- வீட்டு வாரியம்
- தூத்துக்குடி சங்கரபெரி
- தூத்துக்குடி
- தூத்துக்குடி சங்கராபேரி
- அரசு வீட்டு வாரியம்
- தின மலர்
தூத்துக்குடி: தூத்துக்குடி சங்கரப்பேரியில் சிதிலமடைந்து கிடக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தூத்துக்குடி சங்கரபேரி பகுதியில் அரசின் வீட்டுவசதி வாரிய அரசு ஊழியர் வாடகை குடியிருப்பு உள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் மொத்தம் 270 வீடுகள் உள்ளன. இந்நிலையில் இந்த குடியிருப்பு அடிக்கடி இடிந்து வந்ததாலும், சிதிலமடைந்து வந்ததாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த குடியிருப்புகளை அதில் வசித்து வந்த அரசு ஊழியர்கள் காலி செய்துவிட்டனர்.
அரசு உத்தரவின் பேரிலேயே இந்த குடியிருப்புகள் காலி செய்யப்பட்டன. அப்போது இந்த பழைய குடியிருப்புகள் முற்றிலும் இடித்து தள்ளப்பட்டுவிட்டு அங்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. மேலும் ஆட்கள் வசிக்கத்தக்க வகையில் இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இந்த பழைய கட்டிடம் இடிக்கப்படவில்லை. தற்போது அவ்வப்போது சுவர்கள், மேற்கூரைகள் இடிந்து விழுந்தும், முட்புதர்கள் மரங்கள் வளர்ந்தும் பாழடைந்த நிலையில் கட்டிடங்கள் உள்ளன.
மேலும் இதனை கவனிப்பார் யாரும் இல்லாததால் காம்பவுண்டு சுவர்கள் கூட உடைந்து வெட்ட வெளி கட்டிடங்களாக உள்ளன. இதனால் தற்போது இந்த உருக்குலைந்த கட்டிடம் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. தினமும் இங்கு மது, கஞ்சா கும்பல்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் அங்கு அமர்ந்து மது அருந்தி, கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்திவிட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். மேலும் சிலர் கும்பல்களாக வந்து அவர்களுக்குள்ளேயே மோதிக்கொள்கின்றனர். இது தவிரவும் மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் இங்கு வந்து பதுங்கிக்கொள்கின்றனர்.
அவ்வப்போது தாளமுத்துநகர் மற்றும் சிப்காட் போலீசார் இங்கு வந்து பதுங்கியுள்ள நபர்களை பிடித்து செல்கின்றனர். இருப்பினும் கூட பலர் இந்த பகுதிகளுக்குள் தஞ்சமடைகின்றனர். இவை ஒருபுறம் என்றால் இந்த பாழடைந்த கட்டிடங்களுக்குள் இருந்து அடிக்கடி பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் படையெடுத்து அங்குள்ள மக்களை அச்சுறுத்தி வருகின்றன. எனவே விரைவில் இந்த கட்டிடங்களை ஒட்டுமொத்தமாக இடித்து அகற்றிவிட்டு இங்கு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
The post தூத்துக்குடி சங்கரப்பேரியில் சிதிலமடைந்து கிடக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு இடித்து அப்புறப்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.