குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்தமாக இருக்கிறார் மன்னர் ராஜசேகரபாண்டியன். அப்போது சிவபெருமான் முன்பே கூறியது போல் குழந்தை (மணிகண்டன்) அவதரித்த பம்பா நதிக்கரைக்கு வருகிறார் முனிவர். முனிவரை கண்டதும் மறுபடியும் ஆச்சரியத்தில் உறைகிறார் மன்னர், காரணம் விலங்குகள் இருப்பதாக கூறிய அதே முனிவர் வந்ததால் வணங்கி வரவேற்கிறார் மன்னர்.
குழந்தை இல்லாத தனக்காக இறைவன், முனிவரை வைத்து திருவிளையாடல் நடத்தியதை அறிந்துகொண்டு மகிழ்கிறார் மன்னர். அவரிடம், ‘‘மன்னா ஏன் தாங்கள் குழந்தை குறித்து சந்தேகப்பட வேண்டும்? இந்த குழந்தையை உனது சிவபெருமானே அளித்த பரிசாக கருதி, மகிழ்ச்சியுடன் எடுத்து சென்று அரண்மனையில் ராஜகுமாரனாக வளர்த்து வாருங்கள். இந்த தெய்வீக அம்சம் பொருந்திய குழந்தை வளர்ந்து 11 வருடங்கள் முடிந்து 12வது வருடம் துவங்கும் தருவாயில் யார் என்று தெரிய வரும். அப்போது நீங்கள் மட்டுமல்ல, இந்த உலகமே அறியும். குழந்தை கழுத்தில் மணி மாலையோடு இருப்பதால், மணிகண்டன் என பெயர் சூட்டுகிறேன்’’ என ஆசி வழங்கி மறைந்தார்.
மணிகண்டனை மகிழ்ச்சியோடு அரண்மனைக்கு கொண்டு செல்கிறார் மன்னர். மகாராணியான மனைவி கோப்பெருந்தேவியிடம் குழந்தையை வழங்கி காட்டில் நடந்ததை விவரிக்கிறார். குழந்தை வரம் வேண்டி தவம் கிடந்த தங்களுக்கு அழகிய ஆண் குழந்தையை இறைவன் தந்த பரிசாக எண்ணி எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறார் மகாராணி. மன்னர் வாரிசு என்பதால் முறையாக தத்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அரச நியதி உள்ளது. அதன்படி அரண்மனை விதிகள் படி முறையாக தத்தெடுக்கிறார்கள்.
ராஜகுமாரன் வருகையை முன்னிட்டு பந்தள நாடே விழா கோலம் பூண்டது. ராஜகுமாரனாக வளர்க்கப்பட்டு வரும் மணிகண்டன், கல்வி வயதை அடைகிறார். மணிகண்டனுக்கு குருகுலம் கல்வி கற்பிப்பதற்கு தகுதியான ஒரு குருவை கண்டறிந்து வருமாறு மந்திரிகளுக்கு உத்தரவிடுகிறார் மன்னர். மந்திரிமார்களும் பந்தளம் அருகே உள்ள குருநாதர் முகடியிலுள்ள ஒரு குருவை கண்டறிந்து மன்னரிடம் தெரிவிக்கின்றனர். அவரிடம் மணிகண்டனை குருகுலம் கற்க அனுப்பி வைக்க பரிந்துரை செய்கின்றனர்.
மணிகண்டன், ராஜகுமாரன் என்பதால் சிறிது அச்சம் கலந்த தயக்கத்துடன் கல்வி கற்பிக்க துவங்கும் குரு, மணிகண்டனின் தெய்வீக அம்சம் பொருந்திய வசீகரமாக முகம், ஒளி பொருந்திய கண், யோகநிலை பொருந்திய உடலை பார்த்து, இவர் சாதாரண மனித பிறவி இல்லை, தெய்வப்பிறவி என்பதை யூகிக்கிறார். சுவாமியே சரணம் ஐயப்பா…
நாளையும் தரிசிப்போம்.
The post ஐயப்பன் அறிவோம் 18குருகுல மாணவர் appeared first on Dinakaran.