தருமபுரியில் மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்ததால் தனித்துவிடப்பட்ட 2 குட்டி யானைகள் இருக்கும் இடம் கண்டுபிடிப்பு

தருமபுரி: தருமபுரியில் மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்ததால் தனித்துவிடப்பட்ட 2 குட்டி யானைகள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது. 20 நாட்களாக வனத்துறையினர் தேடி வந்த நிலையில், தருமபுரி கிருஷ்ணகிரி எல்லையில் உள்ள பெட்டமுகிலாளம் வனப்பகுதியில் இரு யானைகள் ஆரோக்கியமாக சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 8ம் தேதி பாலக்கோடு அருகே மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்தன. தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உணவு தேடி வந்த ஒரு ஆண் யானை, 2 பெண் யானைகள், 2 குட்டி யானை என 5 யானைகள் கடந்த ஒரு மாதமாக சுற்றி வந்தன. இவை இரவு நேரங்களில் விளைநிலங்களுக்கு சென்று பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வந்தன.

இந்நிலையில், மாரண்டஹள்ளி அடுத்த காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் (50), 2 ஏக்கர் நிலத்தில் சோளம், ராகி சாகுபடி செய்துள்ளார். யானை, காட்டுப்பன்றிகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற சுற்றிலும்  மின்வேலி அமைத்திருந்தார்.  இதற்காக அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்சாரத்தை திருட்டுத்தனமாக எடுத்திருந்ததாக தெரிகிறது.

இதனிடையே அந்த பகுதியில் சுற்றித்திரிந்த 5 யானைகளும் இரவு 12 மணியளவில் முருகேசனின் விளைநிலத்திற்கு வந்துள்ளது. அப்போது மின்வேலியில் சிக்கியதில் 2 பெண் யானைகள், ஒரு ஆண் யானை மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்து உயிரிழந்தன. 2 குட்டி யானைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

தகவலறிந்து பாலக்கோடு வனத்துறையினர் யானைகளின் உடல்களை மீட்டு, சட்டவிரோதமாக மின்கம்பி அமைத்த முருகேசனை கைது செய்தனர். அப்பகுதியில் பொதுமக்கள் கூடியவுடன் அவை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று புதரில் பதுங்கி கொண்டன. 2 குட்டி யானைகளையும் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இதையடுத்து தனித்துவிடப்பட்ட குட்டி யானைகளை 20 நாட்களாக வனத்துறையினர் தேடி வந்த நிலையில், தருமபுரி கிருஷ்ணகிரி எல்லையில் உள்ள பெட்டமுகிலாளம் வனப்பகுதியில் இரு யானைகளும் ஆரோக்கியமாக சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: