- கார்த்திகை தீபத்ருவிழ்ய தினம்
- அண்ணாமலை கோவில்
- திருவண்ணாமலை
- Mahadipam
- திருவண்ணாமலை அண்ணாமலை கோயில்
- கார்த்திகை தீபத்திருவிழா
- கார்த்திகை திபதர்விழ்யா
- கார்த்திகை தீபத்ருவிசா
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்திபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா நாளை (4ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் அண்ணாமலையார் சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும். அதைத்தொடர்ந்து காலை பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனியும், இரவில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி பவனியும் நடைபெறும். வரும் 5ம்தேதி 2ம்நாள் காலை உற்சவத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி நடைபெறும்.
6ம்தேதி 3ம் நாள் காலை உற்சவத்தில் நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் சிம்ம வாகனம், வெள்ளி அன்னவாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர். 7ம்தேதி 4ம்நாள் உற்சவத்தில், காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி வருகின்றனர். 8ம் தேதி 5ம்நாள் காலை உற்சவத்தில் கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி நடைபெறும். 9ம்தேதி 6ம்நாள் காலை உற்சவத்தில் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் வெள்ளித் தேரோட்டமும் நடைபெறும்.
10ம் தேதி 7ம் நாள் உற்சவத்தில் மகா தேரோட்டம் நடைபெறும். அன்று மாட வீதியில் பஞ்சரதங்களும் பவனி வரும். 11ம்தேதி 8ம்நாள் உற்சவத்தில் காலையில் குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும், மாலையில் பிச்சாண்டவர் உற்சவமும், இரவு குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் பவனியும் நடைபெறும். 12ம்தேதி 9ம் நாள் காலை உற்சவத்தில் புருஷாமுனி வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் கைலாச, காமதேனு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து சிகர நிகழ்ச்சியாக 13ம்தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இதற்கிடையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் தொடக்கமாக எல்லை தெய்வ வழிபாடு கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. தீபத்திருவிழா எந்த இடையூறும் இல்லாமல், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்க வேண்டி இந்த வழிபாடு நடத்தப்படுவது மரபாகும். அதன்படி, முதல் நாளான நேற்று முன்தினம் துர்க்கை அம்மன் உற்சவம், 2ம் நாளான நேற்றிரவு பிடாரி அம்மன் உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று இரவு சிம்ம வாகனத்தில் பிடாரியம்மன் மாட வீதியில் பவனி வந்து அருள்பாலித்தார்.
தீபத்திருவிழா எல்லை தெய்வ வழிபாட்டின் நிறைவாக, இன்றிரவு விநாயகர் உற்சவம் நடைபெற உள்ளது. அப்போது, வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை தொடங்குகிறது: 13ம் தேதி மகாதீபம் appeared first on Dinakaran.