சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் வடக்கில் இருக்கும்போது, தென்னாடுடைய சிவனே போற்றி என்று கூறுவது ஏன்?
– ஆர். சுவாமிநாதன், கும்பகோணம்.
“எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி” என்ற அடுத்த வரியை கவனித்திருக்கிறீர்களா. தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற இந்த வரிகளை நாம் திருவாசகத்தில் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறோம். திருவாசகத்தில் ‘போற்றித் திருஅகவல்’ எனும் நான்காம் அத்தியாயத்தில் 164 மற்றும் 165வது வரிகளாக இடம்பெற்றிருக்கும் இவ்விரண்டு வரிகளும் என்றென்றும் நம் நினைவில் நிற்பவையாக அமைந்துவிட்டது. திருவாசகத்தைப் பற்றி அறியாதவர் கூட இந்த வரிகளை நிச்சயமாக உச்சரிக்கத் தயங்க மாட்டார்கள். அவ்வளவு ஏன், நம்மில் பலருக்கும் இந்த வரிகள் திருவாசகத்தில் உள்ள வரிகள் என்பது கூட தெரிந்திருக்காது. மாணிக்கவாசகர் திருவாசகத்தை இயற்றிய காலத்தில் தென்னகத்தில் சைவ சமயத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. சமயச் சண்டைகள் அதிகமாக இடம் பெற்றிருந்தாலும் மாணிக்கவாசகர் முதலான ஆன்மிகப் பெரியோர்களுக்கு இறைவன் என்பது ஒருவனே என்பது நன்றாகத் தெரியும். அதனை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இறைவனை நோக்கி அவர் இவ்வாறு பாடுகிறார். தென்னாடுடைய சிவனே போற்றி. அதாவது, தென்னகத்தில் உள்ளோர் உன்னை சிவனாகக் கண்டு போற்றுகிறோம். எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. அதாவது, எந்நாட்டில் உள்ளோரும் உன்னை இறைவனாகக் கண்டு போற்றுகிறார்கள். உலகத்தில் உள்ள எல்லா நாட்டவரும் காணும் இறைவனும், தென்னகத்தில் உள்ளோர் காணும் சிவனும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் விதமாக மாணிக்கவாசகர் தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று வலியுறுத்திப்பாடுகிறார். இந்த போற்றித் திரு அகவல் என்ற அத்தியாயம் தில்லையில் அருளியது. அம்பலத்தில் ஆடுகின்ற இறைவனைக் கண்டு மாணிக்கவாசகர் ஆனந்தமாய் மெய்மறந்து உருகிய நிலையில் அருளியதாக உள்ளது. நடராஜப் பெருமானே இயற்பியல் எனும் இயற்கைப் பற்றிய தெளிவினைத் தரக் கூடியவர் என்பதை நாசா முதலான விஞ்ஞான ஆராய்ச்சி கூடங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. சிதம்பரத்தில் இன்றும் அந்நிய தேசத்தவர்கள் பெருமளவில் வந்து செல்வதைக் காண இயலும். இதனை உணர்ந்துதான் மாணிக்கவாசகப் பெருமான் எந்நாட்டவர்க்கும் இறைவனாக விளங்குபவனே எம் தென்னகத்தில் சிவனாகப் போற்றப்படுகிறான் என்று பாடுகிறார். வடக்கில் கயிலாயம் இருந்தாலும் தென்னாடுடைய சிவனே போற்றி என்று பாடப்பட்டதன் பொருள் இதுவே.
விலங்குகளுக்கும் மனிதர்களைப் போல் இறை பக்தி உண்டா?
– அயன்புரம் த. சத்தியநாராயணன்.
உண்டு என்பதையே நம் புராணங்கள் அறுதியிட்டுச் சொல்கின்றன. திருவானைக்காவல், திருக்கோகர்ணம் முதலான ஆலயங்களின் ஸ்தல புராணம் விலங்குகளின் பக்தியை நமக்குச் சொல்கிறது. யானை மற்றும் சிலந்தி பூஜித்த கதையை திருவானைக்காவல் ஸ்தலத்திலும், பசு பால் சொரிந்து சிவபூஜை செய்த கதையை திருக்கோகர்ணம் ஸ்தலத்திலும் அறிந்து கொள்ள முடியும். இவையிரண்டும் உதாரணத்திற்காகச் சொல்லப்பட்டவையே. விலங்குகளால் பூஜை செய்யப்பட்ட ஸ்தலங்களைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. இதுபோன்ற புராணக்கதைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் உண்டு. ராஜஸ்தானில் உள்ள ஒரு இடத்தில் எலிகளால் பூஜிக்கப்பட்ட அம்பிகையின் ஆலயம் மிகவும் பிரபலம். இந்த வரிசையில் குரங்கு, பாம்பு, நாய், மான், புலி, கரடி என்று பட்டியல் நீள்கிறது. இந்தியாவில் மட்டும்தான் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் உள்ளன என்று தவறாக எண்ண வேண்டாம். நம்மை விட இதுபோன்ற புராணக்கதைகள் எகிப்து நாட்டில் ஏராளம். அங்கு பன்றிகள் வழிபாடு செய்த புண்ணிய பூமி கூட உண்டு. இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்ற கருத்தினை ஏற்றுக் கொள்ளும்போது விலங்குகளுக்குள்ளும் பரமாத்மா என்ற இறைசக்தி நிச்சயமாக இருக்கும் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இவை எல்லாவற்றையும் விட அன்பு இருக்கும் இடத்தில் நிச்சயமாக ஆண்டவன் இருப்பான். அன்பே சிவம் என்ற தத்துவம் அதனை அறுதி யிட்டுச் சொல்லும். பூனை, நாய், பசு, காளை என்ற வளர்ப்புப் பிராணிகள் மட்டுமல்ல, காகம், புறா, கிளி போன்ற பறவைகள் மட்டுமல்ல, யானை, புலி, சிங்கம் முதலான வனவிலங்குகள் மட்டுமல்ல, தொட்டியில் வளர்க்கப்படும் மீன் இனங்களுக்குக் கூட தனது எஜமானனின் மேல் அன்பு செலுத்தத் தெரியும் என்பதை அவற்றை வளர்ப்பவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். அன்பு என்பதே கடவுளின் உருவம் என்பதாலும், விலங்குகளுக்கும் அன்பு செலுத்தத் தெரியும் என்பதாலும், விலங்குகளுக்கும் இறைபக்தி என்பது நிச்சயம் உண்டு என்ற கருத்தினை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
தேர்விற்கு செல்லும் முன் மாணவர்கள் செய்ய வேண்டிய ஆன்மிகக்கடமைகள் என்ன?
– அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் வணங்கி பின்பு தேர்வு எழுதச் செல்ல வேண்டும். பொதுத்தேர்விற்குச் செல்லும்போதும், தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் மாணவர்களை விட அவர்களது பெற்றோர்கள்தான் மிகுந்த ஆவலுடனும், டென்ஷனுடனும் இருப்பார்கள். தங்கள் பிள்ளைகளின் மேல் பெற்றோர்களுக்கு இருக்கும் அக்கறை இந்த உலகில் வேறு யாருக்கும் இருக்க முடியாது. ஆகவே மாணவர்கள் தங்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருக்கும் தாயாரையும், தந்தையையும் கண்டிப்பாக வணங்கி, அவர்களுடைய ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டுதான் தேர்வு எழுதச் செல்ல வேண்டும். அடுத்ததாக ஆசிரியரை வணங்க வேண்டும். பெற்றோருக்காவது ஒரு பிள்ளைதான் தேர்வு எழுதச் செல்லுவான், ஆனால் ஆசிரியர்களுக்கோ தன் வகுப்பு மாணவர்கள் அனைவரும் நல்லபடியாக தேர்வு எழுத வேண்டும் என்ற அக்கறையும், எதிர்பார்ப்பும் நிறைந்திருக்கும். அதனால் பெற்றோரைத் தொடர்ந்து ஆசிரியரை வணங்க வேண்டும். அடுத்ததாக நம்மையும் மீறிய ஒரு சக்தி இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறோம் அல்லவா, அந்த இறைசக்தியை வணங்க வேண்டும். தேர்வு எழுதச் செல்லும்போதும், தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போதும் எதிர்பாராத விதமாக எந்தவிதமான தடங்கலும் உண்டாகிவிடக் கூடாது என்று அந்த இறைசக்தியைத் துதிக்க வேண்டும். இந்த நால்வரையும் வணங்கி அதன்பின்பு தேர்வு எழுதச் செல்வதே மாணவர்களுக்கான ஆன்மிக கடமைகள் என்று சொல்லலாம். இதில் இறைநம்பிக்கை இல்லாத பகுத்தறிவு வாதம் பேசுபவர் கூட முதலில் சொன்ன மூவரையும் கட்டாயம் வணங்கிச் செல்வதே நல்லது. அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்ற கூற்றினையும், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற கூற்றினையும் நினைவில் கொண்டு ஈன்றெடுத்த பெற்றோரையும், கல்வி கற்பித்த ஆசிரியரையும் தெய்வமாக எண்ணி வணங்கிவிட்டுத் தேர்வெழுதச் சென்றால் நிச்சயமாக எதிர்பார்க்கும் வெற்றியை மாணவர்களால் பெற இயலும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
The post தெளிவு பெறுவோம்! appeared first on Dinakaran.