×
Saravana Stores

வேலூர் சதுப்பேரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு

*நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வேலூர் : வேலூர் சதுப்பேரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.வேலூர் மாநகரின் பிரதான நிலத்தடி நீராதாரமாக விளங்குவது சதுப்பேரி.

பாலாற்றில் இருந்து வரும் தண்ணீரும், பருவமழையின்போது கிடைக்கும் தண்ணீருமே இதற்கான நீராதாரம். 621 ஹெக்டேர் பரப்பளவுள்ள சதுப்பேரியால் 10 கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் பெய்த பருவமழையால் சதுப்பேரி முழுமையாக நிரம்பியது.

இந்த ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்ததால் இதன் வழியாக செல்லும் தண்ணீர் குடியிருப்புகளில் சூழ்ந்தது. ஏற்கனவே ஏரியும் பல ஏக்கர் நிலபரப்பு ஆக்கிரமிப்பில் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் உபரிநீர் வெளியேறும் கால்வாய் முழுவதும் குப்பைகள் மலைபோல் கொட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் அளவீடு செய்யப்பட்டு அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி வேலூர் சதுப்பேரியின் உபரிநீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிப்புகளும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது.

இந்நிலையில் சதுப்பேரியின் உபரிநீர் வெளியேறும் கலங்கு பகுதியின் அருகில் கால்வாய் கரையையொட்டி திடக்கழிவு மேலாண்மை மையம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உபரிநீர் வெளியேறும் கால்வாயில் உள்ள குப்பைகள் கொட்டப்பட்டு வருறிது. மேலும் மர்ம ஆசாமிகள் தீ வைத்து எரித்து விடுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.எனவே சதுப்பேரியின் உபரிநீர் வெளியேறும் கால்வாயில் குப்பைகளை கொட்டாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேலூர் சதுப்பேரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Vellore Saduperi ,Vellore ,Vellore Satupperi ,Satupperi ,Dinakaran ,
× RELATED வேலூர் மக்களின் எதிர்பார்ப்பு...