×

விவசாய நிலத்தில் புகுந்த முதலையால் பரபரப்பு

 


கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அருகே கீரப்பாக்கம் ஊராட்சியில் கீரப்பாக்கம், முருகமங்கலம், பெரிய அருங்கால், சின்ன அருங்கால் கிராமங்களில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய அருங்கால் கிராமத்தில், சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட யூனியன் ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து நேற்று நள்ளிரவு 2 மணியளவில் சுமார் 7 அடி நீளமுள்ள முதலை ஒன்று, ஊரப்பாக்கத்தில் இருந்து நல்லம்பாக்கம் செல்லும் சாலையை கடந்து, அங்குள்ள விவசாய நிலத்துக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து வந்த தாம்பரம் வனத்துறையினர் முதலை தப்பி செல்லாதபடி, கயிற்றினால் கட்டி போட்டனர். பின்னர் கிண்டி மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவல் கிராம மக்களிடையே காட்டுத் தீ போல் பரவியது. இதைத் தொடர்ந்து, அந்த முதலையை காண மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமான கிராம மக்கள் குவிந்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட நெடுங்குன்றம், ஆலப்பாக்கம், சதானந்தபுரம் ஏரிகளில் ஏற்கனவே முதலைகள் உள்ளன என்று தெரிவித்தனர். இதனால் கீரப்பாக்கம் ஊராட்சியில் மக்களிடையே பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது.

The post விவசாய நிலத்தில் புகுந்த முதலையால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kuduvancheri ,Keerappakkam ,Murugamangalam ,Periya Arunkal ,Chinna Arunkal ,Keerapakkam ,Urapakkam, Chengalpattu district ,Arungal ,
× RELATED ஏரியில் கவிழ்ந்த சிமென்ட் லாரி : 3 பேர் உயிர் தப்பினர்