பாஜ கூட்டணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்மு வேட்பு மனு தாக்கல் செய்தார்: பிரதமர் மோடி முன்மொழிந்தார்

புதுடெல்லி:பாஜ கூட்டணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி  முர்மு, இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு பிரதமர் மோடி முன்மொழிந்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில், பாஜ  தலைமையிலான தே.ஜ. கூட்டணி சார்பில்  ஒடிசாவை சேர்ந்த பழங்குடி பிரிவை சேர்ந்த பாஜ பெண் தலைவர் திரௌபதி  முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர்  யஷ்வந்த் சின்கா களமிறங்குகிறார். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 29ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள்.

இந்நிலையில், பாஜ வேட்பாளர் முர்மு, இன்று தனது  வேட்புமனுவை தாக்கல் செய்ய நேற்று புவனேஸ்வரில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தார். அவரை அம்மாநில பாஜ தலைவர் ஆதேஷ் குப்தா, எம்.பி. மனோஜ் திவாரி, டெல்லி  சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் பிதுரி உட்பட பல பாஜ  தலைவர்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர். பின்னர், அவர் ஒடிசா பவனுக்கு சென்றார். முர்முவின் வேட்பு மனுவை  முன்மொழியும் பிரதமர் மோடி, மூத்த ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, பிரகலாத் ஜோஷி, பாஜ தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பல அமைச்சர்கள், பாஜ தலைவர்கள், பிரகலாத் ஜோஷி வீட்டில் வேட்பு மனுவில் கையெழுத்திட்டனர்.

இதற்கிடையே, தற்போது இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் ஆதரவு கோரி ஜேபி.நட்டா நேற்று பேசினார். இதைத் தொடர்ந்து, முர்முவுக்கு தனது பிஜு ஜனதாதளத்தின் ஆதரவை தெரிவித்த பட்நாயக், ஒடிசா மாநில பழங்குடியினர் மற்றும் பட்டியல் பிரிவினர் மேம்பாட்டு அமைச்சர் ஜெகநாத்  சரகா, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர்  துகுனி சாஹூ ஆகியோர் டெல்லிக்கு சென்று ஒடிசா பவனில் முர்முவை சந்தித்து, வேட்புமனுவை வழிமொழிந்து  கையெழுத்திட்டனர்.

இதற்கிடையில், நேற்று பிரதமர் மோடியை முர்மு சந்தித்து பேசினார்.தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் பாஜ மூத்த தலைவர்களையும் முர்மு சந்தித்தார். மேலும், முர்முவுக்கு பாஜ தலைமையிலான தே.ஜ. கூட்டணியில்  இடம் பெற்றுள்ள கட்சிகள் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளின் அணியில் உள்ள கட்சிகளும், பழங்குடியின இடத்தை சேர்ந்த இதர கட்சி எம்பி.க்களும் கட்சி பாகுபாடின்றி ஆதரவு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா  பானர்ஜி எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்டிய போது, முதலில் ஆதரவு தெரிவித்த கட்சிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் ஒன்று. தற்போது, தனது மாநிலத்தில் ஆளுநராக இருந்த காரணத்தினாலும், பழங்குடியின பிரிவை சேர்ந்த பெண் என்பதாலும் முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு இக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஹேமந்த் சோரன் தள்ளப்பட்டுள்ளார். இதனால், இவருடைய கட்சியும் முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தொடர்ந்து, மேலும் பல கட்சிகளின் ஆதரவு எதிரணியில் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணி முதல் 12 மணி ராகு காலம் என்பதால் அதற்கு முன்பாக காலை 10 மணிக்கே ஒடிசா பவனில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய முர்மு புறப்பட்டார். பாராளுமன்ற மாநிலங்களவை செயலகத்துக்கு வந்த அவர், பகல் 12.48 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். பொதுவாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரின் வேட்பு மனுவை தலா 50 எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும். முதலில் பிரதமர் மோடி, முர்முவின் வேட்பு மனுவை முன்மொழிந்தார். அப்போது அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், ஜே.பி.நட்டாமற்றும் பலர் உடனிருந்தனர்.அதைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள், மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முன்மொழிந்தனர். தமிழகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தம்பிதுரை பங்கேற்றனர்.

Related Stories: