சென்னை : மேற்கு நோக்கிநகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் தற்போது ஈரோடு, சேலம் மாவட்டங்களில் நிலை கொண்டுள்ளது. இது நாளை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து அரபிக் கடலுக்கு சென்று மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் நேற்று மரக்காணம் அருகே கரை கடந்தது. பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து திண்டிவனம் பகுதிக்குள் சென்றது. அதைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக செயலிழந்து கல்வராயன் மழையோரத்தில் குறிப்பாக ஹரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களின் இடைப்பட்ட கோமுகி அணையை ஒட்டிய பகுதியில் வளி மண்டலத்தில் உயர்ந்த சுழற்சியுடன், அசையாத மற்றும் செயலிழக்காத மண்டலமாக இன்று மதியம் வரை தொடர்ந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு வேளை செயலிழக்கும்பட்சத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகத்தான் செயலிழக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி செயலிழந்தால் சேலம், தர்மபுரி வழியாக கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு இடைப்பட்ட பகுதி வழியாக ஈரோடு மாவட்டம் வடக்குப் பகுதி வழியாக கர்நாடகாவின் வழியாகவும், நீலகிரி மாவட்டத்தின் எல்லையோரமாக வடக்கு நோக்கி நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இது கோழிக்கோடு மங்களூர் வழியாக கடலில் இறங்கி மீண்டும் தீவிரம் அடைந்து படிப்படியாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் தீவிரம் அடைந்து ஏமன் நாட்டு கடலோரப் பகுதியை நோக்கி நகரத் தொடங்கும். மேற்கண்ட இந்த நிகழ்வுகளின் காரணமாக இன்று முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்யத் தொடங்கும். நாளை(3ம் தேதி) அதிக கனமழை கொட்டும். 4ம் தேதி கேரளா, கர்நாடகா மற்றும் நீலகிரி, உள்ளிட்ட தமிழ்நாட்டின் பகுதிகளுக்கு அதீத மழையைக் கொடுக்கும். குறிப்பாக இந்த 3 நாட்களுக்கு நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களுக்கும் வடக்கு கேரளாவிலும், தெற்கு கர்நாடகாவின் பெங்களூரு முதல் மங்களூர் வரையில் மைசூரை மையமாக வைத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான வயநாடு, குடகு ஆகிய இடங்களை மையமாக வைத்து இந்த மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இரவில் ஹரூர் பகுதியில் 330 மிமீ மழை பெய்துள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி 200மிமீ, பெண்ணாகரம் 110 மிமீ, ஒகேனக்கல், தர்மபுரி 80மிமீ, மழை பெய்துள்ளது. ஏற்காடு 240 மிமீ மழை பெய்துள்ளது. ஓமலூர் 100மிமீ, பெய்துள்ளது.
The post மேற்கு மாவட்டங்களில் நாளை கனமழை.. கரை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபிக் கடலுக்கு பயணம் appeared first on Dinakaran.