×
Saravana Stores

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

*மக்கள் ஒத்துழைக்க அதிகாரிகள் வேண்டுகோள்

ஆம்பூர் : திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் பொதுமக்களும் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீடுகளுக்கு அருகில் தண்ணீர தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் டப்பாக்கள் என மழை நீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அகற்ற வேண்டும். சுகாதாரமாக இருப்பதால் மக்கள் டெங்கு மட்டுமின்றி பெரும்பாலான மழைக்கால காய்ச்சல் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

வெளியே சென்று வீடு திரும்புபவர்கள் கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். குழந்தைகளும் கைகளை கழுவிவிட்டு சாப்பிடுகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கோ, தனியார் மருத்துவமனைகளுக்கோ சென்று சிகிச்சை பெற வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.பொதுமக்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்தால் டெங்கு பரவுவதை முழுமையாக தடுக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில் ஆம்பூர் நகராட்சியில் பல்வேறு வார்டுகளில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று ஆம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் டெங்கு கொசுப்புழு கண்டறிதல் மற்றும் ஒழிப்பு பணியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். துப்புரவு அலுவலர் அருள் செல்வதாஸ் தலைமையில் நடந்த இந்தபணிகளை நேற்று ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சந்தானம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது நீர் நிரப்பி வைத்திருக்கும் கேன்கள், நீர் தேக்க தொட்டிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். பின்னர் அந்த பகுதியில் குப்பை கூளங்கள், டயர்கள், கட்டிட கழிவுகள் ஆகியவை கொட்டி இருந்தவை அப்புறபடுத்தபட்டன. இந்த ஆய்வின் போது அப்பகுதி கவுன்சிலர் இம்தியாஸ் அஹ்மத், துப்புரவு ஆய்வாளர்கள் சீனிவாசன், பாலசந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ரத்த பரிசோதனை அவசியம்

குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்ய பரிந்துரை செய்வார்கள். எனவே காய்ச்சல் பாதிப்பு இருந்தால் பொதுமக்கள் சுய மருத்துவம் செய்து கொள்ளாமல், டாக்டரை அணுக வேண்டும். இதன் மூலம் டெங்கு பாதிப்பை ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்திவிடலாம். மேலும் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும்.

டாக்டர் பரிந்துரையின்றி மருந்து விற்றால் நடவடிக்கை

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் மருந்துகளை விற்பனை செய்வதாக புகார்கள் வருகிறது. எனவே டாக்டர் பரிந்துரையின்றி மருந்து கடைகளில் மருந்துகளை விற்பனை ெசய்யக்கூடாது. அவ்வாறு விதி மீறி மருந்துகளை விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மருந்து கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்துள்ளனர்.

The post திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tirupattur district ,Ampur ,North-East ,
× RELATED சமூக வலைதளங்களில் பள்ளி, கல்லூரி...