×

மார்கழி கோலமும் சிறப்பும்!

நன்றி குங்குமம் தோழி

மார்கழி மாதம் பனிக் காற்றில் உள்ள சுத்தமான ஓசோன் நம்மேல் பட்டு அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். அதனால்தான் பெண்கள் மார்கழி மாதம் காலையில் கோலம் போடுகிறார்கள். கன்னிப்பெண்கள் காலையில் எழுந்து, வாசலில் கோலமிட்டு, கோலத்தின் நடுவில் பரங்கி பூவை சாணியில் வைத்து விட்டு வாசலை அலங்கரிப்பதன் மூலம் அந்த வழியாக தெருவில் நடந்து செல்பவர்கள் இந்த வீட்டில் ஒரு கன்னிப்பெண் திருமணத்தை எதிர் நோக்கி இருக்கிறாள் என்பதை அறிவார்கள்.

வாசலில் சாணி தெளித்து கோலம் போடுவதால் கிருமிகள் வராது. கோலத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் கோலம் போடுவதன் மூலமாக மகாலட்சுமியை வரவேற்று இல்லத்தில் குடியிருக்கச் செய்கிறோம். கோலம் போடுவதால் மனதை ஒருமுகப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதால் உடலுக்கு யோகப் பயிற்சி பலனை பெண்களுக்கு தருகிறது. பெண்களுக்கு இடுப்பில் பலம் பிடிக்கவும், முதுகு வலி போன்ற பிரச்னைகள் வராதிருக்க எலும்பையும் நரம்பையும் பலப்படுத்துகிறது.கோலம் போடுவதால் விரல்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. கோலத்தினை மேற்கு திசையில் ஆரம்பிக்காமல் கிழக்கு திசையிலோ, வடக்கு திசையிலோ ஆரம்பிக்கலாம். தெற்கு திசையில் துவங்கவும் கூடாது. முடிக்கவும் கூடாது.

கோலம் போடும் பழக்கம் வேத காலத்தில் தொடங்கி இன்று வரை தொடர்கிறது. வளைந்தும் நெளிந்தும் போடப்படும் கோலங்கள் நம் வாழ்க்கை சுகமும் துன்பமும் ஆனது… அதை நாம் எப்படி நெளிவு சுளிவோடு எதிர்கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. அரிசி மாவில் கோலம் போடும் போது அதன் வெண்மை நிறம் பிரம்மாவையும், சுற்றிலும் இடும் காவி நிறம் சிவபெருமானையும் குறிக்கும். கோலத்தின் நடுவில் சாணம் வைத்து பரங்கி பூவைக்கும் போது மகாலட்சுமி மனம் மகிழ்ந்து வருவதோடு மகாவிஷ்ணுவும் சேர்ந்து நம் இல்லத்தை ஆசீர்வதிப்பார்.

கோலம் தீய மற்றும் துஷ்ட சக்திகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும்.கோலம் போடும் போது நம்முடைய உடலுக்கு பலவித நல்ல பயிற்சி தந்து உடலையும், உள்ளத்தையும் தருவதோடு மன மகிழ்ச்சியும் நிறைந்து பெண்களின் திறமைக்கு சான்றாக விளங்குகிறது. கோலங்கள் மார்கழியில் ஒவ்வொரு வீட்டு வாசலையும் அழகூட்டும் சின்னங்கள்.

தொகுப்பு: ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

Tags : Marghazi Golam ,Marghazi ,
× RELATED ‘அவதார் 3’ படத்தில் இந்தியப் பெண் கலைஞரின் பங்களிப்பு!