×

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டாக குழந்தை பிறப்பு விகிதம் குறைவு: ஐ.நா. சபை ஆய்வில் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து குழந்தை பிறப்பு விகிதம் குறைந்ததுள்ளதாக ஐ.நா. சபை ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது என ஐ.நா. சபை மற்றும் உலக வங்கி, இந்திய சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தேசிய சராசரியை விட நாட்டிலேயே அதிக அளவாக பீகாரில் 1.98 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 1.70 சதவீதமும், மேகாலயாவில் 1.5 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 1.49 சதவீதமும் மக்கள் தொகை வளர்ச்சி உள்ளது.

மேலும் மகாராஷ்டிராவில் 0.71 சதவீதமும், மேற்குவங்கத்தில் 0.78 சதவீதமும் மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தென்மாநிலங்களான கேரளாவில் 0.22 சதவீதமும், ஆந்திராவில் 0.61 சதவீதமும், கர்நாடகாவில் 0.68 சதவீதமும், தெலங்கானாவில் 0.74 சதவீதமாகவும் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய சராசரியை விட இது மிக குறைந்த அளவாக இருக்கிறது.

அதன்படி, கடந்த 2019ம் ஆண்டில் தமிழகத்தில் 9 லட்சத்து 45 ஆயிரத்து 701 குழந்தைகள் பிறந்துள்ளனர். அதனை தொடர்ந்து, 2020ம் ஆண்டு 9 லட்சத்து 39 ஆயிரத்து 783 குழந்தைகளும், 2021ம் ஆண்டில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 864 குழந்தைகளும், 2022 ஆண்டு 9 லட்சத்து 36 ஆயிரத்து 367 குழந்தைகளும், 2023 ஆண்டு 9 லட்சத்து 2 ஆயிரத்து 306 குழந்தைகளும் பிறந்துள்ளன. ஆனால் இதுவரை இல்லாத அளவாக கடந்த ஆண்டு 8 லட்சத்து 41 ஆயிரத்து 821 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. 2024 ஆண்டை 2023 ஆண்டுடன் ஒப்பிட்டால் 60 ஆயிரத்து 485 குழந்தை பிறப்புகள் குறைந்துள்ளது.

இது 6.71 சதவீத சரிவு ஆகும். தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது உண்மைதான். பொதுவாக மருத்துவமனைகளில் பிறப்பை பதிவு செய்ய 10 நாட்கள் வரை எடுத்து கொள்வார்கள். எனவே தற்போதைய கணக்கின் அடிப்படையில் இன்னும் சில குழந்தைகள் அதில் பதிவாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் இறுதி பட்டியலில் சில மாற்றங்கள் இருந்தாலும், முந்தைய ஆண்டுகளை ஒப்பிட்டால் 2024ம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு குறைவு தான் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டாக குழந்தை பிறப்பு விகிதம் குறைவு: ஐ.நா. சபை ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,UN ,Chennai ,India ,World Bank ,Indian Health Ministry… ,
× RELATED ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்வாரியம்!