×

பத்தனம்திட்டா அருகே மிரண்டு ஓடிய யானை மீது 10 மணிநேரம் தவித்த பாகன்: வனத்துறையினர் மீட்டனர்


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள குளநடை பகுதியில் மரத்தடி பிடிப்பதற்காக ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு என்ற இடத்தில் இருந்து அப்பு என்ற யானை வரவழைக்கப்பட்டது. இந்த யானை நேற்று முன்தினம் காலை சுமார் 11.30 மணியளவில் கூரம்பாலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. யானையின் மீது அதன் பாகன் குஞ்சுமோன் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சில தெருநாய்கள் யானையைப் பார்த்து குரைத்தன. இதனால் பயந்த யானை மிரண்டு ஓடியது. அங்குள்ள ரப்பர் தோட்டத்திற்குள் புகுந்த யானை சில ரப்பர் மரங்களை சாய்த்தது. பாகனும், பின்னால் வந்த உதவி பாகன்களும் யானையை அமைதிப்படுத்த முயன்றும் எந்தப் பலனும் ஏற்பட வில்லை.

கடைசியில் உதவி பாகன்கள் சேர்ந்து மாலை சுமார் 5.30 மணியளவில் யானையை சங்கிலியால் ஒரு மரத்தில் கட்டிப் போட்டனர். ஆனால் அதன் பின்னரும் யானை முரண்டு பிடித்தது. இதனால் பாகனால் கீழே இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்தி பாகனை கீழே இறக்க திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் அந்த பகுதியில் பலத்த மழை பெய்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடைசியில் இரவு சுமார் 10 மணியளவில் தான் மின்சாரம் வந்தது. அதன் பிறகு வனத்துறையினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பாகனை கீழே இறக்கினர். சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் யானை மீது பயத்துடன் இருந்ததால் பாகன் குஞ்சுமோன் களைப்புடன் காணப்பட்டார். இதையடுத்து அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

The post பத்தனம்திட்டா அருகே மிரண்டு ஓடிய யானை மீது 10 மணிநேரம் தவித்த பாகன்: வனத்துறையினர் மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : Bagan ,Pathanamthitta ,Forest Department ,Thiruvananthapuram ,Appu ,Haripad ,Alappuzha ,Kulanadai ,Pathanamthitta, Kerala ,Coorambalai ,
× RELATED காவிரி கரையோரம் பிலிகுண்டுலுவில்...