×

சேந்தமங்கலம், எருமப்பட்டி வட்டாரத்தில் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை கலெக்டர் ஆய்வு

சேந்தமங்கலம் : சேந்தமங்கலம், எருமப்பட்டி வட்டாரத்தில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்களை, கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேந்தமங்கலம் வட்டாரத்தில் உள்ள பெரியகுளம் ஊராட்சி, படத்தையான்குட்டை கிராமத்தில் புயல் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து, கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பகுதியில் 10 ஏக்கரில் நெற்பயிர், 12 ஏக்கரில் பருத்தி, 3.5 ஏக்கரில் கரும்பு என மொத்தம் 13 விவசாயிகள் சுமார் 25.5 ஏக்கரில் பயிர் சாகுபடி மேற்கொண்டுள்ளதை பார்வையிட்டு, மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, பெரியகுளம் தடுப்பணை மற்றும் பழையபாளையம் ஏரியில் கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதையும், கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வருவாய் துறை மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, எருமப்பட்டி ஒன்றியம், பவித்திரம்புதூர் ஊராட்சி, தோட்டம் உடையான்பட்டி கிராமத்தில் 10 விவசாயிகள் 12.86 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழைகள் மழையால் சேதமடைந்துள்ளதை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, சேதம் குறித்து விவரங்களை பெற்றவுடன், அரசு நிவாரண தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குநர் கலைச்செல்வி, துணை இயக்குநர் கவிதா, தோட்டக்கலை துணை இயக்குநர் புவனேஸ்வரி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post சேந்தமங்கலம், எருமப்பட்டி வட்டாரத்தில் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Erumapatti ,Uma ,Periyakulam panchayat ,Sendhamangalam ,Bildyankuttai village ,Dinakaran ,
× RELATED மினி லாரியில் கடத்திய 390 கிலோ குட்கா பறிமுதல்