×

யாருடைய உத்தரவின் பேரில் அடுத்தடுத்த திருப்பங்கள்; குஜராத் ஐஏஎஸ் அதிகாரிக்கு நேர்ந்த அநீதி: அமலாக்கத்துறை நடவடிக்கையில் எழும் பலத்த சந்தேகம்

 

அகமதாபாத்: குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர் ராஜேந்திரகுமார் படேல். 2015ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், அடிப்படையில் ஒரு பல் மருத்துவர் ஆவார். இவர் நிலப் பயன்பாட்டு மாற்றத்திற்கான அனுமதியைத் துரிதப்படுத்த லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் இவரை கடந்த 2ம் தேதி கைது செய்தனர். அவர் 48 மணி நேரத்திற்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்டிருந்ததால், அகில இந்தியப் பணிகள் விதிகளின்படி அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்தே பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகக் குஜராத் அரசின் பொது நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.

ஆனால், ஒரு ஐஏஎஸ் அதிகாரியை ஒழித்துக்கட்ட அரசு இயந்திரம் இவ்வளவு வேகமாகச் செயல்பட்ட விதம் தான் தற்போது தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 23ம் தேதி சுரேந்திரநகர் துணை வட்டாட்சியர் சந்திரசின் மோரி என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது 67.50 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும், ஆட்சியருக்கும் இதில் பங்கு இருப்பதாகவும் மோரி கூறியதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. பொதுவாக ஒரு ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் லஞ்ச ஒழிப்புத்துறை, விழிப்புணர்வு ஆணையர், தலைமைச் செயலாளர் மற்றும் முதலமைச்சர் எனப் பல்வேறு நிலைகளில் ஒப்புதல் பெற வேண்டும்.

இதற்குச் சுமார் ஓராண்டு வரை காலதாமதம் ஆகும். ஆனால், துணை வட்டாட்சியர் வீட்டில் சோதனை நடந்த அன்றைய தினமே (டிசம்பர் 23) அமலாக்கத்துறை, குஜராத் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதம் கிடைத்த 12 மணி நேரத்திற்குள், எவ்வித அடிப்படை விசாரணையோ அல்லது விரிவான விசாரணையோ இல்லாமல், அடுத்த நாளே (டிசம்பர் 24) ஆட்சியர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட ரீதியாகப் பார்க்கும்போது இந்த நடவடிக்கையில் பெரிய ஓட்டை இருப்பது தெரியவருகிறது. அமலாக்கத்துறை முதலில் ‘ECIR/HIU-11/42/2025’ என்ற வழக்கின் அடிப்படையிலேயே துணை வட்டாட்சியர் வீட்டில் சோதனை நடத்தியது.

ஆனால், இந்த முதல் வழக்கிற்கான அடிப்படை ஆதாரம் (எப்ஐஆர்) என்ன என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. குஜராத் லஞ்ச ஒழிப்புத்துறை டிசம்பர் 24ம் தேதி ஆட்சியர் மீது வழக்குப்பதிவு செய்த பின்னரே, அதனை அடிப்படையாகக் கொண்டு ‘ECIR/HIU-11/43/2025’ என்ற புதிய வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. அதாவது, எந்த அடிப்படை வழக்கை வைத்து சோதனை நடத்தினார்களோ, அது செல்லாது என்பதால், அவசரமாகப் புதிய வழக்கை உருவாக்கி ஆட்சியரைக் கைது செய்துள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், ஆட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ரகசிய உத்தரவு உடனடியாகத் தனியார் செய்தி நிறுவனத்திற்குக் கசிய விடப்பட்டுள்ளது.

ஒரு இளம் ஐஏஎஸ் அதிகாரியைச் சிக்க வைப்பதற்காகவேத் திட்டமிட்டு ‘ஒன்றிய அரசின்’ முகமையின் டெல்லி தலைமை அலுவலகம் இவ்வளவு ஆர்வம் காட்டியதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அமலாக்கத்துறை எழுதிய ரகசிய கடிதமும், அதன் மீது குஜராத் மாநில அரசும், லஞ்ச ஒழிப்புத்துறையும் காட்டிய வேகம் அசாதாரணமானது என்பதால், ராஜேந்திரகுமார் படேலுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் கருதுகின்றனர்.

Tags : Gujarat ,IAS ,Ahmedabad ,Rajendra Kumar Patel ,Surendranagar, Gujarat ,Patch ,
× RELATED இந்திரா காந்தி- மோடி வித்தியாசத்தை...