்கெட் வீழ்த்தினார். தென் ஆப்ரிக்காவின் டேன் பேட்டர்சன் ஆட்ட நாயகனாகவும், டெம்பா பவுமா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
* முதலிடம் பிடித்த தெ.ஆ.
இலங்கையுடனான 2வது டெஸ்டில் 109 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. வரும் 2025ல் பாகிஸ்தானுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா மோதவுள்ளது. அதில் கிடைக்கும் வெற்றி வாய்ப்பை பொறுத்து டபிள்யூடிசி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் தென் ஆப்ரிக்கா இருக்குமா என முடிவாகும். பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகள், 2025 ஜூனில் லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் மோதும்.
டபிள்யுடிசி பட்டியலில்
உள்ள அணிகள்
ரேங்க் அணி வெற்றி%
1 தென் ஆப்ரிக்கா 63.33
2 ஆஸ்திரேலியா 60.71
3 இந்தியா 57.29
4 இலங்கை 45.45
5 இங்கிலாந்து 45.24
6 நியூசிலாந்து 44.23
7 பாகிஸ்தான் 33.33
8 வங்கதேசம் 31.25
9 வெஸ்ட் இண்டீஸ் 24.24
The post இலங்கையுடன் 2வது டெஸ்ட் வெற்றிக் கொடி கட்டி தென் ஆப்ரிக்கா சாதனை: தொடரை கைப்பற்றியது appeared first on Dinakaran.