×

பழங்குடியின மக்களிடையே தலைதூக்கும் கல்வி!

நன்றி குங்குமம் தோழி

“எங்க பூதமலை கிராமத்திலிருந்து 4 கிலோ மீட்டர் நடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். சாய்வான இந்த மலைப்பகுதியிலிருந்து கீழே இறங்கித்தான் தினமும் பள்ளிக்கு சென்று வருவேன். கல்வியின் அவசியத்தை உணர்ந்ததால் தூரம் எனக்கு துயரமாக தெரியவில்லை” என்கிறார், பளியர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த வெண்மதி. இச்சமூகத்தின் முதல் பட்டதாரி இவர். பல சிரமங்களை கடந்து இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த வெண்மதி, ஆசிரியர் ஆக வேண்டுமென்கிற தன் கனவை நிறைவேற்ற தற்போது பி.எட் படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார்.

“ஐந்தாம் வகுப்பு வரை தினமும் மலையிலிருந்து இறங்கி வந்துதான் தொடக்கப்பள்ளியில் படித்தேன். மேலும், படிப்பைத் தொடர வேண்டுமெனில் 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பண்ணைக்காடுக்கு செல்லவேண்டும். எங்க பூதமலை கிராமத்தில் கல்வி கற்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒன்றிரண்டு சிறுவர்கள்தான் பள்ளிக்குச் செல்வார்கள். அதிலும் அதிகபட்ச கல்வியே ஐந்தாம் வகுப்பு வரை மட்டும்தான்.

மலையிலிருந்து இறங்கி வெகுதூரம் சென்று படிக்க சிரமமாக இருப்பதால் குழந்தைகள் யாரும் பள்ளிக்குச் செல்வதில்லை. இந்நிலையில் எனக்கு மேலும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. என் பெற்றோரும் என்னை ஆதரித்தனர். மேல்நிலை மற்றும் உயர்நிலை கல்வியை படிப்பதற்காக பண்ணைக்காட்டில் விடுதியில் தங்கி படித்தேன். விடுமுறை தினங்களில் மட்டுமே பூதமலைக்குச் செல்வேன். பள்ளியில் சக நண்பர்களும் ஆசிரியர்களும் என்னை ஊக்குவித்தனர்.

12ம் வகுப்பு முடித்த பிறகு என் கல்லூரிப் படிப்பை தொடர அரசுக் கல்லூரியில் பி.ஏ தமிழ் படிப்பை முடித்து, இளங்கலைப் பட்டம் பெற்றேன். பளியர் பழங்குடியின சமூகத்திலேயே முதல் பட்டதாரி நான்தான். எங்க ஊர் மக்களிடையே கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறி வருகிறேன். ஒரு சில குழந்தைகள் இப்போதுதான் பள்ளிக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இருப்பினும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை.

பெற்றோர்கள் அனுப்பினாலும் சில பிள்ளைகளுக்கு பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை. இதற்கு தூரமே காரணமாக இருக்கிறது. நான் படித்து ஆசிரியராகி எங்க ஊர் குழந்தைகளுக்கு கல்வியை கற்றுத்தர வேண்டும். கல்வியினால் நான் முன்னேற்றமடைந்துள்ளதை பார்த்து என் மக்கள் கல்வியின் அவசியத்தை உணர வேண்டும் எனும் இலக்கில் பி.எட் படிக்க தயாரான போது மேலும் படிக்க வைக்க பெற்றோரிடம் வசதியில்லை.

வழியறியாத நிலையில்தான் எனக்கு வில்லேஜ் பெல்ஸ் எனும் அமைப்பு பற்றி தெரிய வரவே அவர்களின் உதவியை நாடினேன். கெளதம் கண்ணன் மற்றும் நிவேதா இருவரும் எனக்கு உதவினார்கள். கல்லூரிப் படிப்பிற்கான எல்லா செலவுகளையும் ஏற்றனர். இப்போது முதலாமாண்டு பி.எட் படிப்பை படித்து வருகிறேன். எங்க பூதமலை கிராமத்தில் முறையான கழிப்பறை வசதி செய்துதர வேண்டும். மேலும் சாலை வசதி மற்றும் அடிப்படை கல்விக்கான வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் எனவும் அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் மாணவி வெண்மதி.

நிவேதா வெங்கடேசன் – கெளதம் கண்ணன் தம்பதி, வில்லேஜ் பெல்ஸ் (Village Bells) எனும் தொண்டு அமைப்பின் மூலம் பழங்குடியின மக்களிடையே கல்வியை ஊக்குவித்து வருகின்றனர். “பழனி அருகே ஆயக்குடியில் வசித்து வருகிறோம். சில வருடங்களுக்கு முன்பு சாலையோர மக்கள் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்குச் சத்தான உணவு வழங்க தொடங்கினோம். கோவிட் காலத்தில் தினை, சாமை போன்ற உயர்தர சிறுதானியங்கள் மற்றும் ஆடைகளை வழங்கி வந்தோம். பழனி அருகே குட்டிக் கரடு மலைக்கிராம மக்கள் ஏழு நாட்களாக வெறும் டீ மட்டுமே குடித்து வாழ்கின்றனர் என்கிற செய்தியை அறிந்து உதவ சென்றோம். பழனி, திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றிலும் உள்ள மலைக் கிராமங்களுக்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டோம். இங்குள்ள பழங்குடி மக்கள் கல்வி கற்பதே மிகவும் அரிது.

பழங்குடியின மக்களிடையே கல்வியை ஊக்குவிக்கலாம் எனும் முயற்சியில் அவர்களை அணுகிய போது யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஒரு சில குழந்தைகளே பள்ளிக்கு சென்று வந்தனர். காவல்துறையினர், சில அதிகாரிகளின் உதவியுடன் மலைக் கிராமங்களில் விழிப்புணர்வுக்கான பல நிகழ்ச்சிகளை நடத்தியும் அவர்களிடையே எந்த மாறுதல்களும் இல்லை. சிரமங்களை கடந்து படித்து உயர்ந்த குழந்தைகள் சொன்னால் நிச்சயம் அவர்களிடம் கொஞ்சமாவது மாற்றம் ஏற்படலாம் என்று நம்பினோம்.

பெற்றோர் அல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குழந்தைகளின் கல்விக்கு உதவினோம். மேலும், இந்த சேவையை தொடர வில்லேஜ் பெல்ஸ் எனும் அமைப்பினை தொடங்கி இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயில்கின்றனர். சுரேன் குமார் என்ற மாணவர் கல்லூரிப் படிப்பை முடித்து ஆண்டுக்கு 12.5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலையில் சேர்ந்துள்ளார். தருண்யா எனும் மாணவி முன்னணி தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். அக் ஷயா எனும் மாணவி அக்கவுன்டன்ட் ஆக வேலை செய்கிறார். இந்த வருடத்தில் மட்டும் 5 பேர் படித்து முடித்து வேலையில் சேர்ந்துள்ளனர்.

இது போன்று கல்வி கற்று முன்னேறிய மாணவர்கள் மலைக்கிராமங்களுக்கு தன்னார்வலர்களாக வந்து பழங்குடியின மக்களிடம் கல்வியின் அவசியத்தை உணர்த்துகின்றனர். இதனால் ஒரு சில மாணவர்கள் கல்வி கற்க ஆர்வம் காட்டினர். பெற்றோர்களும் விழிப்புணர்வடைந்து வருகின்றனர். போலூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த பவானி மற்றும் புவனேஸ்வரி இருவரும் பி.ஏ. தமிழ் பயின்று வருகின்றனர். பாலமலைக் கிராமத்தைச் சேர்ந்த ராணி 12 ஆம் வகுப்பில் 501 மதிப்பெண்கள் பெற்று, தற்போது பி.ஏ. வரலாறு படித்து வருகிறார்” என்ற நிவேதாவை தொடர்ந்தார் கெளதம்.

“பூதமலை என்கிற மலைக் கிராமத்தைச் சேர்ந்த வெண்மதி பள்ளிக்குச் செல்ல 40 முதல் 60 டிகிரி சரிவான பாதையில் நடக்க வேண்டும். விலங்குகளின் அச்சுறுத்தல் மற்றும் கடினமான பாதையினால் பல குழந்தைகள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். ஆனால், இந்தத் தடைகளைத் தாண்டி வெண்மதி 12ம் வகுப்பு முடித்து, பி.ஏ. தமிழ் பயின்றுள்ளார். தற்போது அவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள பெண்களுக்கான கல்லூரியில் பி.எட் பயில நிதியுதவி செய்துள்ளோம்.

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டப் பளியர் பழங்குடியின சமூகத்தில் இதுவரை யாரும் 12ம் வகுப்புக்கு மேல் படித்து அரசு வேலைக்குச் சென்றதில்லை என்ற நிலையில், வெண்மதியின் கல்வி ஒரு மிகப்பெரிய மைல் கல்லாகும். நான் பல மலைக் கிராமங்களுக்குச் சென்று, அங்கு மக்களோடு மக்களாக பழகி, அவர்களுக்கான உதவிகளை செய்து, கல்வி குறித்து பேசி வருகிறேன். அவர்களை அணுகுவது மிகவும் கடினம். நிலம் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் இம்மக்களுக்கு வெறும் 200 ரூபாய் கூலி கொடுத்து அடிமைகளாக வைத்திருப்பார்கள். அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவித்துள்ளனர். இதனால் அங்குள்ள சிறுவர்களும் இளைஞர்களும் கல்வியை மறுக்கின்றனர்.

பளியர் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பட்டதாரியாக ஜொலிக்கும் வெண்மதியின் முன்னேற்றத்தை கண்டு மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகள் கல்வி பயில வேண்டும். அவர்களிடையே கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய இலக்கு” எனும் கௌதம், மூளைக்கட்டி பாதிப்பிலிருந்து மீண்டவர். தீவிர அறுவை சிகிச்சைக்குப் பிறகு கேட்டல், பார்வையில் சிறிது சிரமங்களை சந்தித்தாலும், தனது மனைவியின் வழிகாட்டுதலோடு தொடர்ந்து பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகக் களப்பணி ஆற்றி வருகிறார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

Tags : Saffron ,Mudamalai ,
× RELATED ‘அவதார் 3’ படத்தில் இந்தியப் பெண் கலைஞரின் பங்களிப்பு!