நன்றி குங்குமம் தோழி
தையல் கலையை தொடர்ந்து அடுத்து பெண்கள் அதிகம் ஈடுபடும் தொழில் வயர் கூடை பின்னும் தொழில். இதனை கற்றுக்கொள்ள படிப்பு அவசியமில்லை என்பதால் 10ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் பலர் விரும்பி கற்கின்றனர். மாடர்ன் பிரின்ட் செய்த காகிதப் பைகள், துணி பைகள் மார்க்கெட்டில் கிடைத்தாலும் காய்கறி வாங்குவதற்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு தருவதற்கும் தாய்மார்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் வயர் கூடைகள்தான்.
காரணம், அதன் நீடித்த தன்மைதான். பிளாஸ்டிக் வயர் என்றாலும் இது மறு சுழற்சி செய்யக்கூடிய பொருள், எத்தனை முறை வேண்டும் என்றாலும் சுத்தம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ‘ஓல்டு இஸ் கோல்டு’ என்பது போல் வயர் கூடைகளின் தன்மையும் தேவையும் குறையவே இல்லை. சாதாரணமாக இரண்டு கைப்பிடிகள் வைத்தெல்லாம் பெண்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஹேண்ட்பேக் டிசைன்களில் டிரெண்டியாக வடிவமைத்து வருகிறார் ‘தாரா தி பேக் பொடிக்’ உரிமையாளர் நந்தினி விக்னேஷ்.
‘‘திருப்பூர்தான் என் சொந்த ஊர். திருமணத்திற்குப் பிறகு திருச்சியில் செட்டிலானேன். படிக்கும் காலத்திலேயே எனக்கு பிசினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனாலேயே வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் படிச்சேன். வீட்ல பாட்டி எப்பவும் வயர் கூடை, க்ரோஷா ஆடைகளும் பின்னுவாங்க. அவரிடம் தான் நான் வயர் கூடை பின்ன கற்றுக் கொண்டு, பொழுதுபோக்காக கூடை பின்ன ஆரம்பிச்சேன். பிளாஸ்டிக் பைகளுக்கு முன் துணி பை மற்றும் வயர் கூடைதான் மக்கள் பயன்படுத்தி வந்தாங்க.
அதன் பிறகு வயர் கூடை காணாமல் போனது. தற்போது மீண்டும் மார்க்கெட்டில் இடம் பிடித்துள்ளது என்று எனக்கு தெரிய வந்ததும் அதையே பிசினஸா செய்யலாம்னு எண்ணம் ஏற்பட்டது. கூடை பின்னுவதில் ஆர்வம் உள்ள பெண்களை சேர்த்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்தேன்’’ என்றவர், வயர் கூடை மட்டுமில்லாமல் சிறுவர், சிறுமிகளுக்கான ஆடைகளையும் வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார்.
‘நான் கூடை பின்ன தெரிந்த நபர்கள் மற்றும் என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் என 100 பெண்களை குழுவாக இணைத்து அவர்களிடமே கூடைகளைப் பின்னி வாங்கி விற்பனை செய்கிறேன். என் குழுவில் உள்ள பெண்கள் அனைவரும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதில் ஒரு சிலர் கணவனை இழந்தவர்கள். அவர்களுக்கு பொருளாதார ரீதியா முன்னேற இது மிகவும் உதவியா இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட பெண்கள் இருப்பதால், அவர்களை ஒரே இடத்தில் வைத்து வேலை வாங்க முடியாது. அதனால் அவர்கள் வீட்டில் இருந்தபடியே கூடைகளை பின்னி தர ஏற்பாடு செய்திருக்கிறோம். டிசைன்கள் மற்றும் மூலப்பொருட்கள் எல்லாம் கொடுத்துவிடுவதால், அவர்கள் வீட்டையும் கவனித்துக் கொண்டு வருமானம் ஈட்டுவது சுலபமாக இருக்கிறது’’ என்றவர், ஆன்லைன் மற்றும் சில்லறை வியாபாரமாகவும் கூடைகளை விற்பனை செய்து வருகிறார்.
‘‘என்னுடைய கடை திருப்பூரில் இருக்கிறது. நான் திருச்சியில் வசிக்கிறேன். அங்கிருந்துதான் என் கடையினை நிர்வகித்து வருகிறேன். திருப்பூரில் எங்களுக்கு சொந்தமான பண்ணை நிலம் உள்ளது. அங்குதான் என்னுடைய கடையினை அமைத்திருக்கிறேன். கூடை பின்ன பயன்படுத்தும் வயர்கள் அனைத்தும் உயர் ரகத்தில் மீண்டும் மறு சுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் வயர்களையே நான் பயன்படுத்துகிறேன். அதே போல் கூடைகளுக்கான கைப்பிடிகளும் தரமானது மட்டுமில்லாமல், பார்க்கும் போது ரிச் லுக் தரக்கூடியதைதான் உபயோகிக்கிறேன். வயர் கூடைகள் மட்டுமில்லாமல் மூங்கில் மற்றும் வாழைநாரிலும் கூடைகளை பின்னுகிறோம்.
இவை இரண்டுமே மதுரையில் இருந்து வாங்கி விற்கிறேன். காய்கறி கூடையில் துவங்கி சாப்பாடு பை, பிக்னிக் எடுத்து செல்லக்கூடிய கூடைகள், பெண்களுக்கான ஃபேன்சி பைகள், குழந்தைகள் பொம்மைகளை வைக்கும் டாய் ஸ்டோரேஜ் பேக் என 50 வகைகளில் கூடைகள் உள்ளன. எங்களுடைய லஞ்ச் பேக்குகள் ஸ்பெஷலானவை. குழந்தைகளுக்கு தேவையான தண்ணீர், ஜூஸ் மற்றும் டிபன் பாக்ஸ் வைக்க என தனித்தனி பிரிவுகளுடன் லஞ்ச் பேக் இருக்கும்.
அது தாய்மார்களை அதிகம் கவர்ந்தன. சில கூடைகள் மூடக்கூடிய அமைப்பில் இருக்கும். மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்களுக்கு இது மிகவும் சிறந்தது. மேலும், கைவேலைப்பாடுடன் கூடிய ‘கவுனா’ என்ற ஒருவகை புல்லினைக் கொண்டும், ‘மேக்ரமீ’ என்ற நூலால் ஆன கூடைகள் மற்றும் மரத்தாலான ஸ்டோரேஜ் கப்போடுகளும் எங்க கடையில் விற்பனைக்கு உள்ளது’’ என்றவர், ‘லிட்டில் தாரா கிட்ஸ் ஃபேஷன்’ பெயரில் குழந்தைகளுக்கான ஆடையகம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.
‘‘இங்கு பிறந்த குழந்தைகள் முதல் பத்து வயது வரை உள்ள ஆண், பெண் குழந்தைகளுக்கான ஆடைகள் உள்ளன. முழுக்க முழுக்க குழந்தைகளை எந்த வகையிலும் பாதிக்காத பருத்தி ஆடைகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்கிறேன். தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் அரசால் நடத்தப்படும் எக்ஸ்போக்களில் ஸ்டால் போடுவேன். திருச்சியிலும் கூடை கடையின் கிளையை ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது. எதிர்காலத்தில் அயல்நாடுகளுக்கும் விற்பனையை விரிவுபடுத்த திட்டமிட்டு இருக்கிறேன்.
அதற்கான லைசென்ஸ் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன். திருமணத்திற்குப் பிறகுதான் நான் சுயதொழிலில் என்னை ஈடுபடுத்த ஆரம்பித்தேன். அது பல வகையில் என்னுள் மாற்றத்தினை ஏற்படுத்தியது. என் கணவர் மற்றும் குடும்பத்தார் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. இன்றைய இளம் பெண்கள் திருமணத்தை தங்கள் முன்னேற்ற தடையாக பார்க்கிறார்கள். குடும்பம், பிசினஸ் இரண்டையும் பார்த்துக் கொள்வது சுமையல்ல… சாதிக்க வைக்கும் சுகமான சுமைதான்’’ என்கிறார் நந்தினி விக்னேஷ்.
செய்தி: கலைச்செல்வி
படங்கள்:எபினேசர்
