×

திடக்கழிவுகள் கலப்பதை தடுக்க ஊட்டி ஏரியில் ரூ.1.20 கோடியில் தானியங்கி இயந்திரம் அமைப்பு

ஊட்டி : ஊட்டி ஏரியில் பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகள் கலக்காமல் இருக்க ஏரியின் நுழைவு பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் மத்தியில் ஊட்டி ஏரி அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கிய ஏரியாக விளங்கி வந்த ஏாியில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் காலபோக்கில் ஊட்டி நகரில் ஒடும் கழிவு நீர் அனைத்தும் ஏரியில் கலந்தது. இதனையடுத்து படகு சவாரிக்கு மட்டும் இந்த ஏரி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லம் உள்ளது. ஊட்டி ஏரிக்கு வரும் தண்ணீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக வருகிறது.

இந்த கால்வாய் நகரின் மையப்பகுதியில் செல்கிறது. கால்வாயின் இருபுறமும் உள்ள ஓட்டல்கள், குடியிருப்புகள், லாட்ஜ்கள் உள்ளன. இவைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் கால்வாயில் திறந்து விடுகிறது. இக்கழிவு நீா் ஏாியில் கலப்பதால் ஏாி மாசடைகிறது. இந்நிலையில் பழமை வாய்ந்த ஊட்டி ஏரியை பாதுகாக்கும் வகையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த ஆண்டு துவக்கத்தில் பணிகள் துவங்கின. முதற்கட்டமாக கோடப்பமந்து கால்வாயில் கோத்தகிரி சாலையில் இருந்து உழவர் சந்தை பகுதி, ஏடிசி., மத்திய பஸ் நிலைய பகுதிகளில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஊட்டி ஏரி தூர் வாரப்படாத காரணத்தாலும் ஒவ்வொரு பருவமழைக் காலங்களில் வண்டல் அதிகளவு சேர்வதாலும் மழைக் காலங்களில் வெள்ளநீர் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது. ஏரியின் சூழலியலை காக்க நவீன தொழில் நுட்பத்தில் டிரேட்ஜிங் முறையில் தூர் வாரும் பணிகள் ரூ.7.51 கோடி மதிப்பீட்டில் துவக்கப்பட்டுள்ளது. இந்த தூர் வாருதல் திட்டம் மூலமாக முதல் கட்டமாக 1 லட்சத்து 16 ஆயிரத்து 700 கன மீட்டர் அளவுக்கு தூர் வாரப்பட உள்ளது.

தூர்வாறும் பணிகள் ஒரிரு நாட்களில் துவக்கப்பட உள்ளது. இதனிடையே கோடப்பமந்து கால்வாயில் இருந்து வரக்கூடிய தண்ணீர் ஏரிக்குள் நுழையும் நுழைவுவாயில் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் மழைக்காலங்களில் அடித்து வரப்படும் பிளாஸ்டிக் மற்றும் இதர திடக்கழிவுகளை நீக்கும் தானியங்கி துப்புரவு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரமும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்வாயில் மிதந்து வரக்கூடிய கழிவுகளை அகற்றி நீர் மட்டும் ஏரிக்குள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இழுவை படகு போன்ற சேகரிப்பு பெட்டிகள், கன்வேயர் முறை, கிரப்பிள் வாளிகள், சுத்தம் செய்ய வசதியாக வாட்டர் ஜெட் உள்ளிட்டவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட அபாயகரமான கழிவுகளை மனிதர்கள் கையாள்வது தவிர்க்கப்படும். மேலும் ஊட்டி ஏரி மண், குப்பை, செடி, கொடிகளால் ஆக்கிரமிப்பு இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருளழகன் கூறுகையில், ‘‘ஊட்டி ஏரியை பாதுகாக்கும் வகையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கோடப்பமந்து கால்வாய் மற்றும் ஊட்டி ஏரி ஆகியவை தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் ஏரியின் நுழைவாயில் பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தானியங்கி இயந்திர அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைக்காலங்களில் கால்வாயில் அடித்து வரப்படும் கழிவுகள் ஏரியில் கலக்காமல் தானியங்கி முறையில் அகற்றப்படும். இதனால் ஏரியின் சுகாதாரம் பாதுகாக்கப்படும்’’ என்றார்.

பஸ் நிலைய பகுதி முதல் சுத்திகரிப்பு நிலையம் வரை தூர் வார கோரிக்கை

பருவமழை பெய்யும் போது சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளுடன் அடித்து வரப்படும் கழிவுகள் பஸ் நிலையம் அருகேயுள்ள பாலம் முதல் சுத்திகரிப்பு நிலையம் வரை சுமார் 500 மீ்ட்டர் தூரத்திற்கு கோடப்பமந்து கால்வாயில் தேங்கி விடுகின்றன. இதன் காரணமாக கால்வாய் உள்ள மண் திட்டும், சாலை மட்டமும் ஒரே சமமாக உள்ளது.

இதனால் கால்வாயில் வரும் மழைநீர், படகு இல்ல சாலையில் ரயில்வே பாலத்திற்கு அடியில் தேங்கி விடுவதால் படகு இல்ல சாலையில் போக்குவரத்து பாதிப்பதுடன், அங்குள்ள ரயில்வே காவல் நிலையமும் மழை நீரில் சிக்கி கொள்கிறது. அண்மையில் கனமழை கொட்டிய போது மழைநீர் செல்ல வழியின்றி போக்குவரத்து கழக பணிமனைக்குள் புகுந்தது.

எனவே இப்பகுதியில் பஸ் நிலைய பாலம் முதல் சுத்திகரிப்பு நிலையம் வரை உள்ள கால்வாயில் சாலை மட்டத்திற்கு குவிந்துள்ள மண் மற்றும் செடிகளை அகற்றி அழப்படுத்த வேண்டும். அவ்வாறு அகற்றினால் தான், படகு இல்ல நுழைவுவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரத்தின் பயன்பாடு வெற்றிகரமாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post திடக்கழிவுகள் கலப்பதை தடுக்க ஊட்டி ஏரியில் ரூ.1.20 கோடியில் தானியங்கி இயந்திரம் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty lake ,Ooty ,Ooty city ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்