×

மழைக்கால நோய்கள் வராமல் தடுப்பது எப்படி?.. சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்

வேலூர்: மழை மற்றும் பனிபொழிவால் ஏற்படும் நோய்களை தடுப்பு எப்படி என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மனிதர்களுக்கு மழைக்காலம் வந்தாலே சளி முதல் டெங்கு வரை தொற்றுநோய்கள் வரக்கூடும். குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான இந்த சூழல் நோய்க்கிருமிகளின் தாக்கத்தால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் மற்றும் ஈக்கள் மூலம் பரவும் நோய்களும் அதிகரிக்க கூடும். மழைக்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தண்ணீரினால் பரவும் நோய்கள் எளிதாக வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்மழை பெய்து வருகிறது. மேலும் பனிபொழிவும் உள்ளது. இந்த சமயத்தில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து ஓடும் இடங்களில் நடந்து செல்லும்போதும் வைரஸ் கிருமிகள் பரவி நோய்கள் ஏற்படும்.

சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் காலரா, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை உள்பட பல நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது எல்லா வயதினருக்கும் வரும். மழைநீர் தேங்கிய பகுதியில் உருவாகும் கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் உள்ளிட்ட நோய்கள் பரவும். மூளைக்காய்ச்சல், டெங்கு நோய் குழந்தைகளை அதிகம் பாதிக்கும். தெருவில் ஓடும் கழிவுநீரால் எலி காய்ச்சல் ஏற்படும். தமிழகத்தில் சுகாதாரத்துறை நடத்திய ஆய்வின்படி, மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழக்கத்தைவிட அதிகம் பேர் மழைக்கால நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க எளிதான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்தாலே போதும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் மழைக்கால நோய்கள் பொதுமக்களை அதிகளவில் தாக்கி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் செய்து கொள்ள வேண்டும். சில கிருமிகள் மருந்துகளுக்கு கட்டுப்படாதவைகளாக உள்ளது. அதனால் தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் ஆரம்ப கட்டத்திலேயே ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து என்ன கிருமி தாக்கியுள்ளது என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தபடி சிகிச்சை பெற வேண்டும்.

குழந்தைகளுக்கு மழைக்காலத்தில் கதகதப்பான ஆடைகளையே அணிவிக்க வேண்டும். மழைக்காலத்தில் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். கூடுமானவரை பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் வீட்டில் காய்ச்சிய குடிநீரையே எடுத்து சென்று பயன்படுத்தினால் மழைக்கால நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். மேலும் நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவ முகாம்கள் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கேயே பொதுமக்கள் சிகிச்சை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கை கழுவி விட்டு சாப்பிட வேண்டும்
மழைக்காலத்தின்போது சுகாதார முறையில் கட்டப்பட்ட கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டு வாசல், தெருக்கள், நடைபாதைகளில் குழந்தைகளை மலம் கழிக்க வைக்கக்கூடாது. பெரியவர்களும் கண்ட கண்ட இடங்களில் சிறுநீர், மலம் கழிக்கக்கூடாது. மழை நீருடன் மலம், சிறுநீர் ஆகியவை கலந்து நோய் கிருமிகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளது.வீட்டை சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். வெளியே சென்று வீடு திரும்பியதும் கை, கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். செருப்பு, ஷூ ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உணவு சாப்பிடும் முன்பு கட்டாயம் கைகழுவ வேண்டும். குழந்தைகள் கை கழுவுகிறார்களா என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அப்போது மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கின்றனர் டாக்டர்கள்.

The post மழைக்கால நோய்கள் வராமல் தடுப்பது எப்படி?.. சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Dinakaran ,
× RELATED வேலூர் சதுப்பேரியில் இருந்து...