×
Saravana Stores

திராவிட மாடல் அரசை பார்த்து எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

நாகை: திராவிட மாடல் அரசை பார்த்து எடப்பாடி வயிற்றெரிச்சல் படுகிறார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று திருச்சி மாவட்டம் துறையூரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் அவர் இரவு காரில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சென்றார். அங்குள்ள ஓட்டலில் இரவு தங்கினார்.

இன்று காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு நாகை மேலகோட்டைவாசல் வந்த உதயநிதி ஸ்டாலின், அங்குள்ள திருமண மண்டபத்தில் மாநில மீனவரணி துணை செயலாளரான அக்கரைப்பேட்டை மனோகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:
கலைஞர் முதல்வராக இருந்தபோது சொத்தில் சம உரிமை, உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம், காவல்துறையில் பெண்கள் நியமனத்தை கொண்டு வந்தார். இன்று தமிழகத்தில் அதிக பெண்கள் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர்களாக உள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் முதன்முதலாக பெண்கள் பேருந்தில் இலவச பயணம் செய்ய விடியல் பயணம் திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் பெண்கள் மாதம் ரூ.1,000 மிச்சம் செய்கிறார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை, உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளார். பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் உரிமை திட்டத்துக்கு 1.55 கோடி பெண்கள் விண்ணப்பம் செய்தனர். இதில் 1.16 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

கலைஞரின் பெயரை எல்லா திட்டத்துக்கும் வைப்பதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். திராவிட மாடல் அரசை பார்த்து வயிற்றெரிச்சல்படுகிறார். 2026 சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தலாகும். இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று தலைவர் கூறியுள்ளார். இதற்கு கழகத்தினர் அனைவரும் இப்போதே உழைக்க வேண்டும் என்றார்.

திருமண விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரகுபதி, மெய்யநாதன், கோவி.செழியன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், எம்பி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நாகை அவுரித்திடலில் திமுக சார்பில் கட்சி முன்னோடிகள், பொது மக்கள், தூய்மை பணியாளர்கள், விளையாட்டு வீரர்கள் 2,700 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கையுறை, குடை, வேட்டி, சட்டை, சேலை, விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

The post திராவிட மாடல் அரசை பார்த்து எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dravitha ,Deputy ,Udayanidhi ,Nagai ,Deputy Principal ,Udayaniti Stalin ,Tamil Nadu ,Deputy Chief Minister ,Trichy ,Deputy Chief ,
× RELATED என் பிறந்தநாளை முன்னிட்டு ஃப்ளெக்ஸ்...