பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நான்கு போக்குவரத்து கழகங்களின் சார்பில் இயக்கப்படும் அரசு பேருந்து கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாகவும், இது ஜன.5ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, விதான சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் எச்.கே.பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சரவை கூட்டத்தில் பஸ் கட்டண உயர்வு உள்ளிட்ட 23 விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கடந்த பல வருடமாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஊழியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கையால் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று போக்குவரத்து கழகங்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து விவாதிக்கப்பட்டு 15 சதவீதம் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
சாதாரண மற்றும் ஏசி பஸ் உள்ளிட்ட அனைத்து பஸ்களிலும் 15 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால் தினந்தோறும் ரூ.7.84 கோடி போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இதன் மூலம் மாதந்தோறும் சுமார் ரூ.74.85 கோடி நான்கு போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். புதிய கட்டண உயர்வு 5ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதே நேரம் பெண்கள் இலவச பயண திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது. வழக்கம் போல் பெண்கள், ஆதார் கார்டுகளை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என்றார்.
The post கர்நாடகாவில் பஸ் கட்டணம் 15% உயர்வு: ஜன.5 முதல் அமல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.