×

டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2025ல் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்? விவரங்களை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் எவ்வளவு பேர் தேர்ந்தெடுக்கப்படஉள்ளனர் என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எவ்வளவு பேர் அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எவ்வளவு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறித்த விவரங்களை இரு அமைப்புகளும் இன்னும் வெளியிடவில்லை.

டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை ஓர் ஆண்டில் எத்தனைப் போட்டித் தேர்வுக்கான அறிவிக்கைகளை வெளியிடவுள்ளன, அவை எந்தெந்த தேதிகளில் வெளியிடப்படும், அவற்றின் மூலம் நிரப்பப்படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த உத்தேசத் திட்டம் அதற்கு முந்தைய ஆண்டின் டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படுவது வழக்கம். அத்தகைய ஆண்டு திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடப்பாண்டில் 7 போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்படும் என்று கடந்த அக்டோபர் 10ம் தேதியே அந்த அமைப்பு அறிவித்தாலும் கூட ஒவ்வொரு போட்டித் தேர்வின் மூலம் எவ்வளவு பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர் என்பது குறித்த விவரங்களை இன்னும் வெளியிடவில்லை. நடப்பாண்டில் குறைந்தது 2 லட்சம் பேருக்காவது அரசு வேலைகளை வழங்க வேண்டும். அதற்கேற்ற வகையில் நடப்பாண்டிற்கான ஆள்தேர்வு அறிவிக்கைத் திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை உடனடியாக வெளியிட வேண்டும்.

The post டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2025ல் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்? விவரங்களை வெளியிட அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Teachers Selection Board ,Anbumani ,Chennai ,Tamil Nadu Public Service Commission ,Dinakaran ,
× RELATED மாநில தகுதித் தேர்வை தமிழ்நாடு...