×
Saravana Stores

குடும்பம் தழைக்க வைக்கும் யானைமலை!

மதுரை – மேலூர் (சென்னை செல்லும்) தேசிய நெடுஞ்சாலையில், ஒரு செந்நிற யானையொன்று முன்புறமாக தன் தும்பிக்கையை நீட்டி மண்டியிட்டு படுத்துக் கொண்டிருப்பதை போல காட்சியளிக்கிறது! மதுரையை சுற்றி இயற்கையாக அமையப் பெற்று இருக்கிற எட்டு மலைகளில், யானைமலை 4 கி/மீ சுற்றளவு கொண்டது. கிட்டதட்ட 900 அடி மேலான உயரம் கொண்டது. நம்மில் எல்லோர்க்கும் யானையை பிடிக்கும் என்றால், யானைக்கு கன்னமதம், கபோலமதம், கோசமதம் மூன்று மதங்களையும் பிடிக்கும் என்று புராணக்கதை கூறுகிறது.

மதுரை யானைமலை என்றதும், “ஸ்ரீ யோக நரசிம்மர் ஸ்ரீ நரசிங்கவல்லி சமேத திருக்கோயில்.” ஞாபகத்திற்கு வரும். இக்கோயில், மேற்கு பகுதி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. ஆதியில் சமணம் ஒழிக்கப்பட்டு, பின்னர் சைவம் வளர்ச்சியடைந்து, இன்று வைணவம் தழைத்து மூன்று சமயமும் குடிகொண்ட யானைமலை, பரிண மித்திருக்கிறது என்பதை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

திருமாலில் அவதாரங்களில் ஒன்றான “நரசிங்கப் பெருமாளுக்கும் அப்பனுக்கும், பாடம் சொன்ன முருகப் பெருமானுக்கும், யானைமலையில் தனித் தனியாக இரண்டு குடைவரைக் கோயில்கள் மற்றும் சமணர்களின் திருத்தங்கரர் சிற்பங்கள் மற்றும் கல்படுக்கைகளும் ஒரே இடத்தில் அமைந்திருக்கிறது..” என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி-1ஆம் நூற்றாண்டு முதல், திருமலை நாயக்கர் காலம் 1659-ஆம் ஆண்டு வரை யிலும், இக்கோயிலுக்கு திருப்பணிகள் நடை பெற்றுஇருக்கிறதாக சொல்லப்படுகிறது.

நூற்றியெட்டு வைணவத் தலங்களில் ஒன்றான ஸ்ரீ யோக நரசிங்கப் பெருமாள் திருக்கோயிலின் தோற்றம் குறித்து பெரும்பற்றப் புலியூர் நம்பியின் வரலாறு கூறுகிறது. பிரம்மாண்ட புராணம் உத்திர காண்டத்தில் “யானைமலை வைபவம்” பற்றி எண்பத்தி ஏழாவது அத்தியாத்தில் கூறப் படுகிறது. பரஞ்சோதி முனிவரின் அறுபத்து நான்கு திருவிளையாடல் புராணத்திலும், யானைமலை பற்றிய புராண கதையில் “யானை எய்த படலம்” காட்சியில் பாண்டியனை கொல்லுவதற்கு சமணர்கள் விடுத்த யானையை தன் நரசிங்க பாணத்தால் கொன்று அவனைக் காத்தார் என்றும் சிவபெருமான் யானை மீது தொடுத்த அம்பு பாய்ந்த அந்த இடத்திலேயே நரசிங்கப் பெருமாள் எழுந்தருளி காட்சித் தந்திருக்கிறார்.

ஸ்ரீ நரசிம்மரின் உக்ரம் தனிய வாயு பகவானை அனுப்பி இரண்யனின் மகன் பிரகலாதனை வரவழைத்தார். ஸ்ரீ நரசிம்மர் உக்ரரூபத்தை விடுத்து சாந்தமானார். பிரகலாதனுக்கு அழிவில்லாத சிரஞ்சீவி தன்மையை அடைய காட்சி தந்தும், அவ்விடத்திலேயே யோகநிலையில் உக்ரமான திருக்கண்களுடன், யோக பட்டையுடனும் கெஜகிரி கோத்திரத்தில் அருள்பாலித்தார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

கி.பி 765 – 815 முதலாம் வரகுண பாண்டியனின் ஆட்சிக்காலம் இவனது முதல் அமைச்சரான மாறன்காரி நெல்லைக்கு அருகே உள்ள களக்குடியில் தோன்றிய இவனே யானைமலையின் மேற்கு பகுதியில் நரசிங்கப் பெருமாளுக்கு கி.பி-770 ஆண்டுக் காலத்தில் குடைவரைக்கோயில் கட்ட ஏற்பாடு செய்திருக்கிறான். ஆனால், ஊழ்வினையால் அவன் மரணமடையவே, அவனது தம்பி பிற்காலத்தில் அமைச்சராகி அண்ணன் விட்டுச் சென்ற திருப்பணியை தனது முயற்சியால் அதே காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்குச் செய்திருக்கிறான் என்பது கவனிக்கத்தக்கது.முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டுகளிலிலும், சுந்தர பாண்டிய சோழ தேவரின் கல்வெட்டுகளிலும் இறைவனின் திருநாமம் நரசிம்ம ஆழ்வார் என்று சூட்டப் பட்டிருக்கிறது. பின்னாளில் யானைமலை ஆழ்வார் என்று மருவியிருக்கிறது.

