மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு பட்டாசு விலை 40% உயர்வு: சிவகாசி வியாபாரிகள் கலக்கம்

சிவகாசி: சிவகாசியில் பட்டாசு விலை இந்தாண்டு 40 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1,100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. சுமார் 8 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆலைகளில் தற்போது பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டாசு மூலப்பொருட்களான அலுமினிய பவுடர், சிகப்பு உப்பு, வெடி உப்பு, சல்பர் போன்ற பொருட்களின் விலை மற்றும் அட்டைப்பெட்டி, காகிதங்கள் போன்றவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் இந்தாண்டு 40 சதவீதம் வரை பட்டாசுகளின் விலையை உயர்த்தியுள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்தாண்டு பட்டாசின் விலையில் 40 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ரூ.100க்கு விற்கப்பட்ட பட்டாசு, தற்போது ரூ.150 வரை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி நேரத்தில் பட்டாசு விலை மேலும் உயரக்கூடும் என்பதால், வடமாநில வியாபாரிகள் கடந்த ஜனவரி மாதம் முதலே பட்டாசுகளை வாங்க துவங்கி விட்டனர். சிவகாசி பகுதியில் ஆகஸ்ட் முதல் தீபாவளி பட்டாசு விற்பனை துவங்குவது வழக்கம். இந்தாண்டு பட்டாசு விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.விற்பனையில் பாதிப்பு:சிவகாசியில் மலிவு விலையில் பட்டாசு கிடைக்கும் என்பதால் சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தீபாவளி பண்டிகை நேரத்தில் பட்டாசு வாங்கி செல்வது வழக்கம்.

இவர்களுக்கு பட்டாசு கடைகளில் 50 முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வியாபாரிகள் பட்டாசு விற்பனை செய்வர். இந்த ஆண்டு பட்டாசு விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என வியாபாரிகள் அஞ்சுகின்றனர்.பட்டாசு வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘20 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு இந்தாண்டு உள்ளது. மக்கள் விரும்பி வாங்கும் சரவெடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தும் புஸ்வாணம், கம்பி மத்தாப்பு போன்ற வெடிகளை விற்கக்கூடாது என அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் இந்தியா முழுவதிலும் பட்டாசு விற்பனை கடும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்படும்’’ என்றார்.

Related Stories: