×

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த‘குங்குமம் – தோழி’ இதழின் பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா நிறைவு

* குடும்பம், குடும்பமாக வந்து ஷாப்பிங் செய்த பெண்கள், அதிரடி தள்ளுபடியால் பொருட்களை அள்ளிச் சென்ற கூட்டம்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3 நாட்கள் நடந்து வந்த தினகரன், ‘குங்குமம் – தோழி’ இதழின் பிரமாண்டமான ஷாப்பிங் திருவிழா நிறைவடைந்தது. தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்து கண்காட்சியை கண்டுகளித்து மகிழ்ச்சியுடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், ஹெல்த் கேர் பொருட்கள், மணப்பெண் உடைகள், பேஷன், நுகர்வோர் பொருட்கள், தங்கம் மற்றும் வைர நகைகள், கைவினை பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், பர்னிச்சர்கள், ஊட்டச்சத்து பொருட்கள், ஆர்கானிக் பொருட்கள், மருத்துவம், விளையாட்டு உடைகள், ஸ்டேஷனரி பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஆட்டோ மொபைல் மற்றும் ரியல் எஸ்டேட் என அனைத்து பெண்கள் சார்ந்த பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் தினகரன் நாளிதழ், ‘குங்குமம் – தோழி’ இதழ் சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாபெரும் ஷாப்பிங் திருவிழா கடந்த 6ம் தேதி தொடங்கியது.

இதனை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில், கனரா வங்கி, லைப்லைன் மருத்துவமனை, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பதஞ்சலி உள்ளிட்ட நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்று வந்தது. இதில் இயற்கை வைத்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இயற்கை மூலிகையில் தயாரிக்கப்பட்ட குளிர்பானம், மூலிகை பவுடர்கள், சுக்கு காப்பி, முளைக்கட்டிய தானியங்களின் இயற்கையான ஊட்டச்சத்து மாவு விற்பனை செய்யும் ஸ்டால்கள், குளிர்பானம் என அனைத்து விதமான பொருட்களும் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டன. இதுதவிர, எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் குறைந்த விலையில் மொபைல் போனுக்கு தேவையான சார்ஜர், ஹெட்செட், அலங்கார மின்விளக்குகள் போன்றவற்றை வாங்குவதற்கு கூட்டம் அலை மோதியது. அதேபோல், காஞ்சிபுரத்தில் இருந்து நேரடியாக நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பட்டுப் புடவைகள் மற்றும் பல்வேறு வெரைட்டிகளில் புடவைகள் விற்பனை களைகட்டியது.

தங்கம் மற்றும் வைர நகைகள், கைவினை பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அலைமோதின. சுமார் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் விதவிதமான பொருட்கள் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தது. அதிலும், விநாயகர் சதுர்த்தி மற்றும் ஞாயிற்றுகிழமை என தொடர் விடுமுறை என்பதால் மக்கள் குடும்பம், குடும்பமாக ஷாப்பிங் செய்ய வந்திருந்தனர். விற்பனையாளர்களும் மகிழ்ச்சியுடன் வியாபாரம் செய்தனர். கடந்த 3 நாட்களாக தினகரன், குங்குமம்- தோழி இதழ் நடத்திய பிரம்மாண்டமான ஷாப்பிங் திருவிழா நேற்றைய தினத்துடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

* நேரடியாக வந்து வாங்குவதில் மகிழ்ச்சி
கண்காட்சி குறித்து அரங்கிற்கு வந்த பெண்கள் கூறியதாவது: தினகரன், ‘குங்குமம் – தோழி’ இதழ் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஷாப்பிங் திருவிழாவில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது சிறப்பாக இருந்தது. குறிப்பாக, அழகு சாதன பொருட்கள், நகைகள், ஆடைகள் என எல்லாம் கிடைக்கும் இடமாக இந்த இடம் இருந்தது. எங்களைப் போன்ற பெண்களுக்கு ஷாப்பிங் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. பொருட்களின் விலைகள் என்பது அதனுடைய தரத்தை பொருத்து நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதை விட நேரடியாக வந்து பொருட்களை வாங்குவது பிடித்தமான ஒன்றாக இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த‘குங்குமம் – தோழி’ இதழின் பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா நிறைவு appeared first on Dinakaran.

Tags : Kungumam — ,Nandambakkam Trade Centre, Chennai ,Chennai ,Dinakaran ,Nandambakkam Trade Centre ,Grand Shopping Festival of ,Kungumam — Dhosy' ,
× RELATED ஏய் குருவி… சிட்டுக்குருவி!