இவ்வூரின் பழைய பெயர் பத்துப் பாட்டில் ஒன்றாகிய மலைபடுகடாம் எனும் நூலின் ஆசிரியர் “இரணிய முட்டத்து பெருங்குன்றம்.” என்கிறார் இம்மலையை ஒட்டிய சிற்றூர்க்கு “நரசிங்கமங்கலம்” என்று முற்கால பாண்டியர்களால் அழைக்கப்பட்டிருக்கிறது. அதுவே சுருங்கி தற்போது “நரசிங்கம்” என்று பெயர் பலகையில் தாங்கி நிற்கிறது. மேலும், இக்கோயிலின் முன்மண்டபத்தையும் எடுத்து குடமுழுக்கு செய்திருக்கிறான் என்கிற தகவலை கூறும் தமிழ் வட்டெழுத்து மற்றும் கிரந்த எழுத்திலும் இரண்டு கல்வெட்டுக்கள் குடைவரைக்கோயில் முன்மண்டப வாசலில் இருபுறமும் பொறிக்கப்பட்டுள்ளன.

விஜயநகர மன்னர்கள் கால கட்டிட பாணியில் நரசிங்கப் பெருமாள் கோயில் கட்டப் பட்டுள்ளது. நுழைவு வாசலின் வடக்கு பக்கத்தில், அழகிய தாமரைக்குளம். இதிலுள்ள புனித தீர்த்தம், “சக்கர தீர்த்தம் மற்றும் பத்மதாடகம்.” என்று புராணங்களில் கூறப்படுகிறது. சங்க இலக்கியத்தின் பத்துப்பாட்டில் இத்தீர்த்தத்தை “சகல ரோக நிவாரணி” என்றும் அத்துடன் உரோமசன் என்கிற பாண்டியர்களில் ஒருவன் தன் பெயரால் இக்குளத்தை ஏற்படுத்தியிருக்கிறான் என்றும் அறியமுடிகிறது.

இக்கோயிலுக்குள் நுழைந்தவுடன், கருடமண்டபம், அடுத்து சிங்கங்களை தாங்கி நிற்கும் பெரிய மற்றும் சிறிய தூண்கள் கொண்ட மகாமண்டபம், இவற்றில் பாண்டியர்கள் கால கல்தூண்கள் மற்றும் பெருந்தூண்கள் விஜயநகர வேந்தர் காலக்கட்டிட பாணியில் விளங்குகின்றன. மகாமண்டபத்தை கடந்து சிறிய சதுரமான கருவறையில் மூலவர் ஸ்ரீ நரசிங்கப் பெருமாள் பாறையில் வெட்டிய புடைப்பு சிற்பமாக மேற்கு நோக்கி யோகாசனத்தில் குத்த வைத்து அமர்ந்த கோலத்தில் தனிச் சந்நதியில் காட்சித்தருகிறார். நரசிங்கப் பெருமாளின் திருவுருவம் சிங்கமுகமாக இருந்தாலும், கர்ஜனை அழகையும் கனிவாக முகத்தில் வெளிப்படுத்துகிறார். பின்னிரு கரங்கள் ஒருகையில் பாஞ்சசன்யச்சங்கு, இன்னொரு கையில் சுதர்சனச் சக்கரத்தையும் ஏந்திக் கொண்டிருக்கிறார். முன்னிரு கரங்களை மடித்த முழங்காலில் மீது வைத்து அமர்ந்திருக்கிறார்.

வடப்புறம் தாயார் சந்நதி, தெற்கு நோக்கி அமைந்துள்ளது, ஸ்ரீ நரசிங்கவல்லி தாயார் சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் கருணை பொழியும் முகத்துடன்; தன்னுடைய இருகரங்களிலும் தாமரை மலர்களுடன் காட்சித்தருகிறாள். ஸ்ரீ யோக நரசிம்மர் கோயிலின் நுழைவு வாசல் அருகிலேயே “லாடன் கோயில்” அமைந்துள்ளது. இங்கு பிராமணர்களுக்கான அக்ஹாராப்பகுதியை ஏற்படுத்தி பட்டசோமாசியின் காலத்திற்கு முன்பே குடையப்பட்டு அவராலேயே புதுப்பிக்கப்பட்டுள்ளது. கி.பி.8-ஆம் நூற்றாண்டில் முருகனுக்காக அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் ஒரு சிறிய கருவறையும், திறந்த செவ்வக வடிவ முன்மண்டபமும் காணமுடிகிறது. முருகன் தெய்வானையுடன் அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுளார். இக்கோயிலின் கிழக்குச் சுவற்றில் உள்ளே 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு கோயில் திருப்பணி செய்யப்பட்டதைத் தெரிவிக்கிறது என்று தமிழக தொல்லியல் துறை சார்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கிறது.

லாடன் குடைவரைக் கோயில் மலையின் முன்நெற்றிப் பாறையில் மழை நீர் உள்ளே செல்லாதவாறு வரி வெட்டப்பட்டுள்ளது. கருவறை செல்வதற்கு இருபுறங்களிலும் வாசற்படிகள் நடுவில் விநாயகர் புடைப்புச் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய முன்மண்டபத்தில் இரண்டு பக்கமும் நான்கு பூதகணங்கள் விமானங்களை தாங்கி பிடிப்பது போன்றும் உள்ளது.

அங்குள்ள ஒரு பக்க பாறை சுவற்றில் குடைவரைக் கோயிலை ஏற்படுத்திய அமைச்சர் இன்னொரு பக்கம் லாடதேசத்தை சேர்ந்த ஒரு துறவி, அதற்கு கீழே பாண்டிய மன்னர் மன்னர்க்குரிய தர்மப்படி தரையில் ஒரு காலை முட்டி போட்டுக் கொண்டவாறு வரவேற்பது போல காணப்படுகிறது. முருகப் பெருமானுக்காக குடையப்பட்ட தனித்துவமான குடைவரை கோயில் என்று சொல்லப்படுகிறது. முருகனுக்கு உரிய சேவல் மற்றும் மயில் சிற்பங்கள் தனித் தனியாக அரை கல்தூண்களில் செதுக்கப்பட்டிருக்கிறது.

அன்னோன்யமான சூழ்நிலையில் முருகப் பெருமான் காட்சி தருகிறார். சற்றே சிதிலமடைந்த முகம் கையில் சன்னவீரம் வைத்துக் கொண்டு தெய்வானையுடன் சௌகரியமாக அமர்ந்திருக்கிறார். தலையில் மகுடம், காதில் பெரிய குண்டலங்களுடன் மார்பில் மார்புக்கச்சை அணிந்து கொண்டு, தம்பதி சகிதமாக அருள்பாலிக்கிறார்கள்.

ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோயில் செல்லும் சாலை வழியில், இடது பக்கம் யானைமலைக்கு செல்ல படிக்கட்டுக்கள் அமைந்திருக்கின்றன. மேலே சென்றால், இயற்கையான குகையும், அக்குகையின் வாயிலின் மேல் பிராமி எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு “சமணர்கள் பள்ளி மற்றும் கற்படுக்கைகள்” மற்றும் ஒரு சுனையும் அமைந்துள்ளன, இம்மலையிலேயே சமணர்கள் தங்கியிருந்து ஊருக்குள் சென்று சமண மதத்தை பரப்பியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இம்மலையில், கி.பி.9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணச் சிற்பங்களில் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா இயக்கி உள்ளிடவை இடம் பெற்றுள்ளன. அச்சணத்தி எனும் சமண துறவியின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இச்சிற்பங்கள், சுதை பூசி வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. சிற்பங்களின் கீழ் தமிழ், கிரந்தம் வட்டெழுத்து கல்வெட்டுக்கள் உள்ளன என்று தொல்லியல் துறை சார்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

கி.பி.7-ஆம் நூற்றாண்டில் சமணர்களின் தலைமை பீடமாக யானைமலை விளங்கியிருக்கின்றன. அப்போது, “மதுரைக்கு விஜயம் செய்த திருஞான சம்பந்தர் மதுரையை சுற்றியுள்ள யானைமலை போன்ற இடங்களில் சமண முனிவர்கள் வாழ்ந்துள்ளதை தனது மதுரை பதிகத்தில்” குறிப்பிட்டுள்ளார். தெற்கில் நரசிங்கம் கிராமத்தில் 16மீ உயரத்தில் ஒரு தனி பாறையின் முகப்பில் வரிசையாக ஏராளமான சமணத் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றின் கீழ்கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் பெளர்ணமி நாளன்று இவ்வூரில் “கஜேந்திர மோட்சம் படலம் என்கிற பெயரில் கஜேந்திர மோட்ச திருவிழா” மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. யானைக்கு அருளிய கருணையை எங்களுக்கும் அருள் புரிய வேண்டும் என்பதற்காக “திருமோகூர் காளமேகப் பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு புறப்படுகிறார்” காலையில் புறப்பட்ட பெருமாள் பலமண்டகபடிகளில் எழுந்தருளி மாலையில் யானைமலை ஸ்ரீ யோக நரசிம்மர் கோயிலுக்கு வந்தடைகிறார்.

ஆர்.கணேசன்

The post குடும்பம் தழைக்க வைக்கும் யானைமலை! appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஐயப்பன் அறிவோம் 18குருகுல மாணவர்