×

‘அவதார் 3’ படத்தில் இந்தியப் பெண் கலைஞரின் பங்களிப்பு!

நன்றி குங்குமம் தோழி

திரைப்படம் ஒன்றை சிறப்பானதாக ஆக்குவது எது? திரைக் கதையா? கதையின் கதாபாத்திரங்களா? கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள், நடிகையரா? வசனங்களா? ஒளி மற்றும் ஒலிப்பதிவா? பாடல்களா? இவ்வாறு கேள்விகளை கேட்டுக் கொண்டே ேபாகலாம். ஒரு படத்தைப் பார்க்கும்போது, நம் நிர்வாணக் கண்ணால் தவிர்க்க முடியாத ஒரு அம்சம், படத்தின் கலை இயக்கம்.  திறமையான தயாரிப்பு டிசைனர் அல்லது வடிவமைப்பாளர் இல்லாமல் திரைப் ப ட ங்கள் அகலத்திரையில் காவியம் ஆவதில்லை.

திரைப்படம் என்பது காட்சி கதை சொல்லலின் மொழி. கேமராவுக்கு முன் நடிகர்கள் முதல் அரங்குகள், உடைகள், பொருட்கள், விளக்குகள் என அனைத்தும் நடிக்கின்றன. கதாசிரியரின் கற்பனை மற்றும் இயக்குநரின் பார்வை ஒருங்கிணைந்து தயாரிப்பாளருக்கு மன நிறைவு தரும் விதமாக படத்தை ஒழுங்குபடுத்துவதுதான் திரைப்பட வடிவமைப்பாளரின் வேலை. அதைத்தான் ஆஷ்ரிதா காமத் கடந்த பத்தாண்டுகளாகச் செய்துவருகிறார்.

அவதார் இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்தின் கலை இயக்குநரான ஆஷ்ரிதா காமத்தின் காட்சி அமைப்புகள் உலக ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. சர்வதேச தர படங்களான அவதார் தொடர்களில் இந்தியப் பெண் கலைஞரின் பங்களிப்பு இருப்பது இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் விஷயம்தானே!

பானு அதையா ‘காந்தி’ படத்தில் ஆடை வடிவமைப்பிற்காக ஆஸ்கர் விருது பெற்றார். பெர்ஸிஸ் கம்பாட்டா, பிரெய்டா பின்டோ, பிரியங்கா சோப்ரா, தீப்தி படுகோன் போன்றோர் ஹாலிவுட் படங்களில் நடிக்க மீரா நாயர் உண்டா பங்களிப்பு செய்தார். அந்த வரிசையில் இப்போது ஆஷ்ரிதா காமத் இடம் பிடித்திருக்கிறார்.

‘‘திரைப்படத் துறையில் எனது முதல் வேலை ‘வெஸ்ட் இஸ் வெஸ்ட்.’ அதில் கலைத்துறை உதவியாளராக வேலை பார்த்தேன். இது ‘ஈஸ்ட் இஸ் ஈஸ்ட்’ என்ற பிரபலமான பிரிட்டிஷ் படத்தின் தொடர்ச்சியாகும். இந்தப் படத்திற்காக நாங்கள் இந்தியாவின் வடமேற்கில் உள்ள ஒரு கிராமத்தில் படப்பிடிப்பை நடத்தினோம். எனக்கு உள்ளூர் மொழி தெரியாது. எப்படியோ சமாளித்தேன். நான் திரைப்பட வடிவமைப்பாளராக இருந்தாலும், ஓய்வு நேரத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான மண் பாண்டங்களை வடிவமைப்ேபன். நீண்ட தூரம் நடைப்பயணம் செல்வதும் எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் பணியாற்ற வாய்ப்புகள் கிடைத்து வருவதால் வாழ்க்கையை நினைத்தபடி வாழ முடிகிறது.

2011ல், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிரபல AFI கன்சர்வேட்டரியில் பயிற்சி பெற விண்ணப்பித்தேன். திரைப்படம் குறித்து ‘அ’ முதல் ‘ஃ’ வரை சொல்லிக் கொடுக்கும் கல்லூரி அது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எனது பணியை அங்கீகரிக்கும் விதமாக, 2012ல் ‘டாம் யோடா’ உதவித்தொகை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து படங்களில் பணிபுரிய வாய்ப்புகள் கிடைத்தன. நான் சிறுமியாக இருந்த போது, கிராஃபிக் டிசைனரான என் அம்மா எனக்கு முன்மாதிரியாக அமைந்தார். பல்வேறு வடிவங்களில் அவரது படைப்புகள் அழகியலை வெளிப்படுத்தின. நிறம் மற்றும் வடிவத்தை அம்மா கையாளும் நேர்த்தியை நான் ஆர்வத்துடன் பார்த்து ரசித்திருக்கிறேன். படைப்பாற்றலை எனக்குள் வளர்த்து, நானே சிந்திக்கக் கற்றுக் கொடுத்த சூழல்களில் வளரும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.

தொடக்கத்தில் சென்னையில் உள்ள பள்ளியில் படித்தேன். அதன் பிறகு ஆந்திராவில் நுண்கலை குறித்து பயின்றேன். உலகம் முழுவதிலுமிருந்து கிளாசிக் திரைப்படங்களை பார்க்க பள்ளி திரைப்படக் குழுவில் சேர்ந்தேன். அது நாடகத்திலும் எனக்கு ஆர்வத்தைத் தூண்டியது. ஒவ்வொரு வாரமும் ஒரு திரைப்படம் பார்க்கும் வாய்ப்பும் அது குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால் திரைப்படங்களுடன் நெருக்கம், புரிதல் ஏற்பட்டது. நான் அங்கு படித்த காலகட்டத்தில் பல நாடகங்களுக்கான செட்களை வடிவமைத்தேன். இப்போது திரும்பிப் பார்க்கும் போது, ஒரு கதையைச் சொல்ல உதவும் இடங்களை வடிவமைப்பதில் எனக்கு முதன்முதலில் ஆர்வம் உள்ளது என்பதை புரிந்து கொண்டேன்.

பள்ளிப் படிப்பை முடித்ததும், கல்லூரியில் சமூகவியல் படிக்க மும்பைக்குச் சென்றேன். பாலிவுட்டின் இதயமாக இருந்த மும்பை நகரத்தில் இந்தியத் திரைப்படங்களின் கவர்ச்சிகரமான உலகத்தை அறிந்து கொள்ள முடிந்தது. கல்லூரிக்குப் பிறகு, நான் ஒரு விளம்பரத் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினேன். அங்கு ஒருங்கிணைந்த விளம்பரத்தை உருவாக்கும் பொறுப்பினை ஏற்றேன். தயாரிப்பு வடிவமைப்பாளர் ஆராதனா சேத்தை நான் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்காக ‘வெஸ்ட் இஸ் வெஸ்ட்’ படத்தில் பணியாற்றினேன். தொடர்ந்து ஜிந்தகி நா மிலேகி துபாரா படத்தில் பணிபுரிந்தேன். இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியும் வித்தியாசமாக இருக்கும்.

நான் இதர மாணவர்களுடன் பணியாற்றிய ‘இன்டர்ஸ்டேட்’ என்ற திரைப்படத்திற்காக மாணவருக்கான ஆஸ்கர் விருது பிரிவில் மாணவர் அகாடமி விருது எங்களுக்கு வழங்கப்பட்டது.  ‘இன்டர்ஸ்டேட்’ படத்தைத் தொடர்ந்து ‘டஸ்ட்லேண்ட்’ படத்திலும் பங்காற்றினேன். விமர்சன ரீதியான பாராட்டுகளை ‘டஸ்ட்லேண்ட்’ பெற்றுத் தந்தது. இந்தக் காலகட்டத்தில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் நீண்டகால தயாரிப்பு வடிவமைப்பாளரான ரிக்கார்ட்டர், ஜிம்பிசெல், ஷரோன் செய்மோர் போன்ற திரையுலக ஜாம்பவான்களிடம் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்’’ என்றவர், தற்போது கணவர் ஃபர்ஹாத் அகமது டெல்வியுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருகிறார். ஃபர்ஹாத் ஒளிப்பதிவாளர், நாடகத் திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் இசை வீடியோக்களுக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.”

தொகுப்பு: கண்ணம்மா பாரதி

Tags : Kungumam Dozhi ,
× RELATED மார்கழி கோலமும் சிறப்பும்!