நன்றி குங்குமம் தோழி
பெண்கள் படித்தார்கள், வேலைக்குச் சென்றார்கள். ஆனால், இன்று பெரும்பாலான பெண்கள் தொழில்முனைவோராகவே இருக்க விரும்புகிறார்கள். மற்றவரின் கீழ் வேலை செய்வதை தவிர்த்து தனக்கென சொந்தமாக ஒரு தொழிலை அமைத்துக் கொண்டு அதன் மூலம் தங்களுக்கான அடையாளத்தினை ஏற்படுத்திக் கொள்ளவே நினைக்கிறார்கள். அந்த வரிசையில் ‘உழைப்பே எனது மூலதனம்… தரமே எனது தாரக மந்திரம்’ என்ற வாசகத்திற்கேற்ப டெக்ஸ்டைல் துறையில் அசத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த உமா அபிராமி.
முதுநிலை பட்டதாரியான இவர் சுய தொழிலில் ஈடுபட்டு நிறைய சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தோடு கார்மென்ட் தொழிலில் இறங்கி சாதித்து வருகிறார். ‘ஹவுஸ் ஆஃப் ஆரா’ என்கிற பெயரில் அழகிய ரக புடவைகளை தேர்வு செய்து விற்பனை செய்கிறார். மேலும், புடவை விற்பனை, அதிலுள்ள சவால்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
டெக்ஸ்டைல் துறை…
இந்தியாவில் புடவைகளுக்கான தேவை அதிகம் உள்ளது. குறிப்பாக விசேஷ நாட்கள் என்றால், தாங்கள் உடுத்தும் புடவை தனித்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நடிகைகளும் விழாக்களுக்கு புடவையே தேர்வு செய்கிறார்கள். புடவைக்கென தனிப்பட்ட அழகு உள்ளது. அதனால் அந்த உடையை என்றுமே ஃபேஷன் உலகில் இருந்து நீக்க முடியாது. என்னுடைய தொழிலும் என்றுமே நீக்க முடியாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் புடவை பிசினஸை ஆரம்பிக்க விரும்பினேன். மேலும், சிறுவயது முதலே எனக்கு ஃபேஷன் மேல் தனிப்பட்ட ஆர்வம் இருந்தது.
நான் அணியும் உடையினை பார்த்து எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நிறைய பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். அதில் கிடைத்த ஊக்கம்தான் ‘ஏன் அதையே ஒரு தொழிலாக செய்யக்கூடாது’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அப்படித்தான் நான் இந்தத் தொழிலுக்குள் என்னை புகுத்திக் கொண்டேன். எனக்கு அழகாக உடைகளை தேர்வு செய்ய தெரியும்.
ஆனால், அதையே பிசினஸாக எப்படி செய்வது என்று தெரியாது. அதனால் சிறிய தொகையை முதலீடு செய்து ஆரம்பித்தேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். பிறகு விரிவுபடுத்த ஆரம்பித்தேன். புடவைகள் மட்டுமில்லாமல், அதற்கான மேட்சிங் பிளவுஸ்கள் மற்றும் உடைகளுக்கு ஏற்ப அணிகலன்கள் என அனைத்தும் விற்பனை செய்து வருகிறேன்.
விற்பனையும் வாடிக்கையாளர்களும்…
கண்காட்சி போன்ற இடங்களில் கண்டிப்பாக என்னுடைய ஸ்டால் இருக்கும். இப்போது ஆன்லைன் டிரெண்டிங் என்பதால், அதிலும் விற்பனை செய்கிறேன். மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் உடைகளும் உள்ளன. கடை மற்றும் வேலையாட்கள் இல்லாததால், நியாயமான விலையில் கொடுக்க முடிகிறது. வாடிக்கையாளர்களுக்கு பணம் மற்றும் நேரம் லாபம்தானே. உடைகளுக்கான மேட்சிங் அணிகலன்களும் எனது விற்பனைக்கு மற்றொரு காரணம்.
இதற்காக நான் பெரிய அளவில் விளம்பரம் எல்லாம் செய்யவில்லை. வாய் மொழியாகவும், தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலமாகத்தான் என்னுடைய வாடிக்கையாளரின் வட்டம் அதிகரித்துள்ளது. கல்லூரி, கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் அபார்ட்மென்ட் நிகழ்ச்சிகளில் ஸ்டால்கள் அமைப்பதாலும் வாடிக்கையாளர்களை பெற்றுத் தருகிறது.
நான் இந்தத் தொழில் துவங்க என் குடும்ப உறுப்பினர்கள்தான் முக்கிய காரணம். அவர்கள் தந்த ஒத்துழைப்பு தான் என்னை இந்த துறையில் வளரச் செய்துள்ளது. குறிப்பாக என் மாமியார்தான் எனக்கு ஊக்கம் அளித்தார். எனது கணவர் தொழிலுக்கான பல ஆலோசனைகளை வழங்குவார்.
புதிய முயற்சிகள் மற்றும் திட்டங்கள்…
விரிவுபடுத்தி டெக்ஸ்டைல் ஷோரூம் வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறேன். மேலும், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் திரைச்சீலைகளை அறிமுகப்படுத்த இருக்கிறோம். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமான செட் உடைகள், குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகளும் விற்பனை செய்ய இருக்கிறோம். பர்ஸனல் பிராண்டிங் மற்றும் ஸ்டைலிங் போன்றவற்றை பிறந்தநாள் விழா, திருமண நாள் விழா, கார்ப்பரேட் ஈவென்ட் போன்ற நிகழ்வுகளில் உடைகளுக்கான, நகைகளுக்கான தேர்வினை வழங்க உள்ளோம்.
ஒரே இடத்தில் அனைத்தும் விற்பனை செய்வதால், வாடிக்கையாளர்களும் ஆர்வமாக வாங்க வருவார்கள். இணையம் அமைத்து அதன் மூலமாக விற்பனையை அதிகப்படுத்தும் எண்ணங்கள் இருக்கிறது. இனி வரும் காலங்களில் சோஷியல் மீடியாக்களே விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலை அதிகளவில் தீர்மானிக்கும் என்கிறார்கள். அதற்கேற்ப எங்களின் பிசினஸை அமைக்க திட்டமிட்டு வருகிறோம்.
பெண்களுக்கு ஆலோசனை…
குடும்பத்தை பார்த்துக் கொண்டு அதே நேரத்தில் தொழிலையும் ஈடுபாட்டுடன் செய்ய எளிதாக இருக்கிறது. பெண்கள் தாராளமாக இந்த துறையில் தொழிலில் இறங்கலாம். கிரியேட்டிவிட்டி மற்றும் கலர் தேர்வுகள் இருந்தால் சிறப்பான தொழிலாக இது அமையும். நஷ்டமும் அதிகமாக ஏற்படாது. நாமே முதலாளி என்பதால் பெரிய அளவிலான நிர்பந்தங்கள் இருக்காது. போட்டிகள் அதிகம் உள்ள தொழிலாக இருந்தாலும் தனித்தன்மை மற்றும் தனித்துவம் இருந்தால் சிறப்பானதொரு லாபம் ஈட்ட முடியும்.
நாம் விற்கும் பொருட்கள் தரமானதாகவும் சிறப்பானதாகவும் இருந்தாலே வாடிக்கையாளர்கள் தொடர்ந்து நம்மை நாடி வருவார்கள். வாடிக்கையாளர்களின் ரசனைகள், நவீன டிரெண்டிங் குறித்து மட்டுமில்லாமல், ஆடைகளின் தரம் மற்றும் ஃபேஷன் குறித்தும் அறிந்திருப்பது அவசியம்’’ என்றவர், பொன் மகள், சிறந்த பெண் தொழில்முனைவோர் போன்ற விருதினை பெற்றுள்ளார்.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்
