நன்றி குங்குமம் தோழி
உலக ஃபேஷன் துறையில் புதிய நட்சத்திரமாக ஜொலிக்கிறார் இளம் ஆடை வடிவமைப்பாளர் மேக்ஸ் அலெக்ஸாண்டர் (Max Alexander). தற்போது ஒன்பது வயதாகும் மேக்ஸ், தன் அபார திறமையால் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து, மிக இளம் வயதிலேயே ரன்வே ஃபேஷன் ஷோ நடத்தி, உலகின் இளைய ரன்வே ஃபேஷன் டிசைனர் (Youngest runway fashion designer) என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மேக்ஸ் தையல் கற்றுக்கொள்ள தொடங்கிய போது அவருக்கு வயது நான்கு. மற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் வயதில் அவர் துணிகள், வடிவமைப்புகள், நிறங்களின் கலவைகள் குறித்து ஆழமாக ஆராய்ந்து, தனித்துவமான ஆடைகளை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார். மேக்ஸின் ஆர்வத்தை பெற்றோரும் ஆதரிக்கவே ஆடை வடிவமைப்பில் ஒவ்வொரு நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு செயல்பட தொடங்கியுள்ளார்.
தன் ஒன்பது வயதில் உலக மேடையில் அடையாளம் காணப்படும் நிலைக்கு உயர்ந்துள்ள மேக்ஸ், கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தவர். மிக இளம் வயதில் சொந்தமாக ஆடைத் தொகுப்பை வடிவமைத்து, ரன்வே ஷோவில் அறிமுகப்படுத்தியவர் என்ற சாதனை அவருக்குக் கிடைத்துள்ளது. லண்டன் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற பல முக்கிய ஃபேஷன் நிகழ்ச்சிகளில் தனது படைப்புகளை வெளியிட்டு கவனம் ஈர்த்தார்.
மேக்ஸ் தயாரிக்கும் ஒவ்வொரு ஆடை வடிவமைப்பும் பிரபலமான ஃபேஷன் நிபுணர்கள் மற்றும் ஊடகங்களின் பாராட்டுகளை பெறுகின்றன. ஆடைகளில் தனித்துவமான அடையாளங்களை சேர்க்கும் மேக்ஸின் வடிவமைப்புகள், வயதை மீறிய கலைநயத்தையும் முதிர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன. நவீன வடிவமைப்பு, பொருத்தமான நிறத் தேர்வு, ரன்வே நிகழ்ச்சிக்கு ஏற்ற கட்டமைப்பு, உயர்தரமான ஃபேஷன் உணர்வு என அனைத்தும் ஒருங்கிணைந்து ஒவ்வொரு ஆடையும் ஒரு கதையைச் சொல்லும் விதமாக வடிவமைக்கப்படுவது மேக்ஸின் தனிச்சிறப்பாகும்.
மேக்ஸ் அலெக்ஸாண்டர் இன்று ஒரு ஃபேஷன் டிசைனர் மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான ஊக்கமாகத் திகழ்கிறார். கனவும் முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு மேக்ஸ் ஓர் உதாரணம். தனது இளம் வயதிலேயே உலக ஃபேஷன் துறையில் தனி முத்திரைப் பதித்துள்ள மேக்ஸ், எதிர்காலத்தில் உலகின் முன்னணி ஃபேஷன் டிசைனர்களில் ஒருவராக உருவெடுக்க வாழ்த்துவோம்.
தொகுப்பு: ஆர்.ஆர்